நடப்பு பசலியில், காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. விவசாயிகள் ஆர்வமாக விவசாயப் பணிகளை துவங்கினார்கள். குறுவை சாகுபடியில் மட்டும் 6.2 லட்சம் டன் விளைச்சல் கண்டதாக வேளாண்துறை கூறியது. ஆனால் இதனால் விவசாயிகள் பலன் அடைய முடியவில்லை. குறுவை நெல்லை விற்பனை செய்வதற்கு விவசாயிகள் படாதபாடுபட்டனர்.
அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களை காலத்தில் துவங்கவில்லை. துவங்கிய பிறகும் சாக்கு தர மறுத்தது. ஈரப்பதம் பார்த்தது என விவசாயிகளை அலைக்கழித்தன. கொள்முதல் நிலையங்கள், விவசாயிகள் நலன்களை புறக்கணித்ததால், தனியார் முதலாளிகளுக்கு குறைந்த விலைக்கு நெல்லை விற்றனர். விவசாயிகளிடம் வாங்கிய நெல்லை வியாபாரிகள் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து விற்றதும், அதனை அதிகாரிகள் கொள்முதல் செய்ததும், சகிக்க முடியாத ஊழல் நடவடிக்கையாகும்.
சம்பா சாகுபடியும் தீவிரமாக நடைபெற்றது. இந்தாண்டு வாங்கிய கடனை கொடுத்து விடலாம். ஓரளவு நமது வாழ்க்கைப்பாட்டை பாதுகாக்கலாம் என்ற விவசாயிகளின் எண்ணம் கானல் நீரானது. பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்’ என்ற சொலவடை விவசாயிகளுக்கு தான் முற்றிலும் பொருந்துகிறது. விவசாயி வாழ்வை மழை பெய்து கெடுக்கும் அல்லது பெய்யாது கடந்த நவம்பர் மாதம் கடைசியில் தாக்கியது நிவர் புயல் மழை. டிசம்பர் மாதம் துவக்கத்தில் உருவானது புரவி புயல். அதை அடுத்து வந்த தொடர் மழையும் காவேரிப் படுகை விவசாயிகளை கவலையிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. உற்சாகமாக கொண்டாடும் உழவர் திருநாள் நிம்மதியற்றதாக மாறியது.
நிவர் புயல் சேதாரத்தை பார்வையிட்ட தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார். தமிழக அரசே 5.60 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்ச்சேதம் என அறிவித்தது. விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் ரூ. 600-ம், ஹெக்டேருக்கு ரூ. 20,000- இழப்பீடும் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார். கணக்கெடுப்புப் பணிகள் நடப்பதாகவும் கூறினார். ஆனால், விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் முழுமையாக வழங்கப்படவுமில்லை. அறிவித்தபடியும் கொடுக்கவில்லை. இப்பணி அரையும் குறையுமாக இருக்கும்போதே, அடுத்த பேரிடியாய் விவசாயிகள் மீது விழுந்த பருவம் தவறி உருவான புரவிப் புயலும், தொடர் மழையும் விவசாய பயிர்களை, விளைந்த நெற்கதிர்களை புஞ்சைப் பயிர்களை பெரும் நாசம் செய்தது.
டெல்டா மாவட்டங்களில் மட்டும் 2 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு மேல் தண்ணீரில் மூழ்கின. 3.50 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டன. விவசாயத் தொழிலாளர்கள் இரண்டு மாதங்களுக்கு மேல் வேலையின்றி சிரமத்திற்குள்ளானார்கள். கிராமப்புறங்களில் கூரை வீடுகள் சேதமடைந்தன. அரசு கட்டித் தந்த தொகுப்பு வீடுகளும் சேதமுற்றன. இதற்கான அரசின் நிவாரண அறிவிப்பும், செயல்பாடும் எந்த வகையிலும் விவசாயிகளை பாதுகாக்காது என்பது மட்டுமல்ல, போதுமானதும் அல்ல. டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அரசு இயற்கை பேரிடராக கருதி உரிய நிவாரணங்களை உடன் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க கோரி விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் போராடி வருகின்றன. இதர காவேரி படுகை மாவட்டங்களிலும் தொடர் இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விவசாயிகளை, கிராமப்புற மக்களை பாதுகாக்க அனைத்து விவசாய நிலங்களுக்கும் ஏக்கருக்கு ரூ.30,000- இழப்பீடு வழங்க வேண்டும். காப்பீடு இழப்பீட்டுத் தொகை முழுமையாக கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும். நிலக்கடலை, உளுந்து, எள் போன்ற புஞ்சை பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இடிந்த வீடுகளை அரசே கட்டித்தர வேண்டும். சேதமடைந்த தொகுப்பு வீடுகளை அரசே பழுது பார்த்து தரவேண்டும். வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10, 000- நிவாரணம் வழங்கிட வேண்டும். விவசாயிகள் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.தஞ்சை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 30.12. 2021 அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது. கலங்கி நிற்கும் காவேரிப்படுகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களைப் பாதுகாக்க அரசு எந்த தயக்கமும் இன்றி முன்வர வேண்டும்.
கட்டுரையாளர் : தஞ்சை இரா.மனோகரன்