articles

img

பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாநாடு - பெ.சண்முகம்

பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாநாடு - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டை நடத்தும் பொறுப்பை கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழு ஏற்றுக் கொண்டது. 2025 ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை மதுரையில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. ஏற்கனவே 1953, 1972 ஆகிய ஆண்டுகளில் அகில இந்திய மாநாடு நடைபெற்ற அதே தமுக்கம் மைதானத்தில் நடத்துவது என்று முடிவெ டுத்தது மற்றொரு சிறப்பு. மாநாட்டை சிறப்புடன் நடத்திட வரவேற்புக்குழுவுடன் 30க்கும் மேற்பட்ட தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டன.  “இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்”  என்ற குறளுக்கேற்ப அனைத்துக் குழுக்களும் அவரவர் பொறுப்புகளை மிகவும் செம்மையாக நிறைவேற்றின. அகில இந்திய மாநாடு நூறு சதவிகிதம் வெற்றிகரமாக நடைபெற்றதற்கு இந்த வேலைப் பிரிவினையும், கூட்டுச் செயல்பாடும் மிக முக்கியக் காரணமாக அமைந்திருந்தது. கடந்த மூன்று மாத காலம் கட்சி முழுமையும் மாநாட்டுப் பணி யில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. கிளையில் உள்ள உறுப்பி னர் துவங்கி மாநில செயற்குழு உறுப்பி னர்கள் வரை ஓய்வின்றி இப்பணியில் ஈடுபட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் என்று சுமார் ஆயிரம் பேர், காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை அனைத்து மாநிலங்களிலி ருந்தும் பங்கேற்றனர்.  ‘செப்புமொழி பதினெட்டுடையாள் - எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என்ற பாரதியின் வைர வரிகளுக்கொப்ப ‘சிறிய இந்தியா’வே மதுரையில் குடியேறி இருந்தது. மதம், மொழி, இனம், சாதி வித்தி யாசமின்றி நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் வண்ணம் இந்தியாவின் பன்மைத்து வத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.  அழகாகவும், மிகவும் நேர்த்தியுடனும் எல்லோராலும் பாராட்டப்படும் வகையி லும் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டது என்றால் மிகை அல்ல!. நிதி  தேசிய அளவிலான இந்த மாபெரும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திட பெருமளவு நிதி தேவை. இதை எப்படி திரட்டுவது என்று மாநிலக்குழு விவாதித்து  திட்டமிட்டது. 1. நாம் எந்தப் பிரிவு மக்க ளுக்காக பாடுபடுகிறோமோ அந்த உழைப் பாளி மக்களிடமிருந்து வெகுஜன வசூல் மூலம் நிதி திரட்டுவது, 2. கட்சி உறுப்பி னர்கள் அனைவரும் இது ஒரு சிறப்பு நிகழ்வு என்ற முறையில் குறைந்தபட்சம் ஒரு நாள் ஊதியம் வழங்குவது, 3. கட்சிக்கு நெருக்கமான நண்பர்கள், ஆதர வாளர்களிடமிருந்து நிதி பெறுவது என்ற முடிவிற்கேற்ப நிதி வந்து சேர்ந்தது. ஏறத்தாழ மூன்று மாத காலம் பல லட்சக்கணக்கான வீடுகளுக்கு பல்லாயி ரக்கணக்கான தோழர்கள் வீடு வீடாகச் சென்று பெருமளவு நிதியைச் சேகரித்த னர். தோழர்களின் உடலுழைப்பு மற்றும் சிக்கனமாக செலவு செய்ததன் மூலம் மாநாட்டுச் செலவுகளை ஈடுசெய்ய முடிந்தது.

உணவில் அசத்திய  மெரினா ஆறுமுகம்

எத்தனையோ அகில இந்திய - மாநில மாநாடுகளில் தோழர் மெரினா ஆறுமுகம் குழுவினர் உணவைத் தயாரித்து எவர் மனமும் கோணாமல் பரிமாறி இருக்கி றார்கள். ஆனால், இந்த மாநாட்டில் மேலும் சிறப்புற பல்லாண்டு காலத்திற்கு மனதிலி ருந்து நீங்காத வகையில் அனைத்து பிரதி நிதிகளையும் அசத்திவிட்டார் என்று சொல்லலாம். பழைய சோறு, கருவாட்டுத் தொக்கு, சின்ன வெங்காயம், பச்சை மிள காய் துவங்கி பிரியாணி, பல வகையான இனிப்புகள் என எவருக்கு எது பிடிக்கிறதோ அதை அவர்களே தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம் என்று விசாலமான உணவுக் கூடம் அமைக்கப்பட்டிருந்தது. பல வகையான தேநீர், நுங்கு, பதநீர், பழச்சாறு என ஸ்டால் அமைக்கப்பட்டு பிரதிநிதிகள் பருக ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. மதுரையில் நடைபெற்ற 24ஆவது மாநாட்டு நினைவுகளில் பல மாநில பிரதி நிதிகளுக்கு திரும்பத் திரும்ப நினைவு கூரப்படுவதில் ‘உணவு’ முக்கிய இடத்தைப் பிடித்து விட்டது.

முதல்வர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் மாநில உரி

மைகள் பாதுகாப்பு கருத்த ரங்கம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த  ஒன்றாக ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்றது. கேரள முதல் தோழர் பினராயி விஜயன்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கர்நாடக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர்  சுதாகர் ஆகியோர் பங்கேற்று கருத்தாழமிக்க உரையை நிகழ்த்தினர். தமிழ்நாடு முதலமைச்சர் அன்று காலை சட்டப்பேரவையில் சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை அரசின் சார்பில் அமைக்கப் படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, இக் கருத்தரங்கில் வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  

செந்தொண்டர் அணி வகுப்பு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் செந்தொண்டர் அணி மதுரைக்கு வந்தது. குழந்தைகள் - இளைஞர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் சிவப்புச் சட்டை, காக்கி பேண்ட், காக்கி தொப்பி, ஷூ என சீருடையுடன் மிடுக்காக அணி வகுத்தனர். பல நாட்கள் மாவட்டங்க ளில் பயிற்சியளிக்கப்பட்டு கட்சியின் நிரந்த ரமான சொத்தாக, கட்சி தீர்மானிக்கும் பல்வேறு ஆக்கப்பூர்வமான, மக்கள் நலப் பணிகளில் ஈடுபடுத்திடும் வகையில் செந்தொண்டர் அணி என்பது உரு வாக்கப்பட்டுள்ளது. மதுரையில் ஏப்ரல் 6ஆம் தேதி மாலை செந்தொண்டர் அணி வகுப்பை வாச்சாத்திப் போராளிகள் கொடி யசைத்து துவக்கி வைத்தனர். வன்கொடு மைக்கு எதிராக, நீடித்த போராட்டத்தை நடத்தி வெற்றி கண்ட இவர்கள், அகில இந்திய மாநாட்டு செந்தொண்டர் அணி வகுப்பை துவக்கி வைத்தது சாலப் பொருத்தமானது.

மாபெரும் பொதுக்கூட்டம்

அகில இந்திய மாநாட்டின் முத்தாய்ப் பாக பல லட்சம் மக்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்து வது என்று தீர்மானித்தோம். வாகன வாடகை அபரிமிதமாக உயர்ந்துள்ள நிலையில் மிகப்பெரும் சுமையாகத்தான் தோழர்களுக்கு இருந்தது. இருப்பினும், கட்சியில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் தான் உள்ளனர். ஆனால் கட்சி நடத்திய போராட்டத்தால் பலன் பெற்றவர்கள் பல லட்சம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். எனவே, கட்சி உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்தோடு வரவேண்டும். கட்சியால் பலன் பெற்றவர்களை அணுகி,அவர்கள் வருவதற்கு அழைப்பு விடுக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சி வளர வேண்டும். இதுதான் நல்ல கட்சி என்ற கருத்துடைய ஆதரவாளர்களை வருவதற்கு கேட்டுக் கொள்ள வேண்டும் என்று வழிகாட்டப் பட்டது. இந்த வழிகாட்டல் மிக வெற்றிகர மாக நிறைவேறியது என்பதற்கு 6ஆம் தேதி திரண்ட பெருங்கூட்டமே சாட்சி. மதுரைக்கு கூடல் நகர் என்று மற்றொரு பெயர் உண்டு. அந்த பெயருக்கேற்ப அன்று மக்கள் கூடினர். குடும்பம் - குடும்ப மாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தங்களது சொந்தச் செலவில் லட்சக் கணக்கில் திரண்டிருந்தனர். மைதானம் நிரம்பி வழிந்தது. கட்சித் தோழர்களிடம் மிகப்பெரும் நம்பிக்கையை இப்பொதுக் கூட்டம் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வலுவான சக்தியாக, கட்சி வளரும் என்ற தன்னம்பிக்கையை விதைத்துள்ளது இம்மாநாடு. கட்சி தோழர்களிடம் உற்சா கம் கரைபுரண்டு ஓடியதை கண்ணாரக் கண்டோம். தமிழ்நாட்டிலிருந்து மட்டு மின்றி கேரளத்திலிருந்தும் ஏராளமான தோழர்கள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்க ஒன்று. “கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப் பது” என்பது நகல் அரசியல் தீர்மானத்தின் முக்கியப் பகுதி. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் கடந்து  விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உரு வாகி 60 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. எனவே, கட்சியை பாய்ச்சல் வேகத்தில் வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஏக்கம் எல்லோரிடமும் மேலோங்கி இருக்கிறது. அதற்கான ஒளிக்கீற்றை அகில இந்திய மாநாடும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற பொ துக்கூட்டமும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

மக்களை கவர்ந்த  காரல் மார்க்சும் - கண்காட்சியும்

மாநாட்டில் மார்க்ஸ் தான் மையமாக இருந்தார். உள்ளே மாநாட்டு மேடையில் பிரம்மாண்டமாக மார்க்ஸ் சிலை வடிவ மைக்கப்பட்டிருந்தது. மாநாட்டு முகப்பில் தனி மேடையில் கம்பீரமாக கால்மேல் கால்போட்டு மார்க்ஸ் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் ஒரு காலி நற்காலி - அந்த நாற்காலியில் அமர்ந்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. மார்க்ஸ்  மக்களின் இதயங்களில் வாழ்கிறார்; என்றென்றும் வாழ்வார் என்பதை அது வெளிப்படுத்தியது. உலகளவில் பேசும் ஒன்றாக அது அமைந்து விட்டது. இந்த சிலையை உருவாக்கிய சிற்பக் கலைஞர் மதுரையைச் சேர்ந்த திரு சரண்ராஜ் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்! நிலப்பிரபுக்களின் கொடுமைக்கு என்றென்றைக்கும் சாட்சியாக விளங்கும் கீழ்வெண்மணி கொடுமையை சித்த ரிக்கும் ‘ராமையாவின் குடிசை’ தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நமது நெஞ்சங்களில் கனல் மூட்டும் அந்த எரிந்த குடிசையை வடிவமைத்தவர் சென்னை யைச் சேர்ந்த கலை இயக்குநர்  பிரபாகரன் அவர்கள். உள் அரங்க மேடையில் வீற்றிருந்த பிரம்மாண்டமான மார்க்ஸ் சிலை உருவாக்கியவரும் இவர் தான். அவ ருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக் கள்.

நான்கு கண்காட்சிகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெருமை

மிகு வரலாறு, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெண்கள், சிந்து சமவெளி முதல் கீழடி வரை, பாசிசம் குறித்த கண்காட்சி ஆகி யவை மாநாட்டு வளாகத்தில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. பாசிசம் குறித்த கண்காட்சியை பெங்களூரைச் சேர்ந்த  சுதீஷ் அவர்கள் உருவாக்கியிருந்தார். ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களால் பாசிசப் போக்குகள் தீவிரமாக முன்னெ டுக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் மத்தியில் அது தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சியில் பணியாற்றிய, பல்வேறு போராட் டங்களுக்கு தலைமையேற்ற பெண் தலை வர்கள் குறித்து தனி அரங்காக அமைக் கப்பட்டிருந்தது கூடுதல் சிறப்பு. புத்தக  விற்பனை நிலையங்களும் அமைக்கப் பட்டு ஏராளமான புத்தகங்கள் விற்பனை யாகின. கலைக்கும், கலைக்குழுக்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி என்றென்றைக்கும் உரிய முக்கியத்துவத்தை கொடுத்து வந்தி ருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் பாடி வரும் அனைத்து கலைக்குழுக்களும் ஒரு வார காலம் தங்கியிருந்து நிகழ்ச்சி களை நடத்தினர். திரை இயக்குநர்கள், திரைக்கலைஞர்கள் அதிக எண்ணிக்கை யில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இளைஞர்களையும், பொதுமக்களையும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தானாக இழுத்து வந்தது. தமிழறிஞர் சாலமன் பாப்பையா, திரை இயக்குநர்கள் வெற்றிமாறன், சசிகுமார், சமுத்திரகனி, ராஜூமுருகன், ஞானவேல், மாரி செல்வ ராஜ், திரைக்கலைஞர்கள் பிரகாஷ் ராஜ், ரோகிணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் கள். மாநாட்டிற்கான தீம் பாடல் கவிஞர் யுகபாரதி அவர்களால் எழுதப்பட்டது.  

தீக்கதிர் மற்றும்  சமூக வலைத்தளம்

கடந்த இரண்டு மாத காலமாக நாள் தவறாமல் மாநாடு தொடர்பான செய்தி களை வெளியிட்டு தோழர்களின் உணர் வாக மாற்றியதில் தீக்கதிர் நாளேட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. தீக்கதிர் ஏடு ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு மாநாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது சிறப்பு.  சமூக வலைத்தளங்கள் மூலம் லட்சக்க ணக்கானோரிடம் முழக்கங்களையும், செய்திகளையும் கொண்டு சேர்த்ததில் இக்குழுவில் உள்ள தோழர்கள் கடும் பணியாற்றினர். இன்றைய டிஜிட்டல் உலகில் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் கட்சியின் சமூகவலைத்தளப் பணியை மேலும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. மக்களைச் சென்றடைய தீக்கதிர் மற்றும் சமூக வலைத்தளம் இரண்டும் மிகவும் முக்கியம். அகில இந்திய மாநாடு என்ற வகையில் மொழி பெயர்ப்புக்கு கணிசமான நேரம் செலவழிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இந்த மாநாட்டில் அதற்கு தீர்வுகாணும் வகையில், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏக காலத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அவ ரவர்களுடைய மொழியில் மொழிபெயர்ப் பதை கட்சியின் இளம் தோழர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை சாத்தியமாக்கினர். அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் சுமார் 25 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டுள்ள னர். கருத்தியல் ரீதியாக மக்களிடம் செல்லவும், பேரணிக்கு திரட்டவும் இது உதவியது. மாநாட்டையொட்டி சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்றுத் தகவல் பெட்டகமாக அம்மலர் வெளி வந்துள்ளது. இப்படி அனைத்து விதத்தி லும், முன்னுதாரணமான இதற்கு முன் நடைபெற்ற எல்லா மாநாடுகளையும் விட சிறப்பான ஒரு மாநாடாக, மதுரையில் நடை பெற்று முடிந்த 24ஆவது அகில இந்திய மாநாடு விளங்கியது. மதுரை மாநாடு  கட்சியின் வரலாற்றில் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப்பட்டுவிட்ட ஒன்று என்பதில் சந்தேகமில்லை. தங்களுடைய திறமையை, நிதியை, உடலுழைப்பை, ஆதரவை வழங்கிய அனைவருக்கும், மாநிலக்குழுவின் சார்பில் நன்றிகளை உரித்தாக்குகிறேன். மாநாட்டின் மூலம் கிடைத்த உற்சாகத்தில் மேலும் முன் னேறுவோம்! நாம் வெல்வோம் தோழர்களே!