articles

img

சாதிக் கொட்டடிகளிலிருந்து சிறைகளை விடுவிக்க-அ. குமரேசன்

சிறைகளில் உள்ள கைதிகளுக்கு சாதி அடிப் படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று  உச்சநீதிமன்றம் அக்டோபர் 3 அன்று ஆணையிட்டுள்ளது. இந்திய ஒன்றிய அரசும் மாநில  அரசுகளும், மூன்று மாதங்களுக்குள் தமது சிறைச்  சட்டங்களில்  உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும்  ஆணையிட்டுள்ளது. ‘தி வயர்’ இணையத் தளப் பத்திரிகையின் மூத்த துணை ஆசிரியர் சுகன்யா  சாந்தா, சிறைகளில் நிலவும் சாதிப் பாகுபாடுகளை ஆராய்ந்து எழுதியதோடு, ஒரு பொது நல வழக்காக வும் உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார். தமிழகத்தின் பாளையங்கோட்டை உட்பட நாட்டின் பல்வேறு சிறைகளின் நிலைமைகளை வழக்கில் சுட்டிக் காட்டினார். அந்த வழக்கில் அளித்த தீர்ப்பில்தான் இவ்வாறு ஆணையிடப்பட்டிருக்கிறது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை  எழுதியிருக்கிறது.

உணவும் வேலையும்

சாதிப்பாகுபாடு இல்லாத சிறையே நாட்டில் இல்லை எனலாம். அந்த அளவுக்கு அனைத்து மாநி லங்களிலும் உள்ள சிறைகளில் சாதிய நாற்றம் மூச்சைத் திணறடிக்கிறது. பொதுவாகக் காணப்படும் பாகுபாடுகள் வழக்கிலும் தீர்ப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.: கைதிகளுக்கு உணவு வழங்குவதில் கூட பாகுபாடு இருக்கிறது. 

கைதிகளுக்குப் பல்வேறு வேலைகள் தரப்படு வதையும், விடுதலையாகிறபோது அதற்குரிய ஊதி யத்தோடு அனுப்பி வைக்கப்படுவதையும் அறிவோம்.  ஆனால், யாருக்கு என்ன வேலை என்பது அவர் என்ன சாதி என்பதை வைத்து முடிவு செய்யப்படுகிறது. குறிப்பாக, கழிப்பறையைத் தூய்மைப்படுத்துவது, குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகள் எந்தச் சாதிகளைச்  சேர்ந்தோருக்கு ஒதுக்கப்படும் என்று விளக்க வேண்டியதில்லை. இப்படி அவர்களை வேலை வாங்குவது சிறையதிகாரிகள் மட்டுமல்ல, ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த கைதிகளும்தான்.

கைதிகளுக்கான அறைகள் ஒதுக்கப்படுவதையும் சாதி தீர்மானிக்கிறது. குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தோரை மற்றவர்கள் ஒதுக்கிவைப்பது, சாதி அடிப்படையில் சில பிரிவுகளைச் சேர்ந்தோருக்கு மரியாதை காட்டுவது, வேறு சில பிரிவுகளைச் சேர்ந்த வர்களுக்கு மரியாதை மறுக்கப்படுவது, வன்முறை களுக்கு உள்ளாக்குவது எனப் பல வகைகளில் பாகுபாடுகளைக் காணலாம். பெரும்பாலான கைதிகள் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அங்குள்ள சாதிய ஏற்றத்தாழ்வுகளு டனேயே சிறைகளிலும் நடமாடுகிறார்கள். வெளியே சந்திக்கிற தீண்டாமைக் கொடுமைகள் அதே அளவுக்கு உள்ளேயும் தீண்டிக்கொண்டிருக்கின்றன.

ஆதிக்கம்

“குறிப்பிட்ட  வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிற குறிப்பிட்ட சாதி அந்த வட்டாரத்தில் உள்ள சிறை யிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. கூலிப்படையினர், சமூகவிரோதிகள் சேர்ந்துகொள்வதால் அந்த ஆதிக்கம் வலுவாக இருக்கிறது. உதாரணமாக, மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஆதிக்கச் சாதியாக இருக்கிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தான் இந்தப் பகுதிகளின் சிறைகளிலும் செல்வாக்கோடு இருக்கிறார்கள்” என்கிறார். உதவி சிறை அலுவல ராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரான நல்லதம்பி.

“தமிழகச் சிறைகளில் குறிப்பிட்ட சாதிக்காரர் களுக்குக் குறிப்பிட்ட பிளாக் (கூடம்) என்ற ஏற்பாடு கிடை யாது. பாளையங்கோட்டையில் மட்டும் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி பிளாக்குகள் பிரிக்கப்பட்டி ருக்கிறது. இந்த நிலைமை ஒரு கொலை வரையில் கொண்டுபோயிருக்கிறது. ஆதிக்க சாதியினர் கூலிப் படைகளை அமைத்துக்கொள்கிறபோது பட்டியல் சாதியினரும் அதே போல் ஆட்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள். சிறைச் சுவர்களில் குறிப்பிட்ட சாதித் தலைவர் படங்களை வரைவது பரவலாக இருந்தது. ஒரு துணிச்சலான முடிவெடுத்து அநதப் படங்கள் அழிக்கப்பட்டன,” என்று தெரிவித்தார், மதுரை நம்பி என்ற புனைப்பெயரில் சிறை அனுபவங்களை இரண்டு புத்தகங்களாக வெளியிட்டுள்ள நல்லதம்பி.

தனிக்கூடங்கள் என்றில்லாவிட்டாலும், சிறை அதிகாரிகள் தலித்துகளையும் பழங்குடியினரையும் நெருக்கடியான இடங்களில் படுக்க வைத்து உடல்ரீதியான துன்பத்திற்கு உள்ளாக்குவார்கள்.. இதற்குக் காரணம் அவர்களுக்குள்ளேயும் இருக்கிற சாதி வன்மம்தான். “எப்படி ஒரு வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிற சாதியினர் சிறைக்குள்ளேயும் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அதே போல சிறை அதிகாரிகள்,  சிறைக் காவலர்கள்,  பணியாளர்களிடையேயும் அந்த ஆதிக்க சாதியினர்தான் மிகுதியாக இருக்கிறார்கள்,” என்கிறார் நல்லதம்பி.

இந்தப் பாகுபாட்டைக் கட்டிக்காப்பது போலத்தான் சிறை விதிகள் எழுதப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக,  ஒரு கைதியை சிறைக்குள் அனுமதிக்கிறபோது, பதிவேட்டில் அவருடைய சாதி என்ன என்று கேட்டுப் பதிவு செய்யப்படுகிறது. தொடரப்போகும் பாகுபாடுகளுக்கு இதுவொரு தொடக்கப்புள்ளியாகிறது. சிறைப் பதிவேட்டில், சாதி என்ற பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது ஆணையில் கூறியிருக்கிறது. கைதியின் பெயர், வயது, ஊர், தொழில் போன்ற தகவல்களைக் கேட்டுப்  பதிவு செய்யலாமேயன்றி, சாதியைப் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று நீதிமன்றம் கூறியிருப்பது மிக முக்கியமானது.

அவமதிக்கப்படும் மாண்பு

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளை சாதி அடிப்படையில் பிரித்துவைப்பதும், சாதி அடிப்படையில் வேலைளை ஒதுக்குவதும் அரசமைப்பு சாசனத்தை மீறுகிற செயல் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர். சிறைக்குக் கொண்டுவரப்படுகிற குறிப்பிட்ட சாதிப் பிரிவினரைக் குற்ற மரபினர் என்றும் வாடிக்கையாகக் குற்றம் செய்கிறவர்கள் என்றும் வகைப்படுத்துவது, அவர்களுக்குரிய மனித கவுரவத்தையும் மனித மாண்பையும் ஒடுக்குகிறது என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

“அரசமைப்பு சாசனத்தின் 15(1) சட்டப்பிரிவு  அனைத்துக் குடிமக்களுக்கும், பாகுபடுத்தப் படுவதற்கு எதிரான அடிப்படை உரிமையை உறுதிப் படுத்துகிறது. ஆனால் அரசாங்கமே ஒருவரைப் பாகுபடுத்துகிறபோது அது உயர்ந்த வடிவத்திலான பாகுபாடாகிறது. அரசு பாகுபாடுகளைத் தடுக்க வேண்டுமேயன்றி அதை நீடித்துக்கொண்டு போகக் கூடாது,” என்று தலைமை நீதிபதி அதிகாரத்தின்  தலை யில் குட்டியிருக்கிறார். இந்த அளவுக்கு விமர்சிப்ப தற்கு எது இட்டுச் சென்றிருக்கிறது என்றால், சிறைக் கையேடுகளின் விதிகளில் மட்டுமல்லாமல், ஒன்றிய அரசின் சட்டங்களிலேயே அப்பட்டமாக இருக்கும் பாகுபாடுதான். அதுவும், பழைய சட்டங்கள் அல்ல, அண்மைக் காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்களிலேயே இப்படி இருககிறது.

ஒன்றிய அரசால் 2016ல் கொண்டுவரப்பட்டது: ‘நவீன சிறைக் கையேடு’.  2023ல் கொண்டுவரப்பட்டது ‘முற்போக்கான மற்றும் செயல்திறனுள்ள நவீன சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் சட்டம்’. நவீனம் முற்போக்கு என்று பெயர்களில் இருந்தாலும், இந்தச் சட்டங்கள்  சீர் மரபினர் என்று அறிவிக்கப்பட்ட பிரிவு களைச் சேர்ந்த, வழக்கமான கைதிகளை வன்புணர் வாளர்கள், கொலைகாரர்கள், பாலியல் தொழி லாளர்கள், பாலியல் விடுதி நடத்துகிறவர்களோடு சேர்த்து வகைப்படுத்துகின்றன. சிறைகளில்  சமையல் பணிகளை சாதி, மத அடிப்படையில் ஒதுக்குவதற்கு இந்தச் சட்டங்கள் வழி செய்கின்றன. சிறைகளில் சாதி அடிப்படையில் சலுகைகள் தொடர்வதற்கு அனுமதிக்கின்றன.

இதுவும் தீண்டாமைதான்

அரசமைப்பு சாசனத்தின் 17வது சட்டப் பிரிவின்படி தீண்டாமை தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், “சாதிகள் சார்ந்து கைதிகளைப் பாகுபடுத்துவதும், அவர்களுக்கான வேலைகளை ஒதுக்குவதும் தீண்டாமைக்கு நிகரானதுதான்,” என்று, தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி கூறியிருக்கிறார்.

அரசமைப்பு சாசனத்துக்குப் புறம்பாகச் செயல்படு வதற்கான பொதுமன்னிப்பு எந்தவொரு சிறையதி காரிக்கும் கிடையாது. உழைப்பை இழிவுபடுத்து வதும், ஒடுக்கும் நடைமுறைகளும் அரசமைப்பு  சாசனத்தின் 23வது சட்டப்பிரிவில் உறுதிப்படுத்தப் பட்டுள்ள  கட்டாய உழைப்புக்கு எதிரான உரிமையை மீறுவதாகும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

நாடோடிகளாகச் சுற்றி வருகிற பழங்குடிகளை பிறவிக் குற்றவாளிகளாகவும் வழக்கமாகக் குற்றங்கள் செய்கிறவர்களாகவும் நடத்துவது, காலனியாதிக்கக் காலத்து சாதிப் பாகுபாட்டை மறு உறுதி செய்வதாக இருக்கிறது. சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாமலே, “வழககமாகக் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்” எனக் கூறும் அனைத்து மேலோட்டமான குறிப்புகளும் அர சமைப்பு சாசனத்திற்கு எதிரானவையே என்கிறது தீர்ப்பு.
சாதி அடிப்படையில் கைதிகளை வகைப்படுத்து வது அவர்களது மறுவாழ்வுக்கு இட்டுச் செல்லாது. வேலைத் திறன், தேவைப்படும் இட வசதி, மருத்துவ சேவைகள், உளவியல் வழிகாட்டல்கள் ஆகிய வற்றை விசாரித்துப் பதிவு செய்து வகைப்படுத்துவது தான் அரசமைப்பு சாசனத்தின் நோக்கத்தை நிறை வேற்றுவதாக இருக்கும் என்றும் தீர்ப்பில் வலி யுறுத்தப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த கைதிகளை, அவர்கள் தங்களுக்கேற்ற வேலைகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்காமலே, கழிப்பறையைத் தூய்மைப்படுத்துவது, தரையைப் பெருக்குவது போன்ற வேலைகளைச் செய்யுமாறு பணிப்பது வலுக்கட்டாயமான திணிப்பின்  வடிவம் தான் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதையும் புரிந்துகொள்ள மறுப்பவர்களுக்காக உச்சநீதிமன்றம் பின்வருமாறு அறிவுறுத்துகிறது: “எந்தவொரு சமூகப் பிரிவும் தூய்மைப் பணியாளர் சமூகமாகப் பிறக்கவில்லை. பிறப்பின் அடிப்படை யிலான புனிதம், புனிதக் கேடு  என்ற கண்ணோட்டங் களைச் சார்ந்துதான் தாழ்வானதாகவும் துய்மைக் கேடானதென்றும் கருதப்படும் வேலைகளுக்கு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அப்படிப் பட்ட வேலைகளைத் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோருக்கு ஒதுக்குவதும், அவர்களைத் துப்புரவுத் தொழிலாளர் பிரிவினர் என்று வகைப்படுத்துவதும் தீண்டாமைச் செயல்தான். கையால் துப்புரவு செய்வோராகப் பணியமர்த்தப் படுவதைத் தடை செய்கிற, அவர்களின் மறுவாழ்வுக்கு வழி செய்கிற 2013ம் ஆண்டுச் சட்டம் சிறை  வளாகங்களையும் கட்டுப்படுத்துவதுதான்.”

சமூதாயத்தின் சாதியக் கட்டமைப்புதான் சிறை வளாகங்களுக்குள் பிரதிபலிக்கிறது  என்பது உண்மை. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால் சிறை வளாகங்களுக்குள் ஏற்படக்கூடிய மாற்றங்கள் சமுதாயத்தில் எதிரொலிக்க வேண்டும் என்றே, சாதி யத்திற்கு எதிராகப் போராடுகிறவர்கள் எதிர்பார்க் கிறார்கள்.