விடுதலை போராட்ட வீரர், எழுத்தாளர், கவிஞர், மேடைப்பேச்சாளர், பத்திரிக்கை ஆசிரியர் என பன்முகத்திறன் கொண்ட ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.கல்யாணசுந்தரம் பிறந்தநாள் இன்று.
திருவாரூர் விருத்தாசலம் கயாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (திரு.வி.கல்யாணசுந்தரம்., ஆகஸ்ட் 26, 1883 - செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம்(தண்டலம்) என்னும் சிற்றூரில் திரு.வி.க பிறந்தார்.
உவெசுலி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்பிள்ளை என்ற தமிழறிஞரிடம் நட்பு ஏற்பட்டது. அவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். அவரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்று சிறந்த புலமை பெற்றார். கதிரவேற்பிள்ளை காலமான பிறகு கல்யாணசுந்தரனார் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ், மற்றும் சைவ நூல்களையும் பாடம் கேட்டு பயின்றார்.
1906-ஆம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கர் ஆகச் சேர்ந்தார். அக்காலத்தில், பால கங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதனால் அவ்வேலையிலிருந்தும் அவர் நீங்கினார்.
1909-இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் 1918-இல் இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார்.
பின்னர் தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர் திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.
ஆசியாவிலேயே முதல் தொழிற்சங்கத்தை தோற்றுவித்து, தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதியுள்ளார்.