போர் மற்றும் போர் நிறுத்தம் என்ற கருத்துகள் மனித வரலாற்றில் பழமையானவை. பண்டைய ஆவணங்களில், போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் உணவு அல்லது ஓய்வுக்காக துப்பாக்கிச் சண்டையை நிறுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம், போரில் ஈடுபட்ட வர்கள் தாங்கள் இழந்த சக்தியை மீண்டும் பெறு வதற்கும், மீண்டும் சண்டையிடுவதற்கும் தேவையான நேரத்தைப் புரிந்துகொண்டனர். சில சமயங்களில், இந்த போர் நிறுத்தங்கள் விலங்குகளின் உயிர்களை யும் காப்பாற்றியுள்ளன. உதாரணமாக, 1916 ஈஸ்டர் எழுச்சியின் போது, டப்ளினில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கிரீன் பார்க் அருகே, ஐரிஷ் கிளர்ச்சியாளர் களும் இங்கிலாந்து ராணுவமும், பூங்கா காப்பாளர் ஜேம்ஸ் கீர்னியின் வேண்டுகோளின்படி, பூங்காவில் உள்ள வாத்துகளுக்கு உணவளிப்பதற்காக துப்பாக்கிச் சண்டையை இடைநிறுத்தினர். இத்தகைய நிகழ்வுகளே “போர் நிறுத்தம்” என்ற சொல்லை பிரபலமாக்கியது. காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு, குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்படுவதோடு, மனிதாபிமான உதவிகள்—உணவு, நீர், மருந்து மற்றும் போர்வைகள்—உடனடியாக வழங்கப்படுவது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். ஜனவரி 19 முதல் அமலுக்கு வந்த தற்காலிக போர் நிறுத்தத்தின் மூலம், காசா மக்களுக்கு குறிப்பிட்ட அளவில் உதவி செய்ய முடிந்துள்ளது என ஐ.நா. மனிதாபிமான விவகாரங் களுக்கான அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லெர்கே உறுதிப்படுத்தியுள்ளார். போர் நிறுத்தத்தின் முதல் நாளில், 630 லாரிகள் காசா வுக்குள் நுழைந்தன. இஸ்ரேல் காசாவில் குண்டு வீச்சை நடத்தியபோது, தினமும் 50 முதல் 100 நிவா ரண வாகனங்கள் மட்டுமே உள்ளே செல்ல முடிந்தது. இப்போது, அந்த எண்ணிக்கையை விட அதிகமான நிவாரண வாகனங்கள் காசாவிற்குள் செல்கின்றன. இந்த வாகனங்கள் உணவு, சுகாதாரப் பொருட்கள், மருந்துகள் மற்றும் தண்ணீர் குழாய் இணைப்புகளை சரிசெய்யும் பொருட்களை கொண்டு செல்கின்றன. மருத்துவமனைகளில் மருந்துகள் மீண்டும் நிரப்பப் படுகின்றன. பாலஸ்தீனர்களின் தங்குமிடங்கள் சரிசெய்யப்படுகின்றன. சிதறிய குடும்பங்கள் மீண்டும் இணைக்கப்படுகின்றன. இந்த உதவி, கிட்டத்தட்ட 500 நாட்களாக நடந்த இனப்படுகொலை மற்றும் வன்முறைக்குப் பிறகு காசாவுக்கு வழங்கப்படும் ஒரு உயிர்நாடியாகும்.
பாலஸ்தீனர்களின் ஆயுட்காலத்தில் பயங்கரமான சரிவு
இனப்படுகொலையால் பாலஸ்தீனம் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. உலக மக்கள் தொகை 2024 மதிப்பீடுகளைப் பயன்படுத்தி, “டிரை காண்டினென்டல்: சமூக ஆராய்ச்சி நிறுவனம்” மற்றும் “குளோபல் சவுத் இன்சைட்ஸ்” ஆகியவை காசாவில் இஸ்ரேலின் குண்டுவீச்சின் காரணமாக பாலஸ்தீனர்களின் ஆயுட்காலம் குறைந்ததை ஆய்வு செய்தன. இந்த ஆய்வில், பாலஸ்தீனர்களின் மொத்த வாழ்நாள் 2022 மற்றும் 2023 க்கு இடையில் 11.5 ஆண்டுகள் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. 2022இல் 76.7 ஆண்டுகளாக இருந்த பாலஸ்தீனர் களின் ஆயுட்காலம், 2023 இல் 65.2 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலை மற்றும் குண்டு வீச்சின் முதல் மூன்று மாதங்களில் (2023 அக்டோபர் முதல் டிசம்பர் வரை), பாலஸ்தீனர்களின் ஆயுட்காலம் பயங்கரமான சரிவை எட்டியுள்ளது. நவீன மனித வரலாற்றில் வேறு எந்த காலத்திலும் இவ்வளவு விரை வாக மனிதர்களின் ஆயுட்காலம் சரிந்ததாக எங்களுக்குத் தெரியவில்லை. தற்போது, ஒரு பாலஸ்தீன குடிமகனின் வாழ்க்கை, ஒரு இஸ்ரேல் குடிமகனின் வாழ்க்கையை விட 17 வருடங்கள் குறை வாக உள்ளது. 1980 இல் தென்னாப்பிரிக்காவில் இன வெறி கலவரத்தால் ஏற்பட்ட 15 ஆண்டுகள் ஆயுட்கால இடைவெளியை விட, பாலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகமாக உள்ளது.
பாலஸ்தீனர்களின் மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பு: ஒரு நீண்ட பயணம்
ஒரு பாலஸ்தீனர் தனது வாழ்நாளில் 11.5 ஆண்டு களை இழக்கிறார். இனப்படுகொலையில் தப்பிய 52 லட்சம் பாலஸ்தீனர்களுடன் இதனை ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போது உயிரோடு உள்ள பாலஸ்தீனர்கள் சுமார் 6 கோடி ஆண்டுகள் வாழ்நாளை இழந்துள்ளனர். இந்த இழப்பை எளிதில் மீட்டெடுக்க முடியாது. பாலஸ்தீன சமூகத்தை மீண்டும் கட்டி யெழுப்பவும், இனப்படுகொலைக்கு முன் இருந்த ஒரு பாலஸ்தீன மனிதனின் ஆயுட்காலத்தை அடையவும், பல வருடங்களுக்கு கடினமான உழைப்பு தேவைப்படும்.
1. சுகாதார அமைப்புகள்: இஸ்ரேல் ராணுவத்தால் அழிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களை மீண்டும் கட்டியெழுப்ப
வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின்
எண்ணிக்கையை மீண்டும் உருவாக்க வேண்டும்.
2.உணவு விநியோகம்: பேக்கரிகள், உணவு செய்யும் கூடங்கள் மற்றும் விவசாய வயல்களில் இஸ்ரேல் ஏற்படுத்திய நச்சுத்தன்மையை நீக்க வேண்டும்.
3. வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு: காசாவில் 92% வீடுகள் மோசமாக சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.
4. மன ஆரோக்கியம்: இஸ்ரேலின் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தைகளின் மன அதிர்ச்சியை குணப்படுத்த வேண்டும்.
காசாவின் மீள்கட்டமைப்பு: சவால்கள் மற்றும் தடைகள்
காசாவை மீண்டும் கட்டியெழுப்ப, சுமார் 80 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என மதிப்பிடப் பட்டுள்ளது. ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட ஆணையம், காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக வெனிஸின் Luav பல்கலைக்கழகத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. காசாவில் 50 மில்லியன் டன் கட்டட இடிபாடுகள் உள்ளன. இவற்றை அகற்ற பல ஆண்டுகள் ஆகும். இடிபாடுகளில், காணாமல் போன பாலஸ்தீனர்களின் உடல்கள், வெடிக்காத வெடிமருந்துகள் மற்றும் இஸ்ரேல் வீசிய விஷ வாயு குண்டுகள் உள்ளன. பாலஸ்தீன நிர்வாகத்திடம் காசாவை மீண்டும் கட்டியெழுப்பு வதற்கு தேவையான பணம் இல்லை. வளைகுடா அரபு நாடுகள் உதவி செய்தாலும், அதற்கு ஈடாக அரசியல் சலுகைகளை எதிர்பார்க்கின்றன. இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் (அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்றவை) பாலஸ்தீனர்களின் சொத்துக்களுக்கு ஏற்படுத்திய அழிவுக்கு பணம் செலுத்த வேண்டும் என்பது ஒரு நியாயமான கோரிக்கையாகும்.
இஸ்ரேலின் குடியேற்றத் திட்டங்கள்: பாலஸ்தீனர்களின் எதிர்காலம் அச்சுறுத்தப்படுகிறது
இனப்படுகொலை செய்த இஸ்ரேல் கூட்டணி, காசாவை தங்கள் ரியல் எஸ்டேட் தொழிலின் விளை யாட்டு மைதானமாக மாற்ற விரும்புகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், காசா ஒரு “அற்புத மான இடம்” எனக் கூறியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, காசாவின் மற்ற பகுதிகளை ஆக்கிரமித்து, புதிய குடியேற்றங்களை உருவாக்கும் திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். இத்தகைய குடி யேற்ற இயக்கம், பாலஸ்தீனர்களின் இன அழிப்பின் ஒரு பகுதியாகும்.
பாலஸ்தீனர்களின் போராட்டம் தொடர்கிறது
இனப்படுகொலையால் தங்கள் வாழ்நாளில் 11.5 ஆண்டுகளை இழந்த பாலஸ்தீனர்கள், இந்த சிறிய போர் நிறுத்தத்தில் தங்களுக்கு கிடைப்பதில் தேவை யானதை எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அவர் களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அதி கமாக கிடைக்க வேண்டும். அவற்றைப் பெறுவதற் காக அவர்களின் போராட்டம் தொடரும். ஜனவரி 27 அன்று, வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் தஞ்சம் புகுந்த லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள், காசா முழுவதிலும் இருந்து வடக்கு பகுதியை நோக்கி தங்கள் வீடுகளுக்கு நடக்கத் தொடங்கினார்கள். அவர்கள் இன்னொரு நக்பா (பேரழிவு) வராமல் தடுக்க உறுதியாக உள்ளனர். தேவைப்பட்டால், அவர்கள் தங்கள் கைகளாலேயே இஸ்ரேலால் சர்வநாசம் செய்யப்பட்ட பாலஸ்தீன மண்ணை மீண்டும் கட்டியெழுப்புவார்கள்.
தமிழில்: சேது சிவன்