என்ன செய்ய வேண்டும்? லெனின் உருவாக்கிய கம்யூனிஸ்டு கட்சி அமைப்பின் கோட்பாடுகள்
மாமேதை லெனினின் மிக முக்கிய படைப்புகளில் ஒன்று “என்ன செய்ய வேண்டும்?” (What is to be done?) எனும் நூல். 1901ம் ஆண்டு எழுதி 1902ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூல் ஒரு புரட்சிகரமான கட்சியை உருவாக்குவதற்கான லெனினின் கடு மையான போராட்டத்தை வெளிப் படுத்துகிறது. கம்யூனிஸ்டு கட்சியின் நோக்கம் என்ன? அதன் அமைப்பு முறை எப்படி இருக்க வேண்டும்? கம்யூ னிஸ்டு கட்சியின் ஊழியர்களும் உறுப்பினர்களும் எத்தகையவர் களாக இருக்க வேண்டும்? இந்த கேள்விகளுக்கு விடை தருகிறார் லெனின். கம்யூனிஸ்டு கட்சியின் அமைப்பு கோட்பாடுகள் பற்றிய சித்தாந்த கருத்தியலை முன்வைக்கும் லெனினின் ஆவணங்களில் இந்த நூல் முக்கியமான ஒன்று. புரட்சிகரமான சித்தாந்தம் இல்லா மல் புரட்சிகரமான கட்சி இல்லை என சொல்லும் லெனின் அந்த புரட்சி கரமான சித்தாந்தம் வெல்ல வேண்டு மானால் அதனை அமலாக்குவதற்கு தகுதியான கட்சி இருக்க வேண்டும் என வாதிடுகிறார். கம்யூனிஸ்டு கட்சி பொருளாதார/ அரசியல்/ சித்தாந்தம் ஆகிய மூன்று தளங்களில் போராட்டம் நடத்துவதற்கு தன்னை ஆயுத பாணியாக்கி கொள்ள வேண்டும் எனும் ஏங்கெல்சின் கூற்றை லெனின் மேற்கோள் காட்டுகிறார்.
பொருளாதார வாதமும் சோசலிச உணர்வும்
பொருளாதார கோரிக்கை களுக்காக அல்லது சில சமூக பிரச்ச னைகளுக்காக நடக்கும் தன்னெழுச்சி யான போராட்டங்கள் மட்டுமே, அவை எவ்வளவு எழுச்சியான போராட்டங் களாக இருந்தாலும், சமூக மாற்றம் நோக்கி பயணிப்பது இல்லை. அவற்றை மட்டுமே ஒரு கம்யூ னிஸ்டு கட்சி சார்ந்து இருக்க முடியாது. தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் அல்லது அமெரிக்காவில் நடந்த “நாங்கள் 99%; அவர்கள் 1%” போன்ற போராட்டங்கள் பின்னர் சுவடு தெரியாமல் மறைந்துவிட்டன. சமூக மாற்றங்களை நோக்கிய போராட்டம் சோசலிச உணர்வை கொண்டிருக்க வேண்டும்; போராட்டங்களில் ஈடுபடு பவர்களுக்கு எப்படி சோசலிச உணர்வு உருவாகும்? பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங் களில் ஈடுபடுபவர்களுக்கு அந்த போராட்டங்களின் ஊடாக வலுவான தொழிற்சங்க உணர்வு உருவாகும். ஆனால் சோசலிச உணர்வு உரு வாவது இல்லை. மாறாக கம்யூனிஸ்டு கட்சி அந்த சோசலிச உணர்வை வெளி யிலிருந்து ஊட்ட வேண்டும். அத்தகைய சோசலிச உணர்வை ஊட்டும் திறனுள்ள ஊழியர்களை கம்யூனிஸ்டு கட்சி பெற்றிருக்க வேண்டும்.
மக்களின் குரலாக கம்யூனிஸ்டுகள்
கம்யூனிஸ்டு என்பவர் யார்? இந்த கேள்வியை எழுப்பும் லெனின் தொழிற்சங்க செயலாளராக மட்டுமே ஒரு கம்யூனிஸ்டு இருக்க கூடாது; அவர் மக்களின் குரலாக மக்க ளின் பாதுகாவலனாக இருக்க வேண்டும் என கூறுகிறார். ஆட்சியா ளர்களின் ஒவ்வொரு அடக்குமுறை யின் வெளிப்பாடுக்கு எதிராகவும், அந்த அடக்குமுறை எங்கிருந்து வந்தா லும்; அதனால் பாதிப்பது சமூகத்தின் எந்த பிரிவாக இருந்தாலும், அடக்குமுறைக்கு எதிராக கண்டன குரலை எழுப்புவராக கம்யூனிஸ்டு இருக்க வேண்டும். அந்த அடக்கு முறைக்கு எதிரான கோபத்தை ஒரு முகப்படுத்தி ஆள்வோரின் வன்முறை களை அம்பலப்படுத்தி மிகவும் திறமையாக தனது சோசலிச கோட்பாடு களையும் ஜனநாயக கோரிக்கை களையும் முன்வைக்கும் மக்களின் குரலாக கம்யூனிஸ்டு இருக்க வேண்டும் என லெனின் சொல்கிறார். தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வு உண்மையான அரசியல் உணர்வாக இருக்க வேண்டுமெனில், எவர் மீது அடக்குமுறை ஏவப்பட்டா லும் அதற்கு எதிராக குரல் கொடுப்ப தற்கு அவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். மேலும் இந்த எதிர்ப்பு என்பது கம்யூனிஸ்டு கோணத்தி லிருந்து முன்வைக்கப்பட வேண்டும் எனவும் லெனின் அழுத்தமாக கூறு கிறார்.
ஒரு தொழிலாளி அல்லது உழைப்பாளி எப்பொழுது கம்யூனிஸ்டாக பரிணமிக்கிறார்?
சமூகத்தின் அனைத்து வர்க்கங் கள் குறித்தும் அனைத்து பிரிவுகள் குறித்தும் பொருள்முதல்வாத ஆய்வின் அடிப்படையில் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளும் பொழுது ஒரு உழைப்பாளி கம்யூனிஸ்டாக பரிணமிக்கிறார். நிலப்பிரபு அல்லது ஆன்மீகவாதி; உயர் அரசாங்க அதிகாரி அல்லது சமூக பிரமுகர்; மாணவர் அல்லது பேராசிரியர்; ஆலை முதலாளி அல்லது முதலாளி யின் அடியாள்; சமூக செயற்பாட்டா ளர் அல்லது சமூக விரோதி என அனைத்து பிரிவினர் குறித்தும் அவர் களின் பலம் அல்லது பலவீனங்களின் அம்சங்கள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு சமூக நிகழ்வின் பொழுதும் இந்த வர்க்கங் கள் அல்லது பிரிவுகள் என்ன பேசு கின்றனர்? அவர்களின் வார்த்தை ஜாலங்களுக்கு பின்னால் அவர்களின் வர்க்க நலன் எப்படி ஒளிந்துள்ளது என்பதை அறியும் இடத்தில் கம்யூனிஸ்டு இருக்க வேன்டும் என லெனின் கூறுகிறார்.
கிளர்ச்சியும் பிரச்சாரமும்
ஒரு கம்யூனிஸ்டு மூன்று முக்கிய திறமைகளை கொண்டவராக இருக்க வேண்டும் என லெனின் குறிப்பிடுகிறார். அவை 1. கிளர்ச்சி யாளராக 2. பிரச்சாரகராக 3. அமைப்பாளராக. கிளர்ச்சிக்கும் பிரச்சாரத்துக்கும் என்ன வேறுபாடு என்பதையும் உதாரணம் மூலம் லெனின் விளக்குகிறார். வேலையின்மை காரணமாக ஒரு குடும்பம் உயிரிழந்ததாக வைத்து கொள்வோம். ஒரு கிளர்ச்சியாளர் ஆர்ப்பாட்டம் அல்லது கண்டன கூட்டத்தில் ஒரு பரவலான கூட்டம் முன்பு இந்த கொடூரமான நிகழ்வை தோலுரித்து காட்டுவார்; அந்த கூட்டத்தில் உள்ள எதிர்ப்பாளர்களின் கோபத்தை கிளறிவிட்டு அரசுக்கு எதிராக அந்த கோபத்தை ஒருமுகப் படுத்துவார். அந்த குடும்பத்துக்கு நிவாரணம் கோருவார். அதே சமயம் பிரச்சாரகர் தேர்வு செய்யப்பட்ட ஒரு சிலர் கொண்ட கூட்டத்தில் வேலை யின்மைக்கு காரணம் என்ன என்பதையும் அது எப்படி முதலா ளித்துவ சமூகத்தில் தவிர்க்க இயலா மல் உள்ளது என்பதையும் வேலை யின்மை ஒழிய வேண்டுமானால் முதலாளித்துவம் ஒழிந்து சோசலிசம் மலர வேண்டும் என்பதையும் விளக்க மாக கருத்தை முன்வைப்பார். கிளர்ச்சி யாளர் வாய் வார்த்தைகள் மூலமாக வும் பிரச்சாரகர் அச்சிடப்பட்ட வார்த்தைகள் மூலமாகவும் செயல்படு வார். கிளர்ச்சியாளர் ஒப்பீட்டளவில் பலர் முன்னிலையிலும் பிரச்சாரகர் சிலர் முன்னிலையிலும் பேசுவார். ஒருவர் கிளர்ச்சியாளராக இருப்பதற்கு தனி திறமையும் பிரச்சார கராக இருப்பதற்கு தனி திறமையும் தேவைப்படுகிறது. எனினும் ஒரு கம்யூனிஸ்டுக்கு இரு திறமைகளும் தேவை. அதே போல கட்சி அமைப்பை வழி நடத்தும் சிறந்த அமைப்பாள ராகவும் கம்யூனிஸ்டு இருக்க வேண்டும் என லெனின் கூறுகிறார்.
கட்சி பத்திரிக்கையின் முக்கியத்துவம்
கம்யூனிஸ்டு கட்சிக்கு ஏன் பத்திரிக்கை தேவை என்பதையும் அது கட்சி அமைப்பு செயல்பாடில் என்ன பங்கு வகிக்கிறது என்பதையும் லெனின் விரிவாக இந்த நூலில் குறிப்பிடுகிறார். உண்மையில் தான் உருவாக்கிய கட்சி அமைப்பின் முதல்படியே ரஷ்யாவில் உள்ள அனைத்து கம்யூனிஸ்டுகளையும் ஒன்றுபடுத்த இஸ்க்ரா எனும் பத்தி ரிக்கையை லெனின் தொடங்கியது தான்! “இஸ்க்ரா” குழுதான் பின்னா ளில் போல்ஷ்விக் கட்சிக்கு அடித்தள மிட்டது. கம்யூனிஸ்டு கட்சி பத்திரிக்கை கிளர்ச்சி/ பிரச்சாரம்/ அமைப்பாளர் என மூன்று கடமைகளையும் செய்யும் வலிமை மிக்கது எனவும் லெனின் குறிப்பிடுகிறார்.
தொழில்முறை புரட்சியாளர்கள்
ஒரு கம்யூனிஸ்டு கட்சி “தொழில் முறை புரட்சியாளர்கள்” இல்லாமல் செயல்பட முடியாது என்பதை லெனின் ஆணித்தரமாக முன்வைக்கிறார். தொழிற்முறை புரட்சியாளர் எனில் புரட்சியை மட்டுமே தனது வாழ்வின் இலக்காக கொண்டு செயல்படுபவர். அவருக்கு வேறு எந்த தொழிலிலும் நாட்டம் இருக்க கூடாது. தனது செயல்கள் சிந்தனை அனைத்தையும் புரட்சியை நோக்கியதாகவே அவர் செலுத்த வேண்டும். அரசின் அடக்கு முறைகள் பற்றி தெரிந்திருப்பது மட்டு மல்ல; அவற்றை சந்திக்க தயாராக வும் இருக்க வேண்டும். “தொழில் முறை புரட்சியாளர்கள்” எனும் கோட்பாடை முதலில் முன்வைத்தவர் லெனின்தான்! கம்யூனிஸ்டு கட்சி அமைப்பில் இது மிக முக்கிய திருப்புமுனை எனில் மிகை அல்ல. கம்யூனிஸ்டு கட்சியின் முழுநேர ஊழியர்கள் என்பவர்கள் இத்தகைய தொழிற்முறை புரட்சியாளர்களே! தொழிலாளி வர்க்கமும் கம்யூ னிஸ்டு கட்சியும் சோசலிசத்துக்கான போராட்டத்தில் “முன்னணி படை” (Vanguard) எனும் பாத்திரத்தை வகிக்கின்றனர் எனும் மிக முக்கிய கருத்தாக்கத்தையும் லெனின் இந்த நூலில் முன்வைக்கிறார். அதே போல கம்யூனிஸ்டு கட்சி ஒரு மையப் படுத்தப்பட்ட அமைப்பு முறைகளை யும் மையப்படுத்தப்பட்ட தலைமை யையும் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் லெனின் முன் வைக்கிறார். மையப்படுத்தப்பட்ட அரசு இயந்திரத்தை எதிர்த்து இயங்கும் ஒரு கட்சியும் மையப் படுத்தப்பட்டதாக இல்லையெனில் அடக்குமுறைகளில் காணாமல் போய்விடும். அதே சமயம் மையப் படுத்துதல் என்பது தேவையான அளவு ஜனநாயக முறைகளையும் பிரிக்க முடியாமல் கொண்டிருக்கவேண்டும். இந்த நூலும் இதற்கு முன்பாக எழுதப்பட்ட “எங்கிருந்து தொடங்கு வது?” எனும் நூலும் இதற்கு பின்பு எழுதப்பட்ட “ஓரடி முன்னால் ஈரடி பின்னால்” எனும் நூலும் கட்சி அமைப்பு குறித்து லெனினிய கோட்பாடுகளை விளக்கமாக முன்வைக்கின்றன. ஜார் காலத்திய அடக்குமுறைகளின் பின்னணியில் இந்த நூல்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவை முன்வைக்கும் பல முக்கிய கட்சி அமைப்பு கோட்பாடுகள் அனைத்து சூழல்களுக்கும் பொருந்தும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.