செங்கொடியில் வாழ்கிறார்! - வ.இராஜமாணிக்கம்
அன்று(10-01-2001)கட்சியின் பழனி நகர் மற்றும் ஏரியா குழுக்களின் சார்பில் அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக ஊர்வலமும், ஆர்ப்பாட் டமும் நடக்கவிருந்தது. நூற்றுக் கணக்கான தோழர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் உற்சாகமாக கிளம்பி, அரசு மருத்துவமனையை நெருங்கும்போது அந்த தகவல் வந்துவிட்டது. தோழர். வி.ஏ.கருப்புச் சாமி மறைந்துவிட்டார். அது உண்மை தானா? என தோழர்கள் ஒருவரை யொருவர் சந்தேகத்துடனும், பதட்டத்துடனும் வினவிக் கொண்டனர். தற்போதைய ஒட்டன்சத்திரம் வட்டத்தின் கடைக்கோடி கிராம மான கரியாம்பட்டியில் கருப்பட்டிக்காரருக்கு ஒரே மகனாக தோழர் வி.ஏ.கே.பிறந்தார். அவரது தந்தையின் பெயர் ஆறுமுகம். ஆனால் ஊர் ஊராக சைக்கிளில் அலைந்து திரிந்து கருப்பட்டி விற்பனை செய்து வந்ததால் அவரது பெயர் கருப்பட்டிக்காரராக நிலைத்துப்போனது. ஒரு கருப்பட்டிக்காரரின் மகன் நாடறிந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக உருவானது அவரது தியாகத்தினாலும், போராட்டக் குணத்தினாலும் என்று சொன்னால் அது மிகை அல்ல. பள்ளிப் பருவத்திலேயே தோழர் வி.ஏ.கே.அவரது எதிர் வீட்டில் இருந்த தோழர் கமால் யூசுப் கரம் பிடித்து அரசியல் உலகில் பிரவேசித்தார். வறுமையின் காரணமாக பதினான்காம் வயதில் படிப்பை முடித்துக் கொண்டவர், குழந்தைத் தொழிலாளியாக மாறி ஏற்ற இறக்கங்கள் நிறைந்த சமூகத்தை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். அதன் விளைவாக ஒரு இளம் கம்யூனிஸ்ட்டாக மாறினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அமைந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மீது அடக்குமுறையை ஏவியது. கட்சியை தடைசெய்து, தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. பழனியிலும் ஒட்டன்சத்திரத்திலும் கம்யூனிஸ்ட்டுகள் குறி வைத்து தாக்கப்பட்டனர்.தோழர்கள் ஆர்.ராமராஜ், வி.ஏ.கே. உள்ளிட்ட தோழர்கள் தலைமறைவானார்கள். தோழர் வி.ஏ.கே. தலைமறைவு வாழ்க்கையில் கட்சி இட்ட கொரியர் பணியையும் மேற்கொண்டார். இரவு முழுவ தும் 45 கிலோமீட்டருக்கு மேல் காடு, மலை என்று பாராமல் பசித்த வயிற்றுடனும் செருப்பணியாத கால்களுடனும் நடந்தே சென்று கொரியர் பணியை ஆற்றினார்
17 வயதில் கைது, 7 ஆண்டுகள் சிறை
1948 ஜூன் மாத இறுதியில் மாறுவேடத்திலிருந்த தோழர் வி.ஏ.கே. முதன்முறையாக கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17. போலீஸ், அவரது கைகளில் விலங்கு மாட்டி லத்தி களால் கொடூரமாகத் தாக்கியது. மண்டை உடைந்து, உடல்முழுவதும் ரத்தம் வழிய ஒட்டன்சத்தி ரம் வீதிகளில் ஊர்வலமாக தோழர் வி.ஏ.கே. அழைத்துச் செல்லப்பட்டார். அதற்குப்பிறகு தொடர்ச்சி யாக, பழனி, மதுரை, சேலம், திருச்சி, கடலூர், திண்டுக்கல் என அவர் வாழ்ந்த 70 ஆண்டுகளில் 7 ஆண்டுகளை சிறைக் கொட்டடிகளில் கடும் சித்ரவதைகளுக்கு மத்தியில் கழித்துள்ளார். 1951ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடை நீக்கப்பட்டது. அதன்பிறகு, தோழர்.வி.ஏ.கேயின் பார்வை விவசாயிகளை நோக்கி திரும்பியது. “நிலக்குவியல்கள் உடைக் கப்பட்டு, உபரி நிலங்கள் கையகப்படுத்தப்படவேண்டும், உழுபவனுக்கே நிலம் சொந்தமாக்கப்பட வேண்டும்” என்ற முழக்கத்தோடு பழனி நெய்க்காரப்பட்டி மற்றும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜமீன்தார்களுக்கு எதிராக நடந்த வீரம் செறிந்த போராட்டத்தில் தோழர் வி.ஏ.கேயின் பங்கு மகத்தானது. ஆயிரக்கணக்கான நிலங்களை குவித்து வைத்திருந்த ஜமீன்தார்களின் ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும் அடித்து நொறுக்கி ஏழை விவசாயிகளுக்கு நிலங்களை மீட்டுக் கொடுத்தது. ஒட்டன்சத்திரம் பகுதியில் தோழர் வி.ஏ.கேயின் உற்ற தோழராக இருந்தவர் தோழர் எம்.ஏ. வெங்கடாசலம் இருவரும் சேர்ந்து அப்பகுதியில் இருந்த ஆளும் காங்கிரஸ் மற்றும் ஆதிக்க சக்திக ளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர். 1957 ஜனவரி மாதம், விருப்பாச்சியில் செங்கொடி ஏற்ற தோழர்கள்.வி.ஏ.கே. மற்றும் எம்.ஏ.வெங்கடாசலம் தோழர்களுடன் தயாராகினார். காங்கிரஸ் கொடியைத் தவிர வேறு கொடிகள் ஏற்றக்கூடாது என உத்தரவிட்டிருந்த ஊராட்சித் தலைவர் இருளாண்டித்தேவர், செங்கொடி ஏற்றுவதை குண்டர்களுடன் சேர்ந்து தடுத்தார். தோழர்.வி.ஏ.கே.கம்பம் ஊன்ற குழி தோண்டினார். முதல் அடி வி.ஏ.கே., மீது விழுந்தது. அடுத்த அடுத்த அடிகள் எம்.ஏ.வெங்கடாசலத்தின் மீது விழுந்தன. மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டது. செங்கொடி ஏற்றாமல் பின்வாங்கப் போவதில்லை என அத்தனை அடிகளையும் பொறுத்துக் கொண்டு அங்கேயே தோழர்.எம்.ஏ.வி.நின்றார். அதற்குப்பிறகு விருப்பாச்சியில் மட்டுமல்ல, ஒட்டன்சத்திரம் பகுதி முழுவதும் செங்கொடி பறக்க தோழர்கள் இருவரும் காரணமாக இருந்த னர் என்பது வரலாறு. ஒட்டன்சத்திரம் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு தரிசு நிலத்தை வனத்துறை அபகரிக்கப் பார்த்தது. இதையறிந்த தோழர்கள் வி.ஏ.கே. மற்றும் எம்.ஏ.வி. அருகில் இருந்த கிராமங்களில் இருந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைத் திரட்டி அரசு தரிசு நிலங்களை கையகப்படுத்தி, விவசாய நிலங் களாக மாற்றினர். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின்னர், அரசு அடிபணிந்தது. அந்த நிலங்க ளைப் பிரித்து நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கு பட்டா வழங்கியது. அதன் மூலம், பல ஆயிரக்க ணக்கான மக்கள் வசிக்கும் வடகாடு என்ற புதிய கிராமத்தையே தோழர்கள் உருவாக்கினர்.
சைக்கிளில் வலம்...
தோழர். வி.ஏ.கே. அவர்களின் தியாகமிக்க போராட்ட வரலாறு, திண்டுக்கல் மாவட்டம் மட்டு மல்ல மாநிலம் முழுவதும் இன்று வரை நிலத்திற்காக போராடும் விவசாயத் தொழிலாளர்களுக்கு பெரும் உத்வேகமாக உள்ளது. பழனி பகுதிக்கு வந்தால் நகர் முழுவதும் சைக்கிளில் வலம் வரும் தோழர் வி.ஏ.கே., பார்க்கும் மனிதர்களையெல்லாம் பெயர் சொல்லி நலம் விசாரிப்பார். தோழர்.வி.ஏ.கே. என்ற கம்யூனிஸ்ட் போராளி இறந்து 24 ஆண்டுகள் ஆன போதும் அவர் இன்னும் ஏழை எளிய நெஞ்சங்களிலும் ஏற்றி வைத்த செங்கொடிகளிலும் வாழ்ந்து கொண்டு உள்ளார். 1954இல் 32 தேசிய கவுன்சில் உறுப்பினர்களின் அறைகூவலை ஆதரித்த 52 பேரில் தோழர் வி.ஏ.கேயும் ஒருவர். தேனி,திண்டுக்கல் உள்ளிட்ட மதுரை மாவட்டக்குழு செயலாளராகவும் பின்னர் திண்டுக்கல் மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர். விவசாயிகள் சங்க மாநில மையத்தில் இருந்து பணியாற்றியவர் தோழர் வி.ஏ.கே அவர்கள்.