கம்யூனிஸ்ட் கருத்தரங்குகள் பாட்டாளி வர்க்கத்தின் கொள்கைத் திருவிழா - உ.வாசுகி
24வது அகில இந்திய மாநாட்டுப் பணிகள் களைகட்டிவிட்டன. தமிழகமே ஒன்றிணைந்து இதை நடத்துகிறது என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் வரவேற்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இக்கூட்டங்களில் அகில இந்திய மாநாடுகளின் அரசியல், ஸ்தாபன, சித்தாந்த முக்கியத்துவம் எடுத்துரைக்கப்படு கிறது. வருகை தரும் தோழர்களுக்கு உத்வேக மூட்டும் வரலாற்று விவரங்கள் முன்வைக்கப்படு கின்றன.
மாநாட்டின் சரித்திர பாரம்பரியம்
உதாரணமாக முதல் அகில இந்திய மாநாடு 1943ல் மும்பையில் 10 நாட்கள் நடைபெற்றது. தேச விடுதலைக்கு முன் நடந்த கட்சியின் அகில இந்திய மாநாடு இது மட்டுமே. காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை அமர்வுகள் நீடித்தன. அரசியல் தீர்மானத்தைப் பொதுச்செயலாளர் முன்மொழிய எடுத்துக்கொண்டது 9 மணி நேரம். “தேசத்தின் பாதுகாப்பில் தொழிலாளி வர்க்கக் கடமைகள்” என்ற அறிக்கையை தோழர் பி.டி.ரணதிவே முன்மொழிந்தார். தியாகம் செய்த இளம் போராளிகள் வருகை தந்த 139 பிரதிநிதிகளின் ஒட்டு மொத்த சிறைவாசம் 411 வருடங்கள். இதில் கல்பனா தத், கமலா சாட்டர்ஜி ஆகியோர் தலா ஏழரை ஆண்டுகள் சிறையில் கழித்தனர். தலைமறைவு வாழ்க்கை மொத்தமாக 54 ஆண்டுகள். இவற்றை யெல்லாம் அனுபவித்தவர்கள் வயதானவர் களாக இருப்பார்கள் என நினைத்தால், ஆச்சரி யம் காத்திருக்கிறது - வந்த பிரதிநிதிகளில் 68% பேர் 35 வயதிற்கும் குறைவானவர்கள். மிகவும் இளம் வயதிலேயே போராட்டக் களத்திற்கு வந்து கட்சி க்குத் தம்மை அர்ப்பணித்தவர்கள் இவர்கள். அறிவுஜீவிகளின் அரசியல் இயக்கம் பிரதிநிதிகளில் படிக்காதவர் ஒருவர் கூட இல்லை. மத்தியதர வர்க்கம் கூடுதலாக இருந்தது உண்மைதான். அதே சமயம், கம்யூனிஸ்ட் ஆக வேண்டும் என்ற உறுதியுடன் கம்யூனிச நூல் களைப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்ப தற்காகத் தாமாகவே கல்வி கற்று, குறிப்பாக ஆங்கிலம் கற்றுக்கொண்டு நூல்களைப் படித்த வர்கள் அவர்கள். எனவேதான் படிக்காதவர் ஒருவர் கூட இல்லை.
தனித்துவமும் பெருமையும் கொண்ட பாரம்பரியம்
இத்தகைய பாரம்பரியம் வேறு எந்தக் கட்சிக்கு இருக்கக்கூடும்? “எங்கள தெரியலையா..எங்கள் இசையை புரியலையா” என்ற பாடல் நமது மேடைகளில் வழக்கமாக ஒலிக்கும். உலகம் முழு வதும் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய முக்கியமான பணி கள் அந்தப் பாடல் வரிகளில் பட்டியலிடப் படுகின்றன. மற்ற கட்சிகள் இவ்வரிகளைப் பாடினால், தம்மைப் பற்றி என்ன பாடுவார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். கம்யூ னிஸ்டுகளுக்கு நிகர் வேறு எவரும் இல்லை என மார்தட்டிக் கூற முடியும்.
சோசலிசமே மாற்று, மார்க்சியமே வெல்லும்
“சோசலிசமே மாற்று.. மார்க்சியமே வெல்லும்” என்பவை வெற்று முழக்கங்கள் அல்ல. உலகத்தின் மூன்றில் ஒரு பகுதி நிரூபித்துக் காட்டிய உண்மை கள் இவை. இப்பெருமைமிகு பாரம்பரியத்தின் தொடர்ச்சியே மதுரையில் நடக்கும் 24ஆவது மாநாடு.
மதுரை மாநாட்டின் நோக்கம்
மதவெறி அரசியல், சாதிய அணிதிரட்டல் உள்ளிட்ட அடையாள அரசியல், தமிழ் தேசிய அரசியல் ஆகியவை மோதுகிற களத்தில், இம்மாநாட்டை ஒட்டி மார்க்சிய அரசியலை முன்னெடுப்பதே முக்கிய நோக்கம். வெகுஜன வசூல் இயக்கமும் கருத்துப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியே.
மாநாட்டுக்கான அணிதிரட்டல் நிகழ்வுகள்
மார்ச் 14 அன்று கிளைகள் தோறும் கொடி யேற்றி பிரச்சாரம், மார்ச் 23 அன்று மாவட்ட வாரியாக செந்தொண்டர் அணிவகுப்பு போன்றவை நமது அரசியலைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகள். கொடி பயணம், சுடர் பயணக் குழுக்கள் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் சந்திப்புகளை நடத்துவதும் நமது மாற்று அரசியலை முன்வைக்கவே.
24 கருத்தரங்குகள் - எதிராளிகளுக்கு இடி
24ஆவது மாநாட்டைக் குறிக்கும் வகை யில் 24 கருத்தரங்குகள் மாவட்டங்களில் நடை பெறுகின்றன. சில மாவட்டங்களில் இடைக்குழு வாரியாகக் கூடுதல் கருத்தரங்குகளும் திட்ட மிடப்பட்டுள்ளன. பெரும்பாலும் திறந்தவெளி கருத்தரங்குகளே நடத்தப்படுகின்றன. மண்ணில் தலையைப் புதைத்துக்கொண்ட நெருப்புக் கோழிகள், கண்ணை மூடிக்கொண்ட பூனைகள், ‘எல்லாம்’ தெரிந்த ஏகாம்பரங்கள், எதுவுமே தெரியாமல் கொக்கரிக்கும் காகிதப் புலிகள், ஆமைக்கறி நிபுணர்கள், ஃபோட்டோ ஷாப் போலிகள் என அத்தனை பேரின் மண்டை யிலும் நமது கருத்துக்கள் இடியென இறங்கும்.
பன்முக கருத்தரங்குகளின் தலைப்புகள்
கட்சியின் பல்வேறு தலையீடுகளைக் குறிக்கும் வகையில் “தேச விடுதலை போராட்டங் களில் கம்யூனிஸ்டுகள்”, “தொழில் வளர்ச்சி மற்றும் தொழிலாளர் பாதுகாப்பில் கம்யூனிஸ்டு கள்”, “சமூக ஒடுக்குமுறை எதிர்ப்பில் கம்யூ னிஸ்டுகள்”, “தமிழக வளர்ச்சியில் கம்யூனிஸ்டு கள்”, “சிறு குறு தொழில்கள் பாதுகாப்பில் கம்யூ னிஸ்டுகள்”, “அருந்ததியர் உள்ஒதுக்கீட்டில் கம்யூ னிஸ்டுகள்”, “கிராமப்புற வளர்ச்சியில் கம்யூ னிஸ்டுகள்” போன்ற தலைப்புகள் இடம்பெறு கின்றன. கம்யூனிஸ்டுகளின் வரலாறு என்பதே பெருமைக்குரிய வரலாறு. அதில் தஞ்சை மண்ணுக்குச் சிறப்பிடம் உண்டு. “தஞ்சை மண்ணில் கம்யூனிஸ்டுகளின் பெருமைமிகு வரலாறு” என்ற தலைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சுரண்டல் குறித்த விவாதங்கள்
இன்றைய மூலதனக் குவியல் அதிகரிப்பும், அதை ஒட்டி உழைப்புச் சுரண்டல் அதிகரிப்பும் நடந்துவரும் பின்னணியில், அது குறித்த தலைப்பும் இணைக்கப்பட்டுள்ளது. விவசாய நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முன்னுக்கு வந்துள்ள இக்காலத்தில், பல்வேறு மாவட்டங்களில் “நிலம் எமது உரிமை”, “வேளாண் நெருக்கடியும் தீர்வுகளும்”, “விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாடு”, “வசிப்பிட உரிமை”, “கோவில் நிலங்களும் பய னாளிகளின் உரிமைகளும்” போன்ற பல தலைப்பு களில் கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன.
வர்க்க அரசியலும் ஊரக பாட்டாளிகளும்
ஊரக வர்க்கப் போராட்டம் குறித்து மாநாட்டு ஆவணங்கள் வலுவாகப் பேசும் நேரத்தில், “ஊரகப் பாட்டாளிகளைத் திரட்டுவது” குறித்த தலைப்பும் இடம்பெறுகிறது. “வர்க்கங்களாய் திரட்டுவோம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கும் நடைபெறவிருக்கிறது.
மொழி உரிமையும் கூட்டாட்சியும்
மொழி திணிப்புப் பிரச்னையின் பின்புலத்தில், “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற தலைப்பும், கூட்டாட்சி கோட்பாட்டைப் பாதுகாக்கும் நோக்கில் “கூட்டாட்சியா காட்டாட்சியா” என்ற தலைப்பும் கருத்தரங்குகளில் இடம்பெறுகின்றன.
மோடி இந்தியா vs கம்யூனிஸ்டுகளின் இந்தியா
மோடி பேசும் புதிய இந்தியாவை அம்பலப் படுத்தும் விதமாக “கம்யூனிஸ்டுகளின் இந்தியா Vs மோடி இந்தியா” என்பது ஒரு கருத்தரங்கின் பேசு பொருளாக நிச்சயிக்கப்பட்டுள்ளது. “அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் தேவை” குறித்தும் தலைப்பு உள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை
“மோடியின் இந்தியாவில் பழங்குடி மக்களின் நிலை”, “பட்டியல் சமூக மக்களின் நிலை” ஆகிய தலைப்புகள் மிக அதிகமாக சுரண்டப்படும், ஒடுக்கப்படும் பகுதியினரைப் பாதுகாக்க வியூகம் வகுக்க உதவும்.
பண்பாட்டு பன்முகத்தன்மை
பண்பாட்டுத் தளம் குறித்த அம்சத்தில் இந்தியாவின் பன்மைத்துவத்தைக் குறிக்கும் விதமாக, “நூறு பூக்கள் மலரட்டும்” என்ற தலைப்பும், “தமிழ் இலக்கியங்கள் கூறும் பொதுவுட மைக் கருத்துக்கள்” என்ற தலைப்பும் ஆலோசிக்கப்பட்டுள்ளன. மாணவர்களையும் கல்வி நிலையங்களையும் இந்துத்துவ மையமாக மாற்றக்கூடிய “தேசிய கல்விக் கொள்கை” குறித்தும் ஒரு கருத்தரங்கு உள்ளது.
இந்துத்துவா வகுப்புவாத எதிர்ப்பு
தற்கால மிகப்பெரும் ஆபத்தான இந்துத்துவா வகுப்புவாதம் குறித்து பல்வேறு கருத்தரங்குகளில் விவாதிக்கப்படவுள்ளது.
சோசலிசமே எதிர்காலம்
“எதிர்காலம் சோஷலிசமே”, “சோசலிசமே மாற்று”, “இந்தியாவின் தேவை இடது மாடலே”, “இடது பக்கம் செல்க - சாலை விதி மட்டுமல்ல சமூக விதி” போன்ற தலைப்புகள் ஆட்களை மாற்றி ஆட்சியை மாற்றிப் பார்ப்பதல்ல இன்றைய தேவை, அரசியல் மற்றும் கொள்கை மாற்றமே தேவை என்பதை எடுத்துரைக்கின்றன.
பெண்களும் சோசலிசமும்
சமூகத்தின் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு சோஷலிசம் ஏன் தேவை என்பதை எடுத்து ரைக்கும் வகையில் “சோஷலிச முறைமையும் பெண்கள் பிரச்சனைகளும்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது.
குடும்பத்தோடு பங்கேற்பீர்!
கட்சியின் தலைவர்கள், கேரள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இடதுசாரி கருத்தாளர்கள், மாநில- மாவட்ட முன்னணித் தலைவர்களின் பங்கேற்புடன் இக்கருத்தரங்கு கள் நடைபெறவுள்ளன. அனைத்துக் கருத்துரை களையும் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இவற்றின் தொகுப்பு வரும் காலத்தில் மிகச்சிறந்த ஆவணப் பதிவுகளாக அமையும். கொள்கை திருவிழாவில் குடும்பத்துடன் பங்கேற்பீர்!