articles

img

இந்தியாவில் வெள்ளை ஏகாதிபத்தியம் வாழ்ந்த - வீழ்ந்த வரலாறு - பி.சம்பத் மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

இந்தியாவில் வெள்ளை ஏகாதிபத்தியம் வாழ்ந்த - வீழ்ந்த வரலாறு

ஏறத்தாழ 350 ஆண்டுகள் வெள்ளையர்கள் ஆதிக்கம் இந்தியாவில் இருந்தது. வணிகம் செய்வதற்காக இந்தியாவிற்கு வந்தவர்கள் ஒருகட்டத்தில் நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து காலனியாதிக்க ஆட்சியை நடத்தினார்கள். வெள்ளையர்கள் ஆதிக்கத்தை  துவக்கி வைத்தது

கிழக்கிந்திய கம்பெனி

தான். 1599ஆம் ஆண்டு செப்டம்பர் 24இல், 24 வணிகர்கள் இணைந்து லண்டனில் கூடி ஒரு வணிக நிறுவனத்தை உருவாக்கினார்கள். அதுதான் கிழக்கிந்திய கம்பெனி. கிழக்கிந்திய கம்பெனி அன்றைய பிரிட்டிஷ் ராணி எலிசபெத் அனுமதியோடு 1600 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24இல் கிழக்கிந்திய கம்பெனியின் வணிகர்கள் இந்திய உப கண்டத்திற்குள் நுழைந்தார்கள். கிழக்கிந்திய கம்பெனியில் 125 பங்குதாரர்கள் சேர்ந்து கணிசமான தொகையை மூலதனமாக முதலீடு செய்திருந்தனர். மிளகு, இஞ்சி மற்றும் பல வாசனைத் திரவியங்களைக் கொண்ட 500 காலன் நிறைந்த ‘ஹெக்டர்’ என்ற வணிகக் கப்பல் பம்பாய்க்கு அருகில் உள்ள சூரத் என்ற சிறிய துறை முகத்தை வந்தடைந்தது. அங்கிருந்து அக்கப்பலின் தலைவரும், பிரபல வணிகருமான ஆங்கிலேயர் தலைமையில் வணிகர்கள் ஆக்ரா நகருக்குள் நுழைந்தார்கள். இவர்கள் பிரிட்டிஷ் மகாராணியின் எழுத்துப்பூர்வமான அனுமதியுடன் வந்திருந்ததால் இவர்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போது இந்தியாவின் பல பகுதிகளில் மொகலாய மன்னர்கள் ஆட்சியிலிருந்தார்கள். மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் நான்காவது மன்னரான ஜஹாங்கீர் அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். கப்பலில் வந்த தலைமை வணிகரான ஆங்கிலேயரையும் இதர  வணிகர்களையும் மன்னர் ஜஹாங்கீர் மிக்க மரியாதை யுடன் வரவேற்றார். தலைமை வணிகருக்கு பரிசுப்  பொருட்கள் வழங்கியதோடு ஓர் அழகிய இளம்பெண்ணை யும் சேர்த்து ஒப்படைத்தார். அன்றைய வரவேற்பு கலாச்சாரம் அவ்வாறு இருந்தது போலும். ஆம், கிழக்கிந்திய கம்பெனியின் வணிக செயல்பாடு இந்நிகழ்வில் இருந்துதான் தொடங்கியது.

அதிகாரத்தை கைப்பற்றியது

பிறகு என்ன? கிழக்கிந்திய கம்பெனி வணிகம் இந்திய உபகண்டத்தில் கொடிகட்டி பறந்தது. மிகச்சில ஆண்டுகளில் கம்பெனியின் வணிகம் மட்டுமல்ல; அவர்களின் செல்வாக்கும் இந்திய சமூகத்தில் உயர்ந்தது. அது அரசியல் செல்வாக்கு பெருமளவுக்கு நிலைமையை உருவாக்கியது. அப்போது மொகலாய சாம்ராஜ்யத்தில் இருந்த குறுநில மன்னர்களுக்குள் கிழக்கிந்திய கம்பெனியின் வணிகர்களும், அதிகாரிகளும் நுழைந்து சமரசம் செய்து அரசியல் செல்வாக்கு மட்டுமல்ல; பிரதேசங்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஏற்றார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகள் குறுநில மன்னர்களுக்கு வழிகாட்டுபவர்களாக மட்டுமல்ல; அவர்களையே நிர்வகிப்பவர்களாக மாறினார்கள். படிப்படியாக அவர்களின் ஆட்சிப் பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுமைக்குள் வந்தன. வணிகம் செய்ய வந்தவர்கள் ஆட்சியாளர்களாக மாறினார்கள். இப்பின்னணியில் கிழக்கிந்திய கம்பெனி தனக்கென ஒரு தனிப்படையை உருவாக்கிக் கொண்டது. அப்படையை வழிநடத்த உருவான முதல் தளபதி தான் ராபர்ட் கிளைவ். 1757 பிளாசி யுத்தத்தில் கிழக்கிந்திய கம்பெனி யின் ஆட்சிக்கு இடையூறாக இருந்த நவாப்பையும் அவனது படைகளையும் விரட்டியடித்ததில் ராபர்ட் கிளைவுக்கு முக்கியப்பாத்திரம் உண்டு.

ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றம்

இதன்பிறகு இந்திய நாடு முழுவதும் கிழக்கிந்திய கம்பெனியின் வணிகம் மட்டுமல்ல; அதன் ஆட்சியும் பரவியது. ஏறத்தாழ 1757இல் தொடங்கி ஒரு நூற்றாண்டுக்குள் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் மிகப்பரவலான பகுதிகளில் தனது ஆட்சிப்பொறுப்பை கொண்டு வந்து மொகலாய சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்டியது. தங்களது ஆட்சியை நிலைநிறுத்த கவர்னர்கள் மற்றும் தளபதிகளை நியமித்துக் கொண்டது. ஆட்சி நிர்வாகத்திற்கு என அதிகாரிகள் மற்றும் வரிவசூலை கணக்கிடுவதற்கென கணக்காயர்களையும் நியமித்துக் கொண்டது.

ஏகாதிபத்திய நேரடி ஆட்சி

இது ஏதோ கிழக்கிந்திய கம்பெனி தானாக ஏற்படுத்திக் கொண்ட ஆட்சி ஏற்பாடு அல்ல. இதன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு துணை நின்றது. பிரிட்டிஷ் அரசு தன் சொந்த காலனியாதிக்க அரசை இந்தியாவில் ஏற்படுத்திக் கொள்வதற்காக படிப்படியாக செய்து கொண்ட நிர்வாக ஏற்பாடு இது. இதில் ஒளிவுமறைவு ஏதுமில்லை. இது குறித்து பிரிட்டனின் அரசியல் நிபுணர் ஹேஸ்டிங்ஸ் 1818லேயே வெளிப்படையாக கூறியதாவது;  “ஒரு சந்தர்ப்பத்தில் மறைமுகமாக அல்ல, நேரடியான பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கம் பிரிட்டனின் நலன் அடிப்படையிலான கொள்கை அடிப்படையில் இந்தியாவில் வந்தே தீரும் என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம்”. ஹேஸ்டிங்சின் கூற்று இந்தியாவில் நடந்தேறவும் செய்தது. 1857இல் முதல் விடுதலைப்போர் என சித்தரிக்கப்பட்ட சிப்பாய்க் கலகம் நடந்த போது அதனை முழுமையாக ஒடுக்கி  தனது நேரடியான ஆட்சியை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு கொண்டு வந்தது. அப்போது பிரிட்டனின் மகாராணியாக விக்டோரியா இருந்தார். 258 ஆண்டு கால கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை வெள்ளை ஏகாதிபத்தியம் ரத்து செய்துவிட்டு தனது சொந்த ஆட்சியை கொண்டு வந்தது. இதன் பிறகு உலகமெங்கும் பிரிட்டனின் ஆதிக்கம் பற்றி பெருமையாக பேசப்பட்டது. பிரபல சர்வதேச கவிஞன் ருட்யார்டு பின்வருமாறு கேலியாக குறிப்பிட்டான். “வெள்ளை நிற ஆங்கிலேயர்கள் எவ்வித சட்டமும் இல்லாமல் உலகை ஆள பிறந்தவர்கள்.”

எதேச்சதிகார அரசு கட்டமைப்பு

அப்போதைய இந்திய மக்கள் தொகை 40 கோடி. உலகில் ஜனத்தொகை அதிகம் உள்ள இரண்டாவது பெரிய நாடு. இவர்கள் அனைவரும் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டார்கள். இந்திய ஆட்சிப்பொறுப்பை நிர்வகிக்க விக்டோரியா மகா ராணியின் பிரதிநிதியாக வைசிராய் நியமிக்கப்பட்டார். இந்திய மக்களை மட்டுமல்ல; இந்தியாவின் வளங்களையும் செல்வங்களையும் அபகரிக்கும் வகையில் அந்த ஆட்சிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே இந்தியாவை நிர்வகிக்க 2000 ஐ.சி.எஸ். (தற்போது ஐ.ஏ.எஸ்.) அதிகாரிகள் கலெக்டர்களாக நியமிக்கப்பட்டார்கள். 60 ஆயிரம் பிரிட்டன் ராணுவ வீரர்கள், இவர்களோடு இணைந்து செயல்பட 2 லட்சம் இந்திய ராணுவ வீரர்கள் கொண்ட பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவம் உருவாக்கப்பட்டது. முப்படை தளபதிகள் மட்டுமல்ல; அவர்களுக்கு கீழ் 10 ஆயிரம் ராணுவ அதிகாரிகள் செயல்பட்டார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் 250 ஆண்டுகள் அரசாட்சியில் ஏராளமான பிரச்சனைகள் - சிரமங்கள் - கலகங்கள் நிகழ்ந்தன. பல சிற்றரசர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக கலகம் செய்த வரலாறு உண்டு. இவை எதுவும் நிகழக் கூடாது என்ற முறையில் வெள்ளை ஏகாதிபத்தியம் இந்திய காலனியாதிக்க அரசமைப்பை ஏற்படுத்தியது. அதிகார வர்க்கம் பெயரளவிலான நாடாளுமன்றம் - ஏகாதிபத்திய ஆட்சியை நியாயப்படுத்தும் நீதிமன்றங்கள் - எதிர்ப்பை ஒடுக்க ராணுவம் மற்றும் போலீஸ் என அரசின் நான்கு அங்கங்களும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. நீண்ட காலம் வெள்ளை ஏகாதிபத்தியத்தால் இந்தியாவை எப்படி ஆள முடிந்தது என்பதற்கு ஒரு பகுதி  பதிலே இந்த ‘அரசு இயந்திர’ ஏற்பாடு. இந்த அரசு  இயந்திரத்திற்கு துணையாக ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு  பகுதிகளில் அதிகாரத்தை கையில் வைத்திருந்த  முன்னாள் அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள், ஜமீன்தார்கள், நிலப்பிரபுக்கள் வெள்ளை ஏகாதி பத்தியத்தின் எடுபிடிகளாகச் செயல்பட்டார்கள். இதுபோக இந்தியாவின் பல அறிவு ஜீவிகளை மடக்கி அவர்களுக்கு ‘சர்’ பட்டம் உட்பட பல பதவிகளை அளித்து தேசத்துரோகம் செய்ய வைத்து தங்களுக்கு விசுவாசமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தியாவின் கல்வி முறையை - இளம் தலைமுறையினர் ஆங்கிலேய ஆட்சியை அங்கீகரித்து செயல்படும் முறையில் - உருவாக்கிக் கொண்டார்கள். வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சியை நிலைநிறுத்த உதவும் அரசியல் சட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

மக்களை பிளவுபடுத்திய  சாதி - மத அமைப்புகள்

இதற்கு மேல் இந்தியாவில் இருந்த (இன்றைக்கும் இருக்கிற) ஏற்றத்தாழ்வு உள்ள சமூக கட்டமைப்புகள் மக்களை ஒன்றுபடவிடாமல் தடுத்து வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு பெரிதும் துணை நின்றன. ஆம். உலகின் வேறு எங்கும் காணப்படாத - இந்திய உப கண்டத்தில் மட்டுமே நிலவும் இந்திய சாதி அமைப்பு கோடிக்கணக்கான மக்களை ஏற்றத்தாழ்வு உள்ள வர்களாக்கி மக்களின் ஒற்றுமையை சிதைத்தது. வெள்ளையர் ஆதிக்கம் நீடிக்கத் துணைநின்றது. சாதிய ஏற்றத்தாழ்விற்கு எதிராக சில சட்டங்கள் மற்றும் சாகச ஏற்பாடுகளை வெள்ளை ஏகாதிபத்திய அரசு செய்தபோதிலும் இந்திய சாதியமைப்பு நிலைகுலையாமல் பார்த்துக் கொண்டது. மறுபுறம், இந்தியாவில் செயல்பட்ட மதவெறி அமைப்பு கள் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு வெண்சாமரம் வீசின என்றால் அது மிகையானதல்ல. 1925இல் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., அதையொட்டி உருவான இந்து மகா சபை இவற்றின் தலைவர்களாகவும், வழிகாட்டி களாகவும் செயல்பட்ட கோல்வால்கர், ஹெட்கேவர், சாவர்க்கர் போன்றவர்கள் பரப்பிய (கக்கிய) விஷமக் கருத்துக்கள் மக்களை மத அடிப்படையில் பிளவுபடவும், வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணி திரளாமல் தடுக்கவும் பெரிதும் உதவின. மக்களை மத அடிப்படையில் துண்டாட தன் பங்கிற்கு செயல்பட்டன முஸ்லீம் லீக் உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள்.

எழுச்சியை தடுக்க முடியவில்லை

வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சி 358 ஆண்டுகள் இந்தியாவில் நீடிக்க மேற்சொன்ன அதிகாரக் கட்டமைப்புகளும், சமூகச் சூழலும் உதவின என்பது உண்மை தான். ஆயினும், இவையனைத்தையும் பின்னுக்குத்தள்ளி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கோடானு கோடி மக்களின் பேரெழுச்சியும், ஆவேசமான போராட்டங்களும் உருவானதை அவற்றால் தடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை வரலாறு. இங்கு விஞ்ஞானப் பூர்வமான தொழில் வளர்ச்சி ஏற்படுத்திய விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும். வெள்ளை ஏகாதிபத்தியம் தனது லாப வேட்டைக்காக இந்தியாவில் பிரம்மாண்டமான தொழில் நிறுவனங்களையும், நீண்ட நெடும் இருப்புப் பாதைகளையும் உருவாக்கியது. இவற்றில் வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நவீன வர்க்கம் என்ற முறையில் சுரண்டலுக்கு எதிராக ஆவேசத்துடன் கொதித்தெழுந்த நிகழ்வுகள் பிரிட்டனை நிலை குலைய வைத்ததை பிற்காலத்தில் கண்டோம். மாமேதை மார்க்ஸ் தான் வாழ்ந்த காலத்திலேயே இந்தியாவில் ஏற்பட்ட இந்த வளர்ச்சிப் போக்கையும் அது பிரிட்டன் ஆதிக்கத்திற்கு எதிராக உருவாக்க இருக்கும் ஆபத்து குறித்தும் தொலைநோக்கு பார்வையுடன் குறிப்பிட்டதை நாம் அறிவோம். “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது லாப வேட்டைக்காக உருவாக்கி வரும் நவீன தொழில்கள் மற்றும் இருப்புப் பாதைகள்  மூலம் அதற்கு சவக்குழி தோண்டும் தொழிலாளி வர்க்கத்தையும் கூடவே உருவாக்கி வருகிறது” என்பதை மார்க்ஸ் மிக அற்புதமாகக் குறிப்பிட்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பன மாக தொழிலாளி வர்க்க எழுச்சி பிற்காலத்தில் அமைந்ததை முந்தைய பகுதிகளில் நாம் பார்த்தோம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சீர்திருத்தவாதிகளால் உருவாக்கப்பட்ட ஏஐடியுசிக்குள் நுழைந்து செயல்பட்டு அதன் தலைமையை கைப்பற்றியதையும் ஆளும் வர்க்கம் அச்சம் அடையும் வகையில் வர்க்கப் போராட்டங்கள் அக்காலத்தில் நடந்தேறியதையும் இந்த வளர்ச்சிப்போக்கோடு இணைத்து பார்க்க வேண்டும்.

காங்கிரசின் குணாம்சம்  மாற்றப்பட்ட பின்னணி

இந்தியாவில் காங்கிரஸ் இயக்கம் உருவானதில் இங்குள்ள சீர்திருத்தவாதிகளோடு சில வெள்ளையர் களுக்கும் பங்கு உண்டு. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மக்களுக்கு ஏற்படும் அதிருப்திக்கு வடிகால் ஏற்படுத்துவதே இதன் துவக்க நோக்கமாக இருந்தது. மக்களின் அதிருப்தியையும் கோரிக்கைகளையும் மனுக்கள் தயாரித்து அதிகார வர்க்கத்திற்கு கொடுக்கும் பணியையே காங்கிரஸ் ஆரம்ப காலத்தில் செய்தது. ஆனால், தேச பக்த சக்திகளும், முற்போக்காளர்களும் காங்கிரசுக்குள் நுழைந்து வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக விடுதலைக்குப் போராடும் பேரியக்கமாக அதனை மாற்றிவிட்டதை வரலாறு கண்டது. கம்யூனிஸ்ட் இயக்கம் தடைசெய்யப்பட்ட காலத்தில் அதன் உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்து அக்கட்சியின் போர்க்குணத்தை வளர்த்தெடுப்பதில் முக்கியப்பாத்திரம் வகித்தார்கள். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவானதில் கம்யூனிஸ்ட்டுகளின் பாத்திரம் பிரதானமானதாக இருந்தது. மேற்கண்ட பின்னணியில் வெள்ளை ஏகாதிபத்தி யத்திற்கு சாதகமான அனைத்து அம்சங்களையும் தவிடு பொடியாக்கி இந்திய விடுதலையை சாத்தியமாக்கின விடுதலைப் போராட்ட இயக்கங்கள். இந்த விடுதலைப்போராட்ட இயக்கத்தில் சீர்திருத்தவாதிகள் துவங்கி புரட்சியாளர்கள் வரை பலதரப்பினரும் இணைந்து மாபெரும் சமுத்திரமாய் உருவெடுத்தார்கள். அந்த மகா சமுத்திரத்தில் வெள்ளை ஏகாதிபத்தியம் மூழ்கடிக்கப்படுவதையும் நாடு விடுதலை பெறுவதையும் எந்த சக்தியும் தடுக்க முடியவில்லை. அது நடந்தேறிவிட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. ஆம்!. வரலாற்றை ஒருபோதும் பின்னுக்குத் தள்ள முடியாது.

தேசப்பிரிவினை - மதக்கலவரங்கள்

ஆயினும் இந்திய விடுதலையையொட்டி நாடு மதத்தின் பெயரால் பிரிவினை செய்யப்பட்டதானது ஒரு சோக நிகழ்வாகும். அதுமட்டுமல்ல; இந்த தேசப்பிரி வினையையொட்டி ஏற்பட்ட மதக்கலவரங்களால் லட்சோப லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். லட்சோபலட்சம் குடும்பங்கள் உடைந்தன. தாய் தந்தையரிடமிருந்து பிள்ளைகளும், பிள்ளைகளிடமிருந்து பெற்றோரும் சகோதர சகோதரிகளும் பிரிக்கப்பட்டார்கள். இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் மிக சோகமான கோர நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. இந்த தேசப்பிரிவினையை இதையொட்டிய மதக்கலவரங்களை தடுக்க நடந்த முயற்சிகள் எவை?. பாகிஸ்தான் மதச்சார்பு நாடாக மாறிய போது, இந்தியா மதச்சார்பற்ற நாடாக பரிணமித்தது எப்படி?. இதில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் பங்கு என்ன?. இதில் கம்யூனிஸ்ட்டுகள் வகித்த பாத்திரம் என்ன?. - இவையனைத்தையும் அறிந்து கொள்வது மட்டுமல்ல, பரிசீலிப்பதும் அவசியமானதாகும்.