தொகுதிகளை குறைக்கும் சூழ்ச்சி கூட்டாட்சி மீது தொங்கும் கத்தி
இந்திய ஒன்றியம், மிக சூழ்ச்சிகரமான ஒரு பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கிறது. 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற இடங்களை மறுவரை யறை செய்யக் கூடிய நடைமுறை ‘தென் மாநி லங்களின் தலை மேல் கத்தி’ என்று தமிழ்நாடு முத லமைச்சர் எச்சரித்துள்ளார். ஆம், அது உண்மை யில் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பிற்கே ஒட்டுமொத்தமாக வைக்கப்பட்ட குறி ஆகும்.
தொகுதி மறுவரையறை பிரச்சனை
1976ஆம் ஆண்டில், 42ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம், இந்தியாவின் தொகுதி மறுவரை யறை செயல்முறை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அரசின் திட்டப்படி மக்கள் தொகை யைக் கட்டுப்படுத்தும் மாநிலங்களை தண்டிக்கக் கூடாது என்பதுதான் இந்த முடிவின் அடிப்படை ஆகும். மீண்டும் ஒரு அரசியல் சட்ட திருத்தம் மூலம் இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டு 2026 வரை தீர்மானிக்கப் பட்டது. ஆனால், மக்கள்தொகை கட்டுப்பாட்டு இலக்கில் எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரி முன்னேற வில்லை. முறையான சுகாதாரக் கட்டமைப்பு, மனித வளக் குறியீடுகளில் முன்னேற்றம், மக்கள் நலத் திட்டங்களின் செயலாக்கம், பொருளாதார மேம்பாடு ஆகிய அம்சங்களில் சாதித்த மாநிலங்களே இலக்கை நோக்கி முன்னேறின. இந்தியாவில் காணப்பட்ட இந்தப் போக்கு, நம் நாட்டுக்கு மட்டும் தனித்துவ மான ஒன்றல்ல, உலக நாடுகள் பலவும் இதே போன்ற விளைவுகளைப் பார்த்தன. இப்படியான சூழலில், ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியும் வேறுபட்ட மக்கள் தொகையைக் கொண்ட நிலைமை உருவானது. இதனால், ஒவ்வொரு நாடாளுமன்ற இடமும், வேறுபட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்களை பிரதி நிதித்துவப்படுத்தின. எனவே ‘ஒரு வாக்கு, ஒரு மதிப்பு’ என்ற கோட்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்ட தாக கருத்து எழுந்தது. இந்தப் பிரச்சனைக்கு சட்ட ரீதியாக முன்வைக்கப்பட்ட தீர்வுதான், 2026ஆம் ஆண்டுக்குப் பிறகான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். அதன் முடிவுகள் வெளியான உடனே, தொகுதி மறு வரையறை செய்யப்படலாம் என்பது ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறை. ஆனால், இயல்பான போக்கில் இந்த மாற்றங்கள் நடந்திருந்தால், 2035 ஆம் ஆண்டு வாக்கில் தான் தொகுதி மறு வரையறை பற்றிய விவாதம் நடந்திருக்கும். அப்போதும் கூட, மாநிலங்களுடைய மக்கள் தொகையோடு, மனித வளக் குறியீடுகளையும் உள்ள டக்கிய ஒரு சூத்திரத்தை வகுக்க வேண்டும் என்ற விவாதம் எழுந்திருக்கக் கூடும். அந்த விவாதங்கள் இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்களை வலுப்படுத்து வதற்கு என்ன செய்யலாம் என்று அமைந்திருக்கும். ஆனால் பாஜகவின் சூழ்ச்சிகரமான செயல்பாடுகள், தொகுதி மறுவரையறைச் செயல்பாடே ஒரு அபாயம் என்று ஆக்கியிருப்பதுடன், இதற்கு எதிரான கிளர்ச்சிக்கும் வித்திட்டுள்ளன.
பாஜக செய்த சூழ்ச்சிகள் என்ன?
தொகுதி மறுவரையறைப் பிரச்சனைக்கும், 2026க்குப் பிறகான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் உள்ள தொடர்பை வைத்து தந்திரமாக அரசியல் கணக்குப் போட்ட பாஜக, 2021 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடர்ந்து தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது. இந்த காலகட்டத்தில் அதன் மற்ற திட்டங்களை மட்டும் வேகப்படுத்தியது. அதன்படி பழைய நாடாளுமன்றத்தை காட்சிப் பொருளாக மாற்றிவிட்டு, புதிய நாடாளுமன்றம் ஒன்றை கூடுதலான இருக்கைகளோடு கட்டமைத் தார்கள். ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற திட்டத்தை உருவாக்கி, அதன் செயல்முறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுத்தார்கள். ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற திட்டம் வாக்காளர்களின் அதி காரத்தையே பறிக்கப் போகிறது என்பது கூடுதல் ஆபத்தான அம்சம் என்றாலும், அது மாநிலங்களை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்பதே உடனடிப் பிரச்சனை ஆகும். இவ்வாறு தேர்தல் நடைமுறையை மாற்றியமைக்க தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக அறிவிக்கச் செய்தார்கள். அதற்கான சட்ட வரைவை உருவாக்கினார்கள். அண்மையில், தேர்தல் ஆணையர் நியமன விச யத்தில், உச்சநீதிமன்ற தலையீட்டுக்கே இடம் கொடுக்காமல், ஆணையர்கள் நியமனத்தை தம் விருப்பப்படி செய்து முடித்தார்கள். போதாக் குறைக்கு நேர்மையற்ற முறையில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றி, அதிலும் தொகுதி மறுவரையறையை ஒரு நிபந்தனையாக சேர்த்துக் கொண்டார்கள். இப்படியான சூழலில், 2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை வந்தது. அதில் மக்கள் தொகை கணக் கெடுப்பிற்காக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பை பாஜக 2026 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒத்திப் போட்டிருக்கும் திட்டம் வெளிப்படையானது. மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திப்போன பின்னணியில் அரசியல் தேவைக்காக பல்வேறு புள்ளிவிபர கணக்கீடுகளையும் விருப்பம் போல வளைத்துக் கொள்ள முடியும் என்று பாஜக கருது கிறது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தை மோச மாகக் கையாண்ட பாஜக ஆளும் மாநிலங்களின் உண்மையான இறப்பு விகிதம் வெளியில் தெரியா மல் மறைக்க முடியும்; இத்துடன் கூடுதலாக, மிக மோசடியான முறையில் தொகுதி மறுவரையறையை விரைவாக்கி, நாட்டின் கூட்டாட்சி அமைப்பையே ஒட்டுமொத்தமாக பலவீனமாக்கலாம் என்பதுதான் பாஜகவின் திட்டம்.
கூட்டாட்சியின் தலைமீது கத்தி
2026 ஆம் ஆண்டுக்கு பிறகு எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்தால் தமிழ்நாடு (8), கேரளா (8), ஆந்திரா + தெலுங்கானா (8), கர்நாடகா (2) என தென்மாநிலங்கள் மட்டும் 26 தொகுதி களை இழப்பதுடன்; உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் இப்போதிருப்பதிலிருந்து கூடுதலாக 27 தொகுதிகள் அமையும் என மேக்மில்லன் கணக்கீட்டின் படி தெரிகிறது. ஒருவேளை தொகுதி களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதன் மூலம் நிலைமையை சமாளிக்க முயற்சித்தால் தமிழ்நாட்டிற்கு 9 தொகுதிகள் அதிகரித்து, 48 ஆகும்; தென் மாநிலங்களில் மொத்தமாக 164 தொகுதிகள் இருக்கும்; ஆனால் உ.பி., ஒரு மாநிலத்தில் மட்டுமே 143 தொகுதிகள் இடம்பெறும். எப்படிப் பார்த்தாலும் கங்கைச் சமவெளியை ஒட்டிய சில மாநிலங்களில் இருந்தே நாட்டின் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகும். எனவே, இது தென் மாநிலங்களின் குரலை, பிரதிநிதித்துவத்தை பலவீனமாக்கும் என்பதில் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மேக்மில்லன் கணக்கீட்டை இன்னும் ஆழமாக பார்த்தால், யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றிலும் எண்ணிக்கை உயராது என்பது தெரிகிறது. குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநி லங்களில் மட்டுமே பிரதிநிதித்துவம் குவிந்துவிடும் என்பது தெரிகிறது. எனவே, இந்த கத்தி இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை மிகக் கொடூரமாக சிதைக்கும்.
தீர்வு என்ன?
உண்மையில், இப்போது தொகுதி மறுவரை யறைக்கான தேவையை வற்புறுத்தும் முதல் காரணம், ஒவ்வொரு பிரதிநிதியும், ஒரே அளவான வாக்குகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதாகும். ஆனால், ஒரு வாக்குக்கான மதிப்பை குறைக்கும் முக்கியமான அம்சம் தொகுதியின் மக்கள் தொகை அல்ல; பதிவாகும் வாக்குகளில் கூடுத லான வாக்கு பெறக்கூடியவரே அனைவருக்குமான பிரதிநிதி என்கிற அமைப்பு முறைதான். வெற்றிபெற்றவரை எதிர்த்து அளிக்கப்பட்ட வாக்கு கள், இந்த முறையில் செல்லாமல் போய் விடுகின்றன. அனைவருக்குமான பிரதிநிதியாக ஒரு உறுப்பினர் இயங்காதபோது, அவரை தண்டிக்கவோ, திரும்பப் பெறவோ இந்த முறையில் வழி ஏதும் இல்லை. எனவே, விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தலை நோக்கி செல்வதுதான் அதற்கு தீர்வாக அமைந்திடும். சில நாடுகளில் ஒரு வாக்காளர் தமக்கு விருப்ப மான வேட்பாளர்களை வரிசைப்படுத்தி வாக்க ளிக்கும் முறையும் அமலில் உள்ளது. இந்த முறை யில் தேர்தலை மாற்றியமைப்பதும், மக்களின் விருப்பத்தை சரியாக பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்றங்களும், நாடாளுமன்ற அவைகளும் உருவாக வழிவகுக்கும். தேர்தல் முறையில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதுடன், ஒன்றிய அரசிடம் குவிந்திருக்கும் அதிகாரங்களை பரவலாக்கி, மாநிலங்களை வலி மைப்படுத்துவதும் தீர்வின் மற்றொரு பகுதியாகும்.
நவபாசிசம் விட்டு விடுமா?
ஆனால், ஆக்கப்பூர்வமான விவாதங்களே நடக்காத வகையில் ஒற்றை ஆட்சித் திணிப்பை நோக்கி பாஜக/ஆர்.எஸ்.எஸ் பயணிக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு சற்று முன்னதாக நாட்டில் சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய மோடி ஆட்சி திணித்தது. அதனோடு சேர்த்தே தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை உருவாக்கவும் பாஜக அரசு திட்டமிட்டது. அதன் நோக்கம், இந்தியாவில் மத அடிப்படையில் குடியுரிமையை புகுத்தி, அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நிலை குடிமக்களை உருவாக்குவதும், வதை முகாம்களை கட்டமைத்து நடைமுறைக்கு கொண்டுவருவதுமே ஆகும். ஹிட்லரின் பழைய பாணி பாசிசத்தை நினைவூட்டும் இந்த நடவடிக்கையை இந்தியா ஒரே மூச்சாக எதிர்த்தது; மூவர்ணக் கொடியை ஏந்தியபடி கிளர்ந்து போராடியது. அப்போதைக்கு தன்னுடைய திட்டத்தை சற்று தள்ளிப் போட்ட பாஜக அரசு, சி.ஏ.ஏ சட்டத்தை அரசித ழில் வெளியிட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் அவர்களின் மமதைக்கு வேட்டு வைத்தன. கூட்டாட்சி விருப்பமும், அதிகாரப் பரவ லுக்கான வேட்கையும் வலுவாக இருக்கும் வரை, எதேச்சதிகார திட்டம் செல்லாது என்று புரிந்து கொண்ட பாஜக இப்போது அந்தக் கட்டமைப்புக்கே வேட்டு வைக்க என்ன வழி என்று பார்க்கிறது. அதற் கான ஆயுதமாகத்தான் அவர்கள் நாடாளுமன்ற இடங்களின் மறுசீரமைப்பை பார்க்கிறார்கள். இதன் மூலம், பாஜகவுக்கு வாய்ப்பான சில மாநிலங்களுக்கு ள்ளாகவே அரசியல் பிரதிநிதித்துவத்தை குவித்துக் கொள்ள முடியும். மக்கள் ஒற்றுமையும், ஒன்றுபட்ட எதிர்ப்புமே இந்த சூழ்ச்சிகரமான திட்டத்தை தூள் தூளாக்கிடும்.