articles

img

‘பூசாரியாயிருந்து புரட்சிக்காரனாக’ - எல்.சுந்தரராஜன்

‘பூசாரியாயிருந்து புரட்சிக்காரனாக’ - எல்.சுந்தரராஜன்'

தமிழக கம்யூனிஸ்ட் இயக்க தலை வர்களில் தோழர் அரிபட்டும் ஒருவர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர், கட்டுப்பாட்டுக்குழு தலைவர், ஒன்றாயிருந்த தருமபுரி மாவட்டக்குழு செயலாளர், சென்னை மாவட்டக்குழு உறுப்பினர், இந்திய தொழிற்சங்க மையத்தின்(சிஐடியு) நிர்வாகக்குழு உறுப்பினர் என்று பல்வேறு பொறுப்பு களை ஏற்றுச் செயல்பட்ட தோழர் அரிபட் ஆவார்.  1953ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் மூன்றாவது அகில இந்திய மாநாட்டிலேயே தமிழ்நாட்டின் பிரதிநிதி யாக பங்கேற்றவர். கட்சிக்குள் ஏற்பட்ட தத்துவார்த்தப் போராட்டத்தின் காரண மாக பிளவு ஏற்பட்ட போது நடைபெற்ற ஏழாவது மாநாட்டிலும் பிரதிநிதியாகப் பங்கேற்றவர். சென்னை நகரத்தில் தோழர்கள் வி.பி.சிந்தன், பி.ஆர்.பர மேஸ்வரன், கே.கஜபதி போன்ற தலை வர்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டி அமைப்பதில் முக்கிய பங்காற்றிய தோழர்.  கேரளாவில் தனது குடும்பம் வசித்து வந்த பகுதியை பிரிட்டிஷ் அரசு இராணு வத் தேவைக்காக எடுத்துக் கொண்டதை யொட்டி அவரது குடும்பம் பாலக்காடு மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்தது.

அங்கு தனது உறவினர் ஒருவருடன் கோவில் பூசாரியாக இருந்துள்ளார். பிறகு வறுமை யின் காரணமாக ஆந்திராவிற்கு சென்று ஓட்டல் தொழிலாளியாக வேலை செய்து அங்கு ஏற்பட்ட தொடர்பின் காரணமாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியவர். தெலுங்கானாவில் நிஜாம் மன்னன் மற்றும் நிலப்பிரபுக்களுக்கு எதிராக ஆயுதந்தாங்கி விவசாயிகள் போராடிய போது கட்சியின் வேண்டுகோளை ஏற்று தெலுங்கானாவிற்குச் சென்று விவசாயிக ளுக்கு ஆதரவான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.  பிறகு சென்னைக்கு வந்து பாரி முனை ஆரியபவன் ஓட்டலில் தொழிலா ளியாக வேலைக்குச் சேர்ந்தார். வேலை செய்து கொண்டே சிலம்பம், தீப்பந்தம் வீசுதல், சுழல் கத்தி வீசுதல், கத்திச் சண்டை போன்ற பயிற்சிகளை மேற் கொண்டார். இதன் காரணமாக எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த ராஜமுக்தி படத்தில் அவருக்குப் பதிலாக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார்.  

ஆரியபவனில் வேலை செய்யும் போது ஓட்டல் தொழிலாளர்களை சங்க ரீதி யாக அணிதிரட்டுவதற்கு முயற்சித்தார். சங்கம் என்றாலே பயந்த தொழிலாளர்க ளை தொழிலாளர் பாதுகாப்பு நிதி என்று ஒன்று சேர்ப்பதற்கு முயற்சித்தார். அங்கு ஏற்கனவே வி.ஜி.ராமசாமி அவர்கள் தலைமையில் செயல்பட்டு வந்த ஓட்டல் தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்தார். அந்த சங்கத் தலைமையின் ஜனநாயக விரோத செயல்பாட்டின் காரணமாக கட்சியில் முடி வெடுத்து அந்த சங்கத் தலைமையை  கைப்பற்றுவதென்று முடிவெடுத்து தோழர் அரிபட் சங்கப் பொதுச்செயலா ளராக  போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓட்டல் தொழிலாளர்களுக்கென்று குறைந்தபட்ச சம்பளம் மற்றும் பஞ்சப்படி ஆகியவற்றிற்கு சட்டம் உருவானதென் றால் அதற்கு அரிபட் முக்கிய காரணமா கும். தொழிலாளர் நீதிமன்றத்தில் வாதாடு வதிலும் நிபுணராவார். சென்னையில் பெரிய நிறுவனங்களுக்காக வாதாடும் கிங் அன்ட் பேட்ரிக் என்ற குழுமத்திலிருந்த  பெரிய வழக்கறிஞர்களை எதிர்த்து வாதாடி பல்வேறு தீர்ப்புகளை தொ ழிலாளர்களுக்காக பெற்றுத் தந்தவர். அதன் பிறகு ஓட்டல் தொழிலாளர் சங்கம் சென்னையில் பலமான சங்கமாக மாறியது.  ஓட்டல் தொழிலாளர்கள் சங்கத்திற்கு பிறகு போக்குவரத்து தொழிலாளர்கள், கிண்டி, அம்பத்தூர், பெருங்குடி தொழிற் பேட்டை தொழிலாளர்கள், ஒமேகா கேபிள்ஸ், வாவின் இந்தியா, சவுத் இந்தியா கார்ப்பரேசன், இந்தியா ரேடி யேட்டர்ஸ், சிவானந்தா ஸ்டீல்ஸ், எஸ்.ஆர்.பி டூல்ஸ், டிரான்ஸ்பார்ம் ஸ்விட்ச் கியர், டேப்ளட்ஸ் இந்தியா மற்றும் பல்வேறு தொழிற்சாலை சங்கங்களுக்கு தலைமை தாங்கி தொழிலாளர்களை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் ஈர்த்த தோ ழர்களில் முக்கியமானவர். பின்னி மில்,  மெட்டல் பாக்ஸ், எவரெடி, பின்னி பீச்  என்ஜினியரிங் போன்ற தொழிற்சாலை களில் உபதலைவராகவும் இருந்து செயல்பட்டவர்.

டிவிஎஸ், எம்.ஆர்.எப், டிஐ சைக்கிள் ஆகிய தொழிற்சாலைகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண வலி யுறுத்தி தோழர் அரிபட் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது. ஏழாவது நாளாக உண்ணா விரதப் போராட்டம் தொடர்ந்த போது அன்றைய அதிமுக ஆட்சியாளர்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு தீ வைத்து போராட்டத்தை முடக்க முயற்சித்தனர். அதைத் தொடர்ந்து மேற்படி போராட்டம் அரசியல் கட்சிகள் ஆதரித்த தமிழகம் தழுவிய போராட்டமாக மாறியது. இந்திய, சீன யுத்தத்தின் போது கம்யூ னிஸ்ட் இயக்கத் தோழர்கள் கைது செய் யப்பட்டனர். தோழர் அரிபட்டும் பாதுகாப்புக் கைதியாக கைது செய்யப் பட்டு வேலூர் மத்திய சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டார். எம்.ஆர்.எப் போராட் டத்தின் போது கைது செய்யப்பட்டு திருச்சியில் தனிமைச் சிறையில் அடைக் கப்பட்டார். 1975ஆம் ஆண்டு அவசர கால நிலையின் போது நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப் பட்டனர்.

தமிழ்நாட்டில் அப்போது திமுக ஆட்சி இருந்ததால்  எதிர்க்கட்சியினர் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு குடி யரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்டவுடன் எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர்கள் அனைவரும் தலைமறைவாகி னர்.  தோழர் அரிபட்டும் தலைமறைவாக இருந்து கொண்டே தொழிற்சங்கங்களு க்கு வழிகாட்டி வந்தார். மூன்று மாத கால மாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சவுத் இந்தியா கார்ப்பரே சன் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்காக தோழர் அரிபட் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காவ லர்கள் யாரும் இருக்கின்றார்களா என்று தோழர்களை முன்கூட்டியே பார்த்து வரச்சொல்லி விட்டு தொழிலாளர் நல அலுவலகம் போன போது அங்கு ரகசிய மாக சாதாரண உடையில் இருந்த காவல் துறை உயர் அதிகாரி தோழர் அரிபட்டை கைது செய்து சிறையில் அடைத்தார்.  சிறையில் அப்போது அரசியல் தலைவர்கள் சட்டை போட அனுமதிக்காம லும், கடுமையான தாக்குதலுக்கும் உள்ளானார்கள். தோழர் அரிபட் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், பெரிய தொழிற்சங்க தலைவர், அரசு போக்குவரத்து சங்கத்தில் அவரது சங்கம் பலமானது. அவருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் வெளியே பெரும் பிரச்சனைகள் உருவாகும் என்று கைது செய்த காவல்துறை உயர் அதிகாரி நேர டியாக தோழர் அரிபட்டுடன் சிறைச்சாலை க்கு வந்து ஜெயிலரைப் பார்த்து எச்ச ரித்து விட்டுப் போனார்.  தோழர் அரிபட் உள்ளே வந்ததை அறிந்து பக்கத்து அறையில் இருந்த நடிகர் எம்.ஆர்.இராதா  “கம்யூனிஸ்ட்டு காரன் வந்திருக்கான்டோய், இனிமேல் அவன் போராடுவான்டோய்” என்று கூறி யுள்ளார். அடுத்த நாள் காலையில் சிறை க்குள் முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, செ.குப்புசாமி, மேயர் சிட்டிபாபு, ஏ.வி.பி ஆசைத்தம்பி, பம்மல் நல்லதம்பி ஆகியோரைப் பார்த்துள்ளார். முரசொலி மாறன் அரிபட்டுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தாங்கள் தாக்கப்பட்டது குறித்தும், தங்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவ சிகிச் சைக்கு அனுமதிக்காதது குறித்தும் கூறியுள்ளனர்.

தோழர் அரிபட் சிறைக் கண்காணிப்பாளரிடம் பேசி அனைவருக் கும் அவரவர் உடையைத் தரச்சொல்லி யும் மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்துள்ளார். அதற்கு பிறகு அவர்கள் மீதான தாக்குதலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மிசா கைதிகள் தோழர் அரிபட்மீது பெரும் மரி யாதை கொண்டனர்.  தோழர் அரிபட் தமிழ், மலையாளம், கன்னடம், துளு, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளை பேசுபவராக இருந்த காரணத்தால் தருமபுரி மாவட்ட கட்சிப் பணிக்கு கட்சித் தலைமை செல்ல வேண்டுமென்பதை ஏற்று அங்கு சென்று கட்சி மற்றும் தொழிற்சங்கப் பணிகளை மேற்கொண்டார். கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளராக பொறுப் பேற்று செயல்பட்டார்.  கிருஷ்ணகிரியில் டாக்டர் அண்ணாஜி நடத்தி வந்த மக்கள் மருத்துவமனையை கட்சியின் மூலம் நடத்துவதற்கு முயற்சி எடுத்தார். ஓசூரில் செயல்பட்டு வந்த அசோக் லேலண்ட் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் சங்கம் அமைப்பதற்கு முயற்சி எடுத்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்து வறுமையில் உழன்றாலும் அநீதிக்காக வும், ஒடுக்குமுறைக்கெதிராகவும் போராடி வாழ்க்கை அனுபவத்தின் மூலம் கம்யூ னிஸ்ட்டாக மலர்ந்த  போராளி தோழர் அரிபட். சென்னை பாரிமுனை ஸ்ட்ரிங்கர் தெரு அலுவலகத்தை அறிந்தவர்கள் தோழர் அரிபட்டை அறியாமல் இருக்க முடியாது. தோழர் அரிபட் போன்ற தோழர்களின் தன்னலமற்ற தியாகத்தின் காரணமாகத்தான்  இன்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதை முன்னெ டுத்துச் செல்வது இன்றைய இளம் தோழர்களின் கடமையாகும்.