தேர்வாணையத்தின் அலட்சியமே குளறுபடிகளுக்குக் காரணம்!
தமிழ்நாட்டில் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகள், பல்வேறு நிர்வாகக் குளறுபடிகளால் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. 828 காலிப்பணியிடங்களுக்காக 18,467 தேர்வர்கள் எழுத இருந்த இந்தத் தேர்வு, வரலாற்றில் இல்லாத வகையில் தேர்வு நாளன்றே ரத்து செய்யப்பட்டது தேர்வாணையத்தின் நம்பகத்தன்மையைப் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
நிர்வாகத்தின் அலட்சியமும் மாணவர்களின் அலைக்கழிப்பும்
சென்னையில் 3,221 தேர்வர்கள் தேர்வு எழுதவிருந்த நிலையில், நந்தனம் அரசு கல்லூரியில் அமைய வேண்டிய மையத்திற்குப் பதிலாக, மாணவர்களின் நுழைவுச் சீட்டில் அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தவறு தேர்வு தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பே தெரியவந்தது. காலை 8:30 மணிக்குத் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டிய மாணவர்கள், 9:30 மணி வரை கல்லூரி வாசலில் தவித்தனர். கடைசி நிமிடம் வரை தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சத்திலும் பதற்றத்திலும் மாணவர்கள் உறைந்து போயினர். குளறுபடிகளைக் கண்டித்துத் தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், மாற்று மையத்திற்குச் செல்லப் போக்குவரத்து நெரிசல் தடையாக இருந்தது. “தொழில்நுட்பக் கோளாறு” என ஒற்றை வரியில் தேர்வாணையம் இதைக் கடந்து சென்றாலும், இதன் பின்னால் மாணவர்களின் பல ஆண்டுகால உழைப்பும், நம்பிக்கையும் சிதைந்துள்ளன. வெளிமாநிலங்களில் பணியில் இருந்து விடுப்பு எடுத்து, பெரும் பொருட்செலவில் தமிழ்நாட்டிற்கு வந்து தேர்வு எழுதக் காத்திருந்த மாணவர்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் எழுதும் தேர்விலேயே தேர்வு மையங்களைக் கூடச் சரிபார்க்க முடியாத அளவிற்குத் தேர்வாணையம் அலட்சியமாகச் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது.
தேசியத் தேர்வு முகமையின் பாணியில் செயல்படுகிறதா தமிழகத் தேர்வாணையம்?
ஒன்றிய அரசின் தேசியத் தேர்வு முகமை (NTA) துவங்கிய காலத்திலிருந்தே கல்வியை வணிகமயமாக்கி, வினாத்தாள் விற்பனை முதல் தேர்வு மைய ஒதுக்கீடு வரை மாணவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. நீட் (NEET), நெட் (NET) போன்ற தேர்வுகளில் அந்த முகமை செய்த அதே குளறுபடிகளை இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அண்டை மாநிலங்களுக்கு மாணவர்களை அலைக்கழிக்கும் தேசியத் தேர்வு முகமையின் போக்கிற்கும், இன்று தமிழகத் தேர்வாணையம் செய்துள்ள குளறுபடிகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இந்திய நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வரும் அந்த முகமையின் வரிசையில் இன்று தமிழகத் தேர்வாணை யமும் இணைந்திருப்பது மாணவ சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
அரசியல் ஆதாயம் தேடும் அதிமுக - பாஜக
தேர்வாணையக் குளறுபடிகள் வெளிவந்த உடனே அதிமுகவும் பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், இவர்கள் தொழில்நுட்பக் கோளாறுகளை மட்டும் பேசி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமைக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படும் போதோ, மாநிலத்திற்கான நிதி உரிமையைப் பறிக்கும் போதோ அதிமுகவும் பாஜகவும் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக, தேசியத் தேர்வு முகமை செய்த குளறுபடிகளுக்கு எதிராகப் பேசாத இக்கட்சிகள், இன்று தேர்தல் அரசியலுக்காக மட்டும் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுப்பது அவர்களின் இரட்டை நிலையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
வேலையின்மையும் வருடாந்திரக் கால அட்டவணையும்
2021-இல் 5.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்த தமிழ்நாடு அரசு, தற்போது மிகக் குறைந்த அளவிலான பணியிடங்களையே அறிவித்துள்ளது. 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்திரக் கால அட்டவணை வெளியிடப்பட்டிருந்தாலும், அதில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை படித்து முடித்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 6 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், வெறும் 5,000-க்கும் குறைவான இடங்களை மட்டும் நிரப்புவது வேலையின்மைப் பிரச்சனையைத் தீர்க்காது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் உயர்கல்வி முடித்து வெளியே வரும் சூழலில், குரூப் 1, 2 போன்ற முதன்மைத் தேர்வுகளில் பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டியது அவசியமாகும். எனவே, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்ட தேர்வுகளைத் துரிதமாக நடத்தி முடித்து, குறைந்தபட்சம் ஒரு லட்சம் காலிப்பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது.
நீதி விசாரணையும் எதிர்கால நடவடிக்கைகளும்
மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் 6 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கும் தேர்வாணைய நிர்வாகம், ஒரு போட்டித் தேர்வைக்கூடச் சரியாக நடத்த முடியாமல் இருப்பது நிர்வாகச் சீரழிவின் உச்சம். இந்தக் குளறுபடிகள் குறித்து உயர்நிலை நீதி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி, ரத்து செய்யப்பட்ட தேர்வினைத் தேர்தலுக்கு முன்பாகவே மீண்டும் நடத்தி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்புவதில் அரசு துரித நடவடிக்கை எடுத்து, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும். இழந்த நம்பிக்கையை மீட்டெடுப்பதே ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும்.
