articles

img

கங்காணி அரசுகள்.... (பெகாசஸ் விவகாரம்)

கடந்த இரண்டு நாட்களாக முக்கியமான பிரச்சனை ஒன்று நாட்டின் அரசியல் பரப்பைஉலுக்கி வருகிறது.

கடந்த 18ஆம் தேதி மாலை சர்வதேச ஊடகங்களில் ஒரு முக்கியச் செய்தி வெளியானது. இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான ‘என்எஸ்ஓ’ உருவாக்கிய ‘பெகாசஸ் (Pegasus)’ எனப்படும் உளவு மென்பொருளின் துணைக் கொண்டு இந்தியாவின் பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பல நூறு பேர்களின் செல்பேசியை அரசு ஒட்டுக் கேட்டது என்பதுதான் அச்செய்தி. அதற்கு ஆதாரமாக ஒட்டுக்கேட்கப்பட்டோரின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாளில் எதிர்கட்சிகள் பெகாசஸ் பிரச்சனை குறித்து விவாதம் தேவை என கேட்டதை மறுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

அது என்ன பெகாசஸ்? உளவு மென்பொருள் என்றால் என்ன? ஒட்டு கேட்பதால் என்ன தீமை விளைந்திடும்?

இன்றைய சூழலில் நம் அனைவரின் கைகளிலுமே ஒரு செல்பேசி இருக்கிறது. அதில் இணையஇணைப்பும் இருக்கிறது. வெறும் அழைப்புகளைத் தாண்டி செல்பேசியின் இணையம் வழியாக முகநூல் பயன்படுத்துகிறோம். வாட்சப் பயன்படுத்துகிறோம். இன்னும் பல செயலிகளை (app) பயன்படுத்துகிறோம். குறைந்தபட்சம் 80% பேரேனும் பயன்படுத்தும் செயலி வாட்சப் (Whatsapp).

நம் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தகவல் அனுப்பும் ஊடகமாக இச்செயலியை நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்துகிறோம். சுவாரஸ்யமான காணொலிகளை அனுப்புகிறோம். புகைப்படங்கள் பகிர்கிறோம். அலுவலக தகவல்கள் பரிமாறிக் கொள்கிறோம். அந்தரங்கமான தகவல்களையும் இச்செயலியின் வழியாக அனுப்பிக் கொள்கிறோம்.இச்செயலியில் வரும் எல்லா தகவல்களையும் நமக்கு அறிமுகமில்லா நபர்கள் பார்த்தால் என்ன ஆகும்? குறிப்பாக அரசு இவற்றை நோட்டம் விட்டால்என்ன ஆகும்?

உதாரணமாக உங்களின் செல்பேசியை உங்கள் வீடு என வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டுக்குள்உங்களுக்கே தெரியாமல் ஒருவர் ஒட்டுக் கேட்கும் உபகரணத்தை ஒளித்து வைத்துச் சென்றுவிட்டால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். அந்த நபரைப் பற்றி மட்டுமல்லாமல் நீங்கள் பேசும் சகல விஷயங்களையும் உங்களுக்கு தெரியாத பலர் கவனிக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.  உங்களை ஒட்டுக் கேட்பவர்கள் உங்களுக்கு ஆகாதவர்களாக இருந்தால் அவர்கள் உங்களுக்கு தீங்கு விளைவிப்பது சுலபம். அதுவே, உங்களை ஒட்டுக் கேட்பவர்கள் அரசாக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் சிக்கல்களை நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

அதைத்தான் மோடியின் தலைமையிலான அரசு கடந்த நான்கு வருடங்களாக செய்திருக்கிறது.2017ஆம் ஆண்டு தொடங்கி 2021 வரை பல பேரை மோடியின் தலைமை ஒட்டுக் கேட்டிருக்கிறது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடங்கி, பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வரை வந்து தன்னுடைய கட்சியின் அமைச்சர்கள்,அவர்களின் வீட்டு சமையற்காரர், தோட்டக்காரர் வரைமோடி ஒட்டுக் கேட்டிருக்கிறார் என்பதே பெகாசஸ் ஒட்டுக்கேட்டல் சம்பவத்தின் ஒரு வரிக் கதை.

ஒரு பரபரப்பான ஆங்கிலப் படத்துக்கான திரைக்கதை போல் தோற்றமளிக்கும் இந்த ஒரு வரிக்கதைக்கு பின் ஒளிந்திருக்கும் அவலங்கள்தான் சர்வதேச சமூகங்களின் அதிர்ச்சிக்கு காரணம். குறிப்பாக தமிழ்ச்சூழலில் முதன்முதலாக உளவுமென்பொருள் என்கிற வார்த்தை அரசின் வட்டாரங்களில் அறிமுகமானவிதமே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.தமிழ்நாட்டில் உளவு மென்பொருள் என்கிற வார்த்தை முதன்முதலாக புழங்கப்பட்டது 2019ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில். வடநாட்டிலும் ஆச்சரியகரமாக அதே காலகட்டத்தில்தான் முதன்முதலாக அந்த வார்த்தை அரச மட்டங்களில் புழங்கப்பட்டது.

பீமா கோரேகான் உதாரணம்
2019ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் நேர்ந்த சம்பவங்களுக்கு பின்னணியாக சில முந்தைய சம்பவங்கள் இருக்கின்றன.மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் பார்ப்பனர்களை பட்டியல் சாதியினரான மகர்கள் வெற்றிகொண்ட வரலாற்றின் நினைவு விழா 2017 டிசம்பர் 31அன்று அனுசரிக்கப்பட்டது. அந்த விழாவை தொடர்ந்து நேர்ந்த மோதலுக்கு காரணமென  குற்றம் சாட்டி 11 மனித உரிமை செயற்பாட்டாளர்களை அரசுகைது செய்தது.  அன்று நேர்ந்த மோதலுக்கு அந்த 11பேரும் முன்பே திட்டமிட்டிருந்ததாக காவல்துறையும் தேசிய புலனாய்வு முகமையும் கூறின. ஆதாரங்களாக  அவர்களின் கணினிகளிலும் செல்பேசியிலும் இருந்த ஆவணங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவற்றில் உண்மை இல்லை என கைது செய்யப்பட்டவர்கள் மறுத்தனர்.

உதாரணமாக ஆனந்த் டெல்டும்ப்டே!
இந்தியாவின் அறிஞர்களில் ஒருவர். பேராசிரியர். இந்திய சாதி அமைப்பை பற்றி தொடர்ந்து எழுதியவர். அண்ணல் அம்பேத்கரின் பேத்தி ரமாவை மணம் முடித்தவர். அவருடைய செல்பேசியிலிருந்து அனுப்பப்பட்டதாக ஒரு மின்னஞ்சலைக் காட்டித்தான் கைதுசெய்யப்பட்டிருந்தார். ஆனால் ஆனந்த் டெல்டும்ப்டே அந்த மின்னஞ்சலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றார். கேட்பாரில்லை.இந்த பின்னணியில்தான் 2019ஆம் ஆண்டின் சம்பவங்கள் நேர்ந்தன.கைது செய்யப்பட்டிருந்த செயற்பாட்டாளர்களுக்கு சட்டரீதியான உதவிகளை பலர் அச்சமயத்தில் செய்தனர். ராத்தோட் என்பவர் அவர்களில் ஒருவர்.  2019ஆம்ஆண்டின் அக்டோபர் மாதத்தில் கனடாவின் சிட்டிசன்லேப் என்கிற அமைப்பிலிருந்து அவருக்கு ஒருஅழைப்பு வந்தது. அழைப்பில் பேசியவர் ரத்தோடின்செல்பேசியில் உளவு மென்பொருள் ஊடுருவி இருக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறினார். யார் அதைஊடுருவச் செய்திருப்பார் என்றெல்லாம் சொல்லவில்லை. அவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை. பிறகு வாட்சப்பில் ஒரு செய்தி வந்தது.

‘மே மாதத்தில் உங்கள் மொபைலுக்குள் அனுமதியின்றி உளவு மென்பொருள் ஊடுருவ முயன்றதை நாங்கள் தடுத்திருக்கிறோம்’ என்றது செய்தி.ராத்தோட் வழக்காடிய சுரேந்திர கேத்லிங் என்பவர்2018ல் கைது செய்யப்படுவதற்கு முன்பே ராத்தோடுக்கு வாட்சப்பில் பல எதிர்பாரா அழைப்புகள் வந்திருக்கின்றன.  வாட்சப் அழைப்புகள் யாவும் சர்வதேசஎண்களிலிருந்து வந்திருந்தன. அந்த அழைப்புகளை அவர் ஏற்றபோது உடனே ‘குழு அழைப்பாக’ மாறி துண்டிக்கப்பட்டிருக்கிறது. பிறகு பல மின்னஞ்சல்கள் நம்பத்தகுந்த செய்தி நிறுவனங்களின் பெயர்களில் இணைப்புகளுடன் (attachment) வந்திருக்கின்றன. இணைப்புகளை திறந்து பார்த்திருக்கிறார். எதுவும் இருக்கவில்லை.

வாட்சப் அழைப்புகளையும் மின்னஞ்சல்களையும் முதலில் பொருட்படுத்தாத ராத்தோட், சிட்டிசன் லேபிலிருந்து வந்த தகவலையடுத்து புள்ளிகளை இணைத்துபார்த்திருக்கிறார். அவர் வழக்காடிய சுரேந்திராவுக்கும் அதே வகையிலான அழைப்புகள் வந்திருக்கின்றன. கைதான செயற்பாட்டாளர்கள் பலருக்கு அத்தகைய அழைப்புகள் வந்திருப்பது உறுதியானது.செயற்பாட்டாளர்கள் அனைவரும் சேர்ந்து செல்பேசி ஒட்டுக் கேட்கப்படும் வாய்ப்பை விளக்குமாறுஅரசுக்கு கடிதம் எழுதினர். அதையொட்டி நவம்பர் மாதத்தில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்சப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பிறகு நடந்ததுதான் நகைச்சுவை. ஒட்டுக்கேட்கப்படுவதற்கான தகவலை அந்த ஆண்டின் மே மாதத்திலேயே தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு அளித்துவிட்டதாக வாட்சப் நிறுவனம் சொல்ல, தொழில்நுட்ப விளக்கமாக இருந்தமையால் அந்த தகவல் விளங்கவில்லை என தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்தது.

தமிழ்நாட்டில்...
அதே நவம்பர் மாதத்தில்தான் தமிழ்நாட்டைப் பற்றிய முக்கியமான விஷயம் வெளியானது.2019-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலைய கணினிகளில் உளவு மென்பொருள் ஊடுருவிய தகவல் வெளியானது. டி டிராக் என்பது அந்த உளவு மென்பொருளின் பெயர். செயற்பாட்டாளர்களின் செல்பேசிகளில் ஊடுருவி பொய் ஆவணங்களை தயாரிக்கும் வாய்ப்பு ஒரு உளவு மென்பொருளுக்கு இருக்கிறது என்கிற உண்மையையே ஜீரணிக்க முடியாமல் இருந்த சூழலில் அத்தகைய ஒரு உளவு மென்பொருள் அணுமின் நிலையத்திலும் ஊடுருவ முடிந்தது என்கிற தகவல் பெரும் அச்சத்தை விளைவிக்கக் கூடியதாக இருந்தது.

வாட்சப் நிறுவனத்தின் ஆய்வு
இந்திய அரசு கோபாவேசம் காட்டிய வாட்சப் நிறுவனம், செயற்பாட்டாளர்களின் செல்பேசிகளில் நடந்த ஊடுருவலை ஆராய்ந்தது. கனடா நாட்டின் சிட்டிசன் லேப் (Citizen Lab) என்கிற அமைப்பும் உதவியது. பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.2018ஆம் ஆண்டிலேயே சுமாராக உலகளவில் 1400 பேரின் செல்பேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக வாட்சப் நிறுவனம்கண்டுபிடித்தது. அதில் குறைந்தது 200 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதிலும் பலர் செயற்பாட்டாளர்களாகவும் பத்திரிகையாளர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் இருந்தனர்.பெகாசஸ் என்கிற இந்த உளவுமென்பொருளை தயாரிப்பது என்எஸ்ஓ (NSO) என்கிற நிறுவனம். இந்த நிறுவனம் இஸ்ரேல் நாட்டை சார்ந்தது. முதன்முறை
யாக மோடி இஸ்ரேல் நாட்டின் பிரதமரை ஜூலை 2017ல் சந்தித்தார். அதற்கு சில வாரங்களுக்கு முன்பே இரண்டு பில்லியன் டாலர் அளவில் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. அதில் இணைய பாதுகாப்பும் அடக்கம். யாருடைய இணைய பாதுகாப்பு என தெரியவில்லை.

இவற்றுக்கிடையில், 11 செயற்பாட்டாளர்கள் மீதும் அரச வேட்டைச் சட்டம் யுஏபிஏ (UAPA) பாய்ந்தது.சர்வதேச மன்னிப்பு சபை எனப்படும் ஆம்னெஸ்டி இன்டர் நேசனல்  11 பேர் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என வாதிட்டது. விளைவாக இந்தியாவில் அந்த அமைப்பின் செயல்பாடுகள் மோடி அரசால் முடக்கப்பட்டன. சர்வதேச மன்னிப்பு சபையே தடை செய்யப்பட்டது.உணவு உண்ண முடியாமல் திரவ உணவை சாப்பிட ஓர் உறிஞ்சு குழாய் கேட்டதைக் கூட அரசு அனுமதிக்காமல் இறுதியில் கோவிட் தொற்றால் உயிரிழந்த 83 வயது ஸ்டான்சுவாமி கைது செய்யப்பட்டிருந்தது இந்த வழக்கில்தான்.

50 ஆயிரம் பேர்...
இந்த நிலையில்தான் உலக நாட்டு அரசுகளின்  மக்கள் விரோத நடவடிக்கையை அம்பலப்படுத்த சர்வதேச மன்னிப்பு சபையும் பர்பிட்டன் ஸ்டோரிஸ் (Forbidden Stories) அமைப்பும் சேர்ந்து பெகாசஸ் உளவு மென்பொருளால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலை வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. 10 நாடுகளை சேர்ந்த 17 ஊடக நிறுவனங்களின் 80 ஊடகவியலாளர்கள் இணைந்து இந்த பட்டியலை வெளியிட்டிருக்கின்றனர்.உலகளவில் 50000 பேரை பட்டியல் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த வாரங்களில் சர்வதேச பத்திரிகைகள் இந்த பட்டியலை பகுதி பகுதியாக வெளியிடவிருக்கின்றன.இந்தியாவை பொறுத்தவரை 300 பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் 40 பத்திரிகையாளர்களின் பெயர்கள் இருக்கின்றன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. கோவிட் வைரஸை கையாள்வதில் ஒன்றிய அரசு காட்டும் அலட்சியத்தை விமர்சித்துபதவி விலகிய ஷாகித் ஜமீலின் பெயர் இருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பவரின் பெயர் இருக்கிறது. தமிழ்நாட்டில் திருமுருகன் காந்தியின் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

இதில் சோகம் என்னவெனில் பாஜக அமைச்சர்களாக இருக்கும் அஷ்வினி வைஷ்ணவ், மற்றும் பிரகலாத் சிங் படேலும் பட்டியலில் இடம்பெற்றிருப்பதுதான். அவர்கள் மட்டுமின்றி பாஜக அமைச்சர்களுக்கும் முதல்வர்களுக்கும் தனி செயலர்களாக இருப்பவர்கள், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்பிரவின் தொகாடியா போன்றோரும் இருக்கின்றனர். பிரகலாத் சிங் படேலின் விஷயத்தில் சுவாரஸ்யம் என்னவென்றால் அவரின் பெயர் மட்டுமின்றி, அவரின்மனைவி, தனிச்செயலர்கள், சமையற்காரர், தோட்டக்காரர் உள்ளிட்ட 15 பேரின் பெயர்களும் பட்டியலில் இருக்கின்றன. மேலும் சங் பரிவாரத்தை சேர்ந்த பலரின் பெயர்களும் கூட இடம்பெற்றிருக்கின்றன.

2017ம் ஆண்டில் இஸ்ரேலுக்கு மோடி சென்றதிலிருந்து தொடங்கினால், அப்போது இருந்தே பெகாசஸ் உளவு மென்பொருளுக்கான வேலை தொடங்கியிருப்பதை ஊகித்துக் கொள்ள முடியும். அதே வருடத்தின் இறுதியில் நடந்த ஒரு நிகழ்வைச் சார்ந்து பாஜக அரசை எதிர்க்கும் செயற்பாட்டாளர்களின் செல்பேசிகளில் உளவு மென்பொருளை ஊடுருவச் செய்து ஆவணங்களை உருவாக்கி அத்தகைய ஆவணங்களைஅடிப்படையாக கொண்டு வழக்குகள் உருவாக்கப்பட்டு தேசிய புலனாய்வு சட்டத்தின் கீழ் வாழ்நாள் முழுக்க சிறையில் அந்த செயற்பாட்டாளர்களை அடைக்கும் குரூரம் நடைபெற்றிருக்கிறது. அதே போல் பல செயற்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் இலக்கில் வைக்கப்பட்டிருந்திருக்கின்றனர். மட்டு
மல்லாமல், மோடிக்கு போட்டியாக கட்சிக்குள்ளும் அமைப்புக்குள்ளும் இருப்பவர்களாக கருதப்படுவோரின் செல்பேசிகளும் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கின்றன.

மொத்தத்தில் ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றும்மோடி தன்னுடைய கட்சி மற்றும் இயக்கத்தைச் சார்ந்தவர்களையும் கூட ஏமாற்றி வேட்டையாடும் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறார்.வரலாறு முழுக்கவே இத்தகைய எதேச்சதிகாரிகள் பயந்தாங்கொள்ளிகளாக இருந்ததை நாம் காணமுடியும். ஆனால் இத்தகைய பயந்தாங்கொள்ளிகளுக்கு தொழில்நுட்பம் பாதுகாப்பாக கிடைக்கும்போதுஅது நிகழ்த்தக் கூடிய பாதகங்கள் பயங்கரமானவையாக இருந்ததையும் அதே வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

கண்காணிப்பு (surveillance) தொழில்நுட்பத்தின் வழியாக இந்திய மக்களை வளைத்து அச்சுறுத்தும் அரசும் கண்காணிப்பு முதலாளித்துவம் என்ற பெயரில்நம் தனி தகவல்களை திருடி வணிகமாக்கும் பொருளாதார முறைகளும் ஒன்று சேர்கையில் இன்றைய நவதாராளவாத உலகில் எதேச்சதிகாரம் சுலபமாகிவிடுகிறது.தொழில்நுட்பம் சார்ந்த இத்தகைய எதேச்சதிகார அரச கட்டமைப்புக்கு எதிராக மக்களை தயார்படுத்துவது எப்படி என்பதுதான் நம் அனைவருக்கும் விடுக்கப்பட்டிருக்கும் சவால்!

கட்டுரையாளர்:  ராஜ சங்கீதன், எழுத்தாளர், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர், தமுஎகச