சினிமா அரசியலும் சென்சார் கத்திரியும்
‘பராசக்தி’ திரைப்படத்தில் 25 காட்சிகளில் சென் சார் போர்டு கத்தரி போட்டுவிட்டது எனப் படக்குழுவினர் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். ‘ஜனநாயகனோ’ திரைக்கு வர முடியாமலேயே தடுமாறிக் கொண்டிருக்கிறார். இவற்றைச் சுற்றி எதிரும் புதிருமாக விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பராசக்திக்கும், ஜனநாய கனுக்கும் நேர்ந்ததைப் போலவே கடந்த காலங்களிலும் அவ்வப்போது நடந்திருக் கிறது. எதிர்காலத்திலும் இத்தகைய நெருக்கடி மேலும் கூடுதலாகலாம். ஏனெனில், அர சியல் நெருக்கடி முற்றுகிற காலத்தில் கருத்தி யல் சுதந்திரத்திற்கும் இயல்பாகவே ஆபத்து உருவாகும். இத்தருணத்தில் பராசக்தி – ஜனநாயகன் குறித்துப் பேசுவதை விடவும், இத்தகைய நெருக்கடிகள் ஏன் உருவாக்கப் படுகின்றன என்பதையும், அதற்குப் பின்னால் உள்ள அரசியல் நோக்கத்தையும் விவாதிப்பது முக்கியமானதாகப் படுகிறது. கருத்தியல் ஆயுதமாக சினிமா “திரைப்படம் என்பது மிகச்சிறந்த பிரச்சாரக் கருவிகளில் ஒன்றாகும். அரசியல் மற்றும் கருத்தியல் ஆயுதங்களில் ஒன்றாக அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என நாஜி பிரசாரகர்களில் ஒருவரான ஹான்ஸ்டிராப் முன்வைத்த கருத்தை அடியொற்றி, தங்கள் கருத்தியல் சாதனங்களில் ஒன்றாகச் சினிமா வைக் கையாள இந்துத்துவ சக்திகள் துவங்கி யிருப்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். தங்கள் அரசியலைத் தாங்கிச் செல்லும் சினி மாவுக்கு ஆரவாரமான வரவேற்பு அளிப்பது, மறுபுறத்தில் எதிர்க்கருத்தை முன்வைக்கும் சினிமாவுக்கு சென்சார் வாயிலாகக் கத்தரி போடுவது எனும் நடைமுறையைப் பாசிஸ்டு கள் கடைபிடிக்கிறார்கள். சினிமா பார்த்துவிட்டு ஊடகங்கள் வாயி லாக அதுகுறித்த பிரச்சாரம் செய்த ஹிட்லர் பாணியையே தற்போது மோடியும் பின்பற்று கிறார். வார இறுதி நாட்களில் பிரபல திரைப்படக் கலைஞர்களுக்கு ஹிட்லர் விருந்தளித்ததைப் போலவே, திரைப் பிரபலங்களோடு செல்ஃபி எடுத்து மகிழ்கிறார் மோடி. தங்களுடைய ‘பிளவுவாத அரசியலை’ கொண்டு செல்ல அவர்களுக்குச் சினிமாவும், சினிமா கலைஞர்களும் தேவைப்படுகிறார்கள். ‘சாவா’ திரைப்படமும் தூண்டப்பட்ட வன்முறையும் அண்மையில் வெளியான ‘சாவா’ என் றொரு இந்தி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நூற்றுக்கணக்கான இளைஞர்கள், 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அவுரங்கசீப் சமாதி யை உடைத்து நொறுக்கும் ஆவேசத்தோடு அவுரங்காபாத்தில் ஒன்று கூடுகிறார்கள். அப்போது ஏற்பட்ட மோதல் மற்றும் கலவரத்தில் ஏராளமான பொதுமக்களும், 3 காவல் உயரதி காரிகள் உட்பட 33 காவலர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். இத்தகையத் தாக்குதலை உருவாக்கும் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றியது அந்தத் திரைப்படம். காட்சி முடிந்த பிறகு திரையரங்கில் கூடியிருந்த இளைஞர்களும், இளம்பெண்களும் ஹர் ஹர் மகாதேவ், ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே எனக் கண்ணீரோடு முழக்கமிட்டார்கள். சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜிக்கும், அவுரங்கசீப்புக்கும் இடையே நடந்த மோதலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் ‘சாவா’ திரைப்படம். சாவா எனும் இந்தி வார்த்தைக்குச் சிங்கக்குட்டி என்று அர்த்தம். சத்ரபதி சிவாஜியின் மக னான சாம்பாஜியை அவுரங்கசீப் பெரும் கொடுமைக்கு உள்ளாக்கினார் எனும் பொய்யை, கற்பனை கலப் போடும், கிராபிக்ஸ்காட்சி களோடும் இணைத்து பார்வையாளர் களின் உணர்ச்சியைத் தூண்டிவிடு வதில் வெற்றி பெற்றது ‘சாவா’. ஆனால் உண்மை என்னவெனில், இந்துத்துவ தலைவர் களான வி.டி. சாவர்க்கரும், எம்.எஸ். கோல்வால்கரும் கூட, சீரழிவுப் பாதையில் பயணித்த, மன்னராக மக்களை ஆள முற்றி லும் தகுதியற்ற ஒருவரே சாம்பாஜி எனப் பதிவு செய்திருக்கிறார்கள். தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் கேரளா ஸ்டோரி: ஒரு திட்டமிட்டப் பொய் 1989-ல் காஷ்மீரின் ஒரு பகுதியில் முஸ்லிம்களுக்கும், பண்டிட்டுகளுக்கும் ஏற்பட்ட சிறிய முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் எனும் சமூக உள வியலைக் கட்டமைக்க முனைந்தது. மோடி இத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, “அனைத்து இந்தியர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் இது” எனப் பரிந்துரைத்தார். மத்தியப் பிரதேச முதல்வரோ ஒருபடி மேலே சென்று, காவல்துறையினர் அனைவருக்கும் அரைநாள் விடுப்பு அளித்து இத்திரைப் படத்தைப் பார்க்க அனுப்பி வைத்தார். இந்து மதத்தைச் சார்ந்த இளம் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதலித்து மதம் மாற்றுவதோடு, இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்பிலும் சேர்த்து விடுகிறார்கள்; சுமார் 32,000 பெண்கள் இப்படியாக நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள் எனப் பகிரங்கமான தொரு பொய்யை முன்வைத்து வெளியானது ‘கேரளா ஸ்டோரி’. இதற்கான ஆதாரம் என்னவென்று கேட்டபோது, “இல்லையில்லை, 32,000 எனும் எண்ணிக்கையை வெறும் 3 என மாற்றிவிட்டோம்” என மழுப்பலான பதிலை ஒப்புதல் வாக்குமூலமாக அளித்தது தயாரிப்பு நிறுவனம். ஆனால், அதற்குள் இப்படம் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு வலுசேர்ப்பதாகக் கூறி மத்தியப் பிரதேச அரசு இதற்கு வரிவிலக்கு அளித்தது. வரலாற்றைத் திரிக்கும் படங்களும் பாசிச நோக்கமும் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உரு வான ‘பத்மாவத்’ திரைப்படமும் கூட வரலாற்றுத் தரவுகளுக்கு மாறாக உணர்ச்சிகளைக் கிளப்பும் வகையிலேயே வெளியானது. அலா வுதீன் கில்ஜியை மிக மோசமாகச் சித்தரிக்கும் காட்சிகள் அத்திரைப்படத்தில் ஏராளமாக இருந்தன. ஆனால், வரலாற்றாசிரியர்களான சதீஷ் சந்திரா மற்றும் இர்பான் ஹபீப் ஆகி யோர் முன்வைக்கும் தரவுகள் வேறாக உள்ளன. மக்களுக்கு நிலங்களைப் பகிர்ந்து அளித்ததோடு, மக்கள் ஒற்றுமையை நிலை நிறுத்தித் திறமையான நிர்வாகத்தை நடத்தி யவர்களில் அலாவுதீன் கில்ஜி முக்கியமானவர் என அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போரில் ஜான்சி ராணியும், முகலாய மன்னர் களில் கடைசி மன்னரான பகதூர் ஷா உள்ளிட்ட வர்களும் இணைந்தே நாட்டை காக்கப் போராடினார்கள் எனும் உண்மையை மறைத்து, முஸ்லிம் மன்னர்களை மோசமான வர்களாகவும், சிறுபான்மையினரை இந்தியா வுக்கு எதிரானவர்களாகவும் கட்டமைக்க இத்தகைய ‘இந்துத்துவ சினிமாக்களை’ அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ‘கோத்ரா – தி சபர்மதி ரிப்போர்ட்’, ‘வீர் சாவர்க்கர்’, ‘ஹமாரே பாரா’ எனப் பெரும் பட்டியலோடு அவர்களின் அடுத்தடுத்த படையெடுப்பு தொடர்கிறது. முறியடிக்க கை கோர்ப்போம்! விடுதலைப் போராட்டக் காலத்தில் மக்களி டம் விடுதலை உணர்வை விதைத்த சினி மாவை, அதற்குப் பிறகான காலத்தில் மக்க ளின் சமூக, பொருளியல் வாழ்வைப் பேசிய, காதலையும், மனித மாண்புகளையும் போற்றிய சினிமாவை, ‘பிளவுவாத’ அரசிய லின் குரலாக மாற்றுவதும், மாற்றுக் கருத்தைப் பேசுவோரின் குரல்வளையை நெரிப்பதுமே அவர்களின் நோக்கமாக உள்ளது. மேலெழுந்தவாரியாக ‘பாசிசமா, பாயாசமா’ என அடுக்குமொழி கேள்வி எழுப்புபவர்களால் இவர்களை வெற்றி கொள்ள முடியாது. நவபாசிசப் போக்குகளின் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்று என்பதைப் புரிந்து கொள்வதும், வலுவான ‘ஜனநாயக’ப் போராட்டங்களைக் கட்டமைப்பதன் மூலமாகவே இவர்களை வீழ்த்த முடியும்.
