ஜானகி ராமச்சந்திரன் தைரியம் உறுதி தன்னம்பிக்கை - கணேஷ்
திருச்சி மாவட்டம், உறையூர் கடைவீதியில் சாலையோர வியாபாரிகள் கடைகளை விரிக்கிறார்கள். கூட்டம் வருகிறதோ, இல்லையோ காலையிலேயே வரி வசூல் என்ற பெயரில் ரவுடிகள் வலம் வரத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் நிர்ணயிப்பதுதான் வரி. தரவில்லை என்றால் கடை போட முடியாது. பெரிய நபர் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் வரிவசூலை ஏலத்தில் எடுத்துக் கொள்வார்கள். இந்த சாலையோர வியாபாரிகளில் பெரும்பாலானோர் பெண்கள்தான். இவர்கள் மத்தியில் மாதர் சங்கம் இயங்கத் தொடங்கியது. சட்டவிரோத வரி வசூலை அனுமதிக்க முடியாது என்று பெண்கள் குரல் கொடுத்தனர். போராட்டம் நடந்தது. வழக்கம்போலக் காவல்துறை சட்டவிரோதிகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கியது.
அந்தப் பெரிய நபரோ, போராடும் பெண்கள் மீது காரை ஏற்றிவிடுவேன் என்று மிரட்டுகிறார். யாரும் எதிர்பார்க்காத நிலையில், தோழர் ஜானகி, சாலையிலேயே காருக்கு முன்பாகப் படுக்கிறார். எங்கே ஏற்று பார்க்கலாம் என்று குரலை உயர்த்தினார். மற்ற பெண்களும் உடன் அமர்ந்தனர். கார் பின்னோக்கிச் சென்றது. அடுத்த ஏலத்தை மாதர் சங்கமே எடுக்கலாம் என்று கருத்து வந்தது. எடுக்கவும் செய்தனர். அதையடுத்து சாலையோர வியாபாரிகள் சங்கமும் உருவாகிறது. அருகில் உள்ள ஊரில் உள்ள கூலிப்படையினரை ரவுடிகள் தொடர்பு கொள்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பி. ராமச்சந்திரன் அவர்களின் துணைவியார் என்றவுடன் கூலிப்படையினரே பயந்து போய் முடியாது என்று சொல்லி விட்டார்கள். ராகு காலம்தான் “நல்ல” நேரம் திருச்சி மாவட்டம், டால்மியாபுரத்தில் 1938 ஆம் ஆண்டில் ராமுப்பிள்ளை - தங்கம் ஆகிய இருவருக்கும் மகளாய்ப் பிறந்த ஜானகி, எஸ்.எஸ்.எல்.சி படிப்பை நிறைவு செய்தார்.
அவருடைய தந்தையார் டால்மியா சிமிண்ட் ஆலை முன்பாக ஓட்டல் நடத்தி வந்தார். அங்கு அடிக்கடி வந்த பாப்பா உமாநாத்தான் தோழர் பிஆர்சிக்கும், ஜானகிக்கும் திருமணம் செய்யலாம் என்று முன்மொழிந்தார். திருமணத்திற்கான நேரம் என்று வரும்போது, நல்ல நேரம் எல்லாம் ஒன்றுமில்லை. நமக்கு வசதியான நேரம்தான் நல்ல நேரம் என்று ராமுப்பிள்ளை சொல்லியிருக்கிறார். வசதியான நேரமாக மாலை நேரத்தில் அதுவும் ராகு காலத்தில்தான் இருந்தது. அப்போதுதான் திருமணம் நடந்தது. நிறுவனத் தலைவர்களில் ஒருவர் அதன் பின்னர், பெண்கள் பிரச்சனைகளில் நேரடித் தலையீடுகள் தொடங்கின. தோழர் பாப்பா உமாநாத்துடன் இணைந்து பணியாற்றுகிறார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக பங்களிக்கிறார். மாதர் சங்கத்தின் முதல் மாநிலக்குழுவில் இடம் பெற்றதோடு, மாநிலத் துணைச் செயலாளராகவும் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார்.
தமிழகம் முழுவதும் பயணம் செய்து மாதர் சங்கத்தை அமைக்கும் பணிகளைச் செய்கிறார். அவரது தீரச் செயல்களில் ஒன்றுதான் மேலே குறிப்பிடப்பட்ட ரவுடிகளை எதிர்த்து நின்றதாகும். நெருக்கடி நிலைப் பிரகடனத்தின்போது உச்சபட்ச தைரியத்தைக் காட்டிய ஜானகி, அரசியல் நடவடிக்கைகளோடு, குழந்தைகளைப் பாதுகாக்கும் பணியையும் செய்து முடித்தார். மொழிபெயர்ப்பாளர் சிறு வயதிலிருந்தே நல்ல வாசிப்பாளராக இருந்த ஜானகி, 500 பக்கங்கள் கொண்ட கோதாவரி பருலேகரின் “மனிதர்கள் விழிப்படையும் போது” நூலை தமிழில் மொழி பெயர்த்தார். கம்யூனிஸ்டுகளுக்குப் பெரும் ஆவணமாக விளங்குவது தோழர் பி. ராமச்சந்திரனின் “ஒரு கம்யூனிஸ்டின் நினைவுக்குறிப்புகள்” என்ற நூலாகும். தோழர் பிஆர்சி சொல்லச் சொல்ல அதை எழுதியது தோழர் ஜானகிதான் என்பது சுவாரஸ்யமான தகவலாகும்.