articles

img

மே 26 கருப்பு தினம் மாபெரும் வெற்றி.... லட்சக்கணக்கான வீடுகளில், வீதிகளில் கருப்புக்கொடி விவசாயிகளுக்கு ஆதரவாக நாடே கிளர்ந்தெழுந்தது..

மோடி தலைமையிலான மத்திய அரசு ஜனநாயக நடைமுறைகளை துளியும் மதிக்காமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய விவசாயிகள் கடந்த 6 மாத காலமாக போராட்டக் களத்தில் உள்ளனர்.  இருந்தபோதும், இவர்களது கோரிக்கைகளை செவிமடுக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.  இந்நிலையில் மே மாதம் 26ம் தேதியை ‘கருப்பு தினமாக’ அனுசரித்திட சம்யுக்த கிசான் மோர்ச்சா எனும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்திருந்தது.\

மத்திய தொழிற்சங்கங்களும் இந்த அறைகூவலுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்தன. விவசாயிகளுடன் இணைந்து எழுச்சியோடு ‘கருப்பு தினத்தை’ நாடு முழுவதும் அனுசரித்திட இந்திய தொழிற்சங்க மையம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மத்தியதர வர்க்க ஊழியர் தொழிற்சங்கங்கள், சிறு உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள், கலாச்சார செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், இடதுசாரிகள் உள்ளிட்ட 12 பிரதான அரசியல் எதிர்க்கட்சிகளும் அறைகூவல் விடுத்திருந்தன.

பல்லாயிரக்கணக்கான இடங்களில்...
நாடு முழுவதிலும் கொரோனா நோய்த்தொற்று கோர தாண்டவம் ஆடி வருகையில், அதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நிலை அந்தந்த மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இருந்தபோதும், நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவற்றை கறாராக செயல்படுத்தி மே 26 அன்று நாடு முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான இடங்களில், பல லட்சக்கணக்கான எண்ணிக்கையில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், சாதாரண ஏழை, எளிய மக்கள் என அனைவரும் தங்களது வீடுகளில், பணியிடங்களில், தொழிற்சாலைகளில், வாகனங்களில் கருப்புக் கொடியை ஏற்றி, மோடி அரசின் உருவபொம்மையை எரித்து அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு தங்களது வலுவான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, குஜராத் முதல் கௌஹாத்தி வரை என நாடு முழுவதிலும் அனுசரிக்கப்பட்ட ‘கருப்பு தினம்’, மோடி தலைமையிலான பாஜக அரசின் மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. 

உருவபொம்மை எரிப்பு
சிங்கு, திக்ரி, காஜிப்பூர், ஷாஹஜான்பூர் மற்றும் பல்வால் ஆகிய அனைத்து எல்லைப் பகுதிகளிலும், டிராலிகள், கூடாரங்களில் கருப்புக் கொடிகளை ஏற்றியும், மோடி அரசின் உருவபொம்மையை எரித்தும் ‘கருப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டது. புதுதில்லியில் அமைந்துள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் அலுவலகத்தில் கண்டன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  இதில் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், பொருளாளர் பி.கிருஷ்ண பிரசாத், சிஐடியு தேசிய செயலாளர் ஏ. ஆர். சிந்து, விதொச இணைச்செயலாளர் விக்ரம் சிங், மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே, இணைச் செயலாளர் ஆஷா ஷர்மா, மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளர் தினீத் தென்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். \

மேற்குவங்கம்
கனமழை, கடும் புயல் என இயற்கைச் சீற்றம் அச்சுறுத்திய போதும், அவற்றையெல்லாம் எதிர்கொண்டு மேற்கு வங்கம் முழுவதிலும் ‘கருப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டது.  கருப்புக் கொடியை ஏற்றியதோடு, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும், மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தி விவசாயிகளும், தொழிலாளர்களும், சாதாரண ஏழை, எளிய மக்களும் பங்கேற்றனர். 

ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர் முழுவதும் விவசாயிகளும், தொழிலாளர்களும் கருப்புக் கொடியை ஏற்றி, பதாகைகளை ஏந்தி எழுச்சியோடு கருப்பு தினத்தை அனுசரித்தனர்.   ஸ்ரீநகர், அனந்தநாக், குல்காம், சோபியான், பட்காம், கத்துவா, ஜம்மு ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  அனந்தநாக் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உரையாற்றினார்.  

மத்திய அரசு தனது பிடிவாதப் போக்கை கைவிட்டு, விவசாயிகளின் ஐக்கிய அமைப்புடன் உடனடியாகப் பேச்சுவார்த்தையை நடத்தி இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அவர் கூறினார்.  அதே போன்று, தற்போதைய ஊரடங்கு நிலையில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விவசாயிகளுக்கு கிடைப்பதை அரசு உத்திரவாதம் செய்ய வேண்டும்.  கோடைகால பயிர் சாகுபடி என்பது காஷ்மீர் விவசாயிகளுக்கு பிரதானமான சாகுபடி காலம் என்பது மட்டுமின்றி, பிரதானமாக விவசாயத்தையும், தோட்டக்கலையையும் சார்ந்துள்ள ஜம்மு-காஷ்மீர் மாநில பொருளாதார வளர்ச்சிக்கு இந்த சாகுபடி மிக முக்கியமானதாகும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.  விவசாயம் சார்ந்த தங்களது நடவடிக்கைகளை எந்தவிதமான தடைகளும் இன்றி விவசாயிகள் மேற்கொள்வதற்கான நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.  ஸ்ட்ராபெர்ரி பழம் அறுவடைக்கு தயாராக உள்ளது.  இப்பழம் அறுவடை செய்யப்பட்ட உடனேயே சந்தைகளை சென்றடைந்திட வேண்டும்.

இல்லையென்றால் அவை அழுகிப் போய் வீணாகி விடும்.  எனவே, தற்போது அதற்கான சந்தை ஏதும் இல்லாததால் அவை வீணாகப் போய்விடும் என்ற அச்சத்துடன் அதனைப் பயிரிட்ட விவசாயிகள் உள்ளனர்.  அதே போன்று, அடுத்த மாதத் துவக்கத்தில் செர்ரி பழங்கள் பழுத்து அறுவடைக்கு தயாராக இருக்கும். எனவே, இப்பழங்களுக்கான சந்தையை உருவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி அரசு தலையிட வேண்டும்.  காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் விவசாயிகளும், பழத்தோட்டக்காரர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்றும், பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார். ஸ்ரீநகரில் சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மூத்த தொழிற்சங்கத் தலைவர் ஏ.பி.ரஷீத் பண்டிட்டும், ஜம்முவில் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கிஷோர் குமாரும், கத்துவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சேவா ராம் கண்டன உரையாற்றினர்.   

இமாச்சலப்பிரதேசம்
மாநிலம் முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில், வாகனங்களில் கருப்புக் கொடியை ஏற்றியும், மோடியின் உருவபொம்மையை எரித்தும், ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

ஜார்க்கண்ட்
மாநிலம் முழுவதிலும் புதன் காலை துவங்கி மக்கள் தங்களது வீடுகளில், பணியிடங்களில், கிராமப்புறங்களில் மக்கள் கூடுமிடங்களில், தொழிற்சாலைகளில், குடியிருப்புப் பகுதிகளிலுள்ள சமூகக் கூடங்களில் கருப்புக் கொடியேற்றினர். மோடி அரசுக்கு எதிரான கோரிக்கைகளை அடங்கிய பதாகைகளை ஏந்தி இத்தினத்தை அனுசரித்தனர். 

சத்தீஸ்கர்
கோர்பா, ராஜ்நந்த்காவ், சூரஜ்பூர், சர்குஜா, துர்க், கோரியா, பாலோத், ராய்கட், காங்கோ, சாம்பா, மர்வாஹி, பிலாஸ்பூர், தம்தரி, ஜஷ்பூர், பலௌதாபஜார், பஸ்தர் உள்ளிட்ட 20 மாவட்டங்களின் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளிலுள்ள வீடுகளில், வாகனங்களில் கருப்புக் கொடியை ஏற்றியும், மோடியின் உருவ பொம்மையை எரித்தும் இத்தினம் அனுசரிக்கப்பட்டது. இத்தினத்தை தங்களது எழுச்சியான பங்கேற்புடன் மாபெரும் வெற்றியாக்கிய சத்தீஸ்கர் மாநில விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் கன்வீனர் சுதேஷ் டிகம், விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சஞ்சய் பராத்தே ஆகியோர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். நாடு முழுவதிலும் மக்கள் தங்களது வலுவான கண்டனக் குரலை எழுப்பியுள்ள நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழி ஏதும் மோடி அரசுக்கு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.  மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள சில்கேரி பகுதியில் பழங்குடியின விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்ததோடு, இத குறித்து நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் புரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.  

ஹரியானா
மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும், நகரங்களிலும், வீடுகளில், வாகனங்களில் கருப்புக் கொடியை ஏற்றியும், கருப்புப் பட்டைகளை அணிந்தும், அனைத்துத் தெருக்களிலும் மோடியின் உருவ பொம்மையை எரித்தும் விவசாயிகளும், தொழிலாளர்களும் ஆவேசத்துடன் பங்கேற்றனர்.  மேலும், அங்குள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் கட்டிடத்தின் முன் மோடியின் உருவபொம்மையை எரித்ததோடு, தர்ணா போராட்டத்தையும் நடத்தினர். 

திரிபுரா
திரிபுராவில் லட்சக்கணக்கான வீடுகளில், கடைகளில், வாகனங்களில், டிராக்டர்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.  கிராமங்களிலும், பஸ்திகளிலும் மோடியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.  

உத்தரப்பிரதேசம்
ஆக்ரா, அலிகர், இட்டாவா, கான்பூர், பீலீபீத், லக்னோ, காஸ்கஞ்ச், பரேலி, புலந்த்ஷஹர், வாரணாசி, ஜோன்பூர், மவூ, மிர்ஜாபூர், சுல்தான்பூர், தேவரியா, சந்தௌலி, முரதாபாத், மீரட், பதோஹி, அலகாபாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கருப்புக் கொடி ஏற்றியும், கறுப்புப் பட்டை அணிந்தும் ‘கருப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டது. லக்னோவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கருப்புப் பட்டை அணிந்து தர்ணா நடத்தப்பட்டது. அப்போது அதிக எண்ணிக்கையில் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மக்கள் தங்களது எதிர்ப்பைக் காட்ட வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவதைக் கண்டு கிலி பிடித்த யோகி அரசு சட்டவிரோதமாக . மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சியின், வர்க்க வெகுஜன அமைப்புகளின் அலுவலகங்களுக்கும், தலைவர்களின் வீடுகளுக்கும் சென்று அச்சுறுத்திய காவல்துறையினரின் அத்துமீறலை கட்சியின் மாநில செயலாளர் கண்டித்துப் பேசினார்.  

தொகுப்பு: எம்.கிரிஜா