எது வலி... எது காயம்… விஜய் அவர்களே! - க.சுவாமிநாதன்
எல்லா வலியையும் தாங்கிக்கிட்டு உங்க முன்னாலே நிக்கிறேன் ... அப்படின்னு பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துட்டு த.வெ.க தலைவர் விஜய் பேசி இருக்காரு. டயலாக் டெலிவரியில ரொம்ப கவனமா அந்த வார்த்தைகள் தனது “நெஞ்சில் குடியிருக்கிறவர்களின்” நெஞ்சைத் தொட வேண்டுமென்று பேசி இருக்கிறார். ஆனா அந்தப் பேச்சைக் கேட்ட அரசியல் களத்தை அறிந்தவர்களுக்கெல்லாம் அதிர்ச்சிதான். கட்சி ஆரம்பித்து 2 வருசம்தானே ஆகுது. அதுக்குள்ள அப்படி என்ன வலியை, காயத்தை பட்டு இருக்கீங்க விஜய்? என்று கேட்கிறார்கள்.
“கொள்கை எதிரிகள்” தந்த வலியா? கட்சியை பிப்ரவரி 2024 ஆரம்பிச்சீங்க. அந்த ஆண்டே நாடாளுமன்ற தேர்தல் வந்தது. ஆனா அதுல நீங்க போட்டி போடவில்லை. இவ்வளவுக்கும் உங்களின் “கொள்கை எதிரி” தில்லியில் ஆட்சியில் அமரலாமா வேண்டாமா என்ற கேள்வியை முன் வைத்து நடந்த தேர்தல். போட்டி போட வேண்டுமென்று உங்கள் மனதை கொள்கை குத்தி கிழித்து இருக்காதா? ஆனா அந்த வலியை பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டு போட்டி போடாமல் இருந்தீர்களே. அதைச் சொல்கிறீர்களா?.
இல்லை மோடியை, அமித் ஷாவை எதிர்த்து களத்தில் நின்று இருந்தால் என்ன வலி வந்திருக்கும், எவ்வளவு காயம் ஏற்பட்டு இருக்குமென்று கற்பனை செய்து பார்த்தே பதறிப் போனதை சொல்கிறீர்களா? சட்டமன்றத் தேர்தல் வந்தவுடன் பலர் கேள்வி அம்புகளை ஏவினார்கள். நீங்க ஏன் ஒன்றிய அரசை விமர்சிக்க மறுக்கிறீர்கள்? என்று. நீங்க “கில்லி” இல்லையா! இது என்ன நாடாளுமன்ற தேர்தலா ஸ்டாலின் சார் என்று திருப்பி விட்டீர்கள். நான் மோடியை பேச மாட்டேன் என்று கை உதற கால் உதற கூறாமல் அந்த பதற்றத்தை முழுக்க மறைத்துக் கொண்டு, இது ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் போட்டி என்று விறைப்பா வீராப்பா சொன்னீர்கள்.
இருந்தாலும் விடுகிறார்களா? ஏன் நீங்க மாநில உரிமைகள் மறுக்கப்படுவதை பற்றி பேச மறுக்கிறீர்கள்? ஒன்றிய அரசின் நிதி மறுப்பை, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை பழி வாங்குவதை, இந்தி திணிப்பை கேள்வி கேட்க மறுக்கிறீர்கள்? மக்கள் ஒற்றுமையை சிதைக்க நடந்தேறும் முயற்சிகள் பற்றி ஒன்றும் பேசுவதில்லையே? நீங்க அடுத்த ஜென்மத்துல “விவசாயியாக” பொறக்கப்போகிற கிராமத்துக் குடிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை ஒன்றிய அரசு தர மறுப்பதைப் பற்றி உங்க வசனகர்த்தாக்கள் ஏன் எழுதித் தருவதில்லை? என்று “அர்ஜுனன் வில்லும், அரிச்சந்திரன் சொல்லுமாக” உங்களை விடாமல் கேட்டுக் கொண்டே இருப்பது வலிக்கிறதோ! கொள்கை எதிரிக்கு கொஞ்சமாவது ஈரம், இரக்கம் வேண்டாமா? இந்தக் கோட்டை தாண்டி நானும் வர மாட்டேன், நீயும் வராதே என்று சொன்ன பிறகாவது விட வேண்டாமா? ஜனநாயகன் படத்தை மாதக் கணக்கில் இழுத்தடித்து விட்டார்களே! அதைத் தாங்கிக் கொண்டு இப்ப வரை அழுகவும் முடியாம, அலறவும் முடியாம நீங்க தவிக்கிற தவிப்பைச் சொல்கிறீர்களா? உங்கள் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட போது கூட தேர்தல் ஆணையம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாம, ஸ்டாலின் சார்...
என்று எத்தனை தடவைதான் கத்துவீர்கள் பாவம். தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் தேர்தல் ஆணையம் கைகளில்தான் அனுமதி வழங்குகிற அதிகாரம் எல்லாம் வந்து விடுமென்று தெரிந்தும் ஒரே டயலாக்கை மெயின்டெய்ன் செய்வது எவ்வளவு கஷ்டம் விஜய். உங்கள் வலி புரிகிறது. திரை வேறு... தரை வேறு... விஜய் அவர்களே, நீங்கள் திரையுலகின் உச்சத்தில் இருந்தவர். உங்கள் வருமானத்தை முழுவதுமாக கணக்கில் காண்பிக்கவில்லை என்று எழுந்த பிரச்சனை வேறு. ஆனால் நீங்கள் எவ்வளவு வாங்கி இருப்பீர்கள், அதற்காக எவ்வளவு ரிஸ்க் எடுத்திருப்பீர்கள், ஆடும் போது, குதிக்கும் போது கால் பிசகி இருக்கலாம், காயப்பட்டு இருக்கலாம், கால்ஷீட்டை மாற்ற வேண்டி வந்திருக்கலாம்.
இப்படி சிரமப்பட்டு இருக்கலாம். ஆனால் அதுவெல்லாம் பொது வாழ்வில் ஏற்பட்ட காயம் அல்ல. உங்களை விட துணை நடிகர்கள், டூப் நடிகர்கள் அதிகம் வலி, அதிகம் காயம் அடைந்திருப்பார்கள். பொது வாழ்வில் வலி என்றால், காயம் என்றால் அர்த்தம் வேறு. மக்களுக்கான போராட்டத்தில சிறைக்குப் போவது, தடியடி வாங்குவது, எப்போதும் மக்களோடு இருப்பது, நடை பயணம் ஏதாவது போய் கால் வலியாவது வருவது, நமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் நேரில் ஓடுவது, களம் இறங்குவது... இதுவெல்லாம்தான் வலி... காயம்.
ஆனால் நீங்க கட்சி ஆரம்பித்து இரண்டு வருஷத்துல சுமார் 750 நாட்கள்ல எத்தனை நாள் மக்களை சந்தித்தீர்கள், எத்தனை தொண்டர்களின் நல்லது கெட்டதில் பங்கேற்றீர்கள், மக்களுக்காக போராட்டத்தில் பங்கேற்றீர்கள் என்று தரையில் உங்கள் கால்கள் பதிந்த நாட்களை டைரியை பார்த்து சொல்லுங்களேன். இதுவே வலி இதுவே காயம் அரசியலை, வரலாற்றை அறிந்து பேசுங்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஹர் கிஷன் சிங் சுர்ஜித், வெள்ளையர்களின் துப்பாக்கிகள் சூழும் போதும் அஞ்சாமல் மூவர்ணக் கொடியை அரசு அலுவலகத்தில் ஏற்றியவர். அது வலி. அது காயம். தோழர் சங்கரய்யா சுதந்திரம் அறிவிக்கப்படும் முதல் நாள் வரை சிறையில் இருந்து வெளியே வந்தவர்.
அது வலி, காயம். தனது நாடக கலை ஆற்றலை முழுக்க சுதந்திர இயக்கத்திற்கு அர்ப்பணித்த தோழர் கே.பி. ஜானகி அம்மாள் வாழ்க்கையே வலியும், காயமும் நிறைந்தது. மீசையின் முடிகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்ட போதும் அஞ்சாமல் தேசத்திற்காக, மக்களுக்காக அடக்குமுறைக்கு எதிராக நின்ற தோழர் நல்லக்கண்ணுவின் வாழ்க்கை வலியும், காயமும் நிறைந்தது. ஆனால் இவர்கள் யாரும் தங்களின் வலியை, காயத்தை தங்களின் தனிப்பட்ட பெருமையாகப் பகிர்ந்து கொண்டதில்லை. தாங்கள் ஏற்றுக் கொண்ட லட்சியத்திற்காக தாங்கிக் கொண்டார்கள். கொள்கை எதிரிகளைப் பார்த்து பின்வாங்கவில்லை. ஒங்க “நெஞ்சுல குடி இருக்கிறவங்க” கிட்ட நெஞ்சறிய பேசுங்க விஜய் அவர்களே. பொது வாழ்க்கையில் எது வலி, எது காயம் என்று…!
