மோடி அரசாங்கமும், பாஜகவும், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மீதும், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்க்கும் விதத்திலும் மற்றுமொரு மோசமான தாக்குதலைத் தொடுத்திடத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.
பாஜக 2020 டிசம்பரின் இறுதி வாரத்தில் இணைய தளம் வழியாக 25 கூட்டங்களை நடத்தி இருக்கிறது. அவற்றில் “ஒரு தேசம், ஒரு தேர்தல்” என்னும் சிந்தனையைப் பிரச்சாரம் செய்தது. பிரதமர் நரேந்திர மோடி, அவ்வப்போது “ஒரு தேசம், ஒரு தேர்தல்” என்பதற்கான தேவை குறித்து திருவாய் மலர்ந்து கொண்டிருக்கக்கூடிய பின்னணியில் இது நடந்திருக்கிறது. இதில் மிகவும் சமீபத்திய நிகழ்வு என்பது, அரசமைப்பு தினமான நவம்பர் 26 அன்று நடைபெற்ற ‘80ஆவது அகில இந்திய தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாநாட்டில்’ (80th Presiding Officers’ Conference) நடந்ததாகும்.
பாஜக நடத்திய இணையவழிக் கூட்டங்களில், மக்களவைக்கும் மாநில சட்டமன்ற பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டிய தேவை தொடர்பாக முன்வைக்கப்பட்ட வாதங்கள்: இது அதிக செலவினத்தை மிச்சப்படுத்திடும், அடிக்கடி தேர்தல் நடத்துவதால் வளர்ச்சித் திட்டங்களுக்குக் குந்தகம் ஏற்படுகின்றன. அதிகாரிகளின் கவனம் சிதறடிக்கப்படுகிறது போன்றவையாகும். இவ்வாறு நடைபெற்ற ஓர் இணையவழி கூட்டத்தில்,பாஜக-வின் பொதுச் செயலாளர், பூபேந்திர யாதவ், “தேர்தல்என்பது ஜனநாயகத்தில் ஒரு வழி என்பது மட்டுமே, ஆனாலும் திரும்பத் திரும்ப தேர்தல்கள் என்பது ஜனநாயகத்தின் குறிக்கோளே அது மட்டும்தான் என்றாகிவிடுகிறது. அரசாங்கம் பின்னுக்குப் போய்விடுகிறது,” என்றார்.பாஜக கூறவரும் செய்தி என்பது, அதிக அளவில் நடைபெறும் தேர்தல்கள் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்பதும் தேர்தல்கள் நடத்துவதைவிட ஆட்சி செய்வது முக்கியம் என்பதுமாகும். நிதி ஆயோக்கின் தலைவர் அமிதாப் காந்த், விவசாயிகள் போராட்டம் குறித்துவிமர்சிக்கும் சமயத்தில் இந்தியாவில் “அளவுக்கு மீறியஜனநாயகம்” இருக்கிறது என்று குறைபட்டுக்கொண்டது டன் பாஜகவினரின் வாதங்கள் ஒத்துப்போவதைக் கவனிக்க வேண்டும். அவர்கள் கூறவரும் செய்தி, பகல் வெளிச்சம் போலத் தெள்ளத்தெளிவான ஒன்று. “ஒரு தேசம், ஒரு தேர்தல்” என்பதன் மூலம் அவர்கள் “ஒருதேசம், ஒரு தலைவர்” என்பதற்கு விரிவுபடுத்த முயல்கிறார்கள் என்பதேயாகும். அந்தத் தலைவரோ, “இது ஒன்றும் விவாதிக்கும் விஷயம் அல்ல, மாறாக இந்தியாவிற்கு அத்தியாவசியமான ஒன்று” என்று பிரகடனம் செய்திருக்கிறார்.
கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்க்கும் வேலை
சில பாஜக தலைவர்கள், நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டமன்ற பேரவைகளுக்கான தேர்தல்களுடன் மாநிலங்களின் அனைத்து மட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களையும் ஒன்றாக நடத்திட வேண்டியதும் தேவை என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அனைத்து மட்டங்களிலும் தேர்தல்களை நடத்துவதற்கு, அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் குணாம்சத்தையே அடிப்படையில் மாற்றி விடும். நாட்டின் கூட்டாட்சித் தத்துவம் தகர்க்கப்படும்.
நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்துவது என்பதன் மூலம், மக்களால் குறிப்பிட்ட கால அளவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்என்கிற அரசியலமைப்புச் சட்டப்பொறுப்பு கைவிடப்படுகிறது. அரசமைப்புச்சட்டத்தின் கீழ், ஓர் அரசாங்கம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்டாலோ, அல்லது, நிதிச் சட்டமுன்வடிவில் தோல்வி அடைந்தாலோ, அது ராஜினாமா செய்திடக் கடப்பாடு உடையது. பின்னர் அதற்குப் பதிலாக மாற்று அரசாங்கம் அமைக்கப்படமுடியவில்லை என்றால், நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நாடாளுமன்ற மக்களவைக்கோ அல்லது சட்டமன்றங்களுக்கோ ஆட்சிக்காலம் குறித்து குறிப்பிட்ட கால அளவு என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
குடிமக்களின் உரிமை மீதான தாக்குதல்
2017இல் நிதி ஆயோக்கின் ‘விவாத ஆவணங்களில்’ இது தொடர்பாக முன்மொழிவுகள் தொகுப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 2018இல் சட்ட ஆணையம் இது தொடர்பாக ஒரு வரைவு அறிக்கையையும் தயார் செய்திருக்கிறது. அவை அனைத்தும் நாட்டில் உள்ள சில மாநில சட்டமன்றங்களின் ஆட்சிக் காலத்தைக் குறைத்திட, அல்லது, சிலவற்றின் ஆட்சிக் காலத்தை நீட்டித்திட, முன்மொழிவுகளை அளித்திருக்கின்றன. அப்போதுதான் மக்களவைத் தேர்தல்களுடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்த முடியும், அல்லது, ஐந்தாண்டு காலத்தில் இரு முறை தேர்தல்கள் நடத்த முடியும். இவ்வாறு சில சட்டமன்றங்களின் காலத்தைக் குறைப்பது என்பதும், சில சட்டமன்றங்களின் காலத்தை நீட்டிப்பது என்பதும் - இவை இரண்டுமே ஜனநாயக விரோத நடவடிக்கைகளாகும்; அதுமட்டுமல்ல, தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீது தாக்குதல் தொடுத்திடும் நடவடிக்கைகளுமாகும்.
கொல்லைப்புற வழியாக...
நாடாளுமன்ற மக்களவை/சட்டமன்ற பேரவைகள் இடையில் கலைக்கப்படுவதையும், அவ்வாறு கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவதையும் தவிர்ப்பதற்காகவும், பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானவைகளாகும். நிதி ஆயோக்கின் ஆவணங்களின் மூலம் அளிக்கப்பட்ட முன்மொழிவுகளில் ஒன்று, மக்களவை கலைக்கப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை என்றால், மீதம் உள்ள ஆட்சிக்காலம் மிகவும் குறுகியதாக இருக்கும்பட்சத்தில், அந்த நிலையைச் சரி செய்வதற்காக ஒரு ஷரத்தினைக் கூறியிருக்கிறது. அதாவது, மீதம் உள்ளகாலத்தில் நாட்டை நிர்வகிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்படலாம் என்றும் அடுத்த மக்களவை அமையும் வரையிலும் அவரால் நியமிக்கப்படும் அமைச்சரவையின் அறிவுரை மற்றும் உதவியின்படி அவர் ஆட்சி நடத்தலாம் என்றும் தெரிவிக்கிறது. இந்த மூர்க்கத்தனமான முன்மொழிவு, குடியரசுத் தலைவரை, நாட்டை ஆட்சி நடத்துபவராக மாற்றுகிறது. இது, நாட்டில், குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொல்லைப்புற வழியாகக் கொண்டுவரும் நடவடிக்கையாகும். இதே அணுகுமுறை, மாநில சட்டமன்றங்களுக்கும் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. அங்கே குறைந்தகால அளவிற்கு ஆளுநர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.
மக்கள் தீர்ப்புக்கு மாறாக...
பதவிக் காலத்தை நிர்ணயம் செய்வது என்பதன் பொருள் என்ன? அவையில் உறுதியான பெரும்பான்மை இருக்கும் ஆளும் கட்சி, அவையைக் கலைத்துவிடுங்கள் என்றோ, விரைவில் தேர்தல் நடத்துங்கள் என்றோ பரிந்துரை செய்யாது. சட்ட ஆணையம் அளித்துள்ள அறிக்கையின்கீழ் அளிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளில் ஒன்று, மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அவ்வாறு கொண்டுவரப்படும்போது, மாற்று அரசாங்கத்தினை நடத்தும் புதிய தலைவரின் பெயரையும் தீர்மானத்தில் குறிப்பிட வேண்டும் என்கிறது. இது, “நம்பிக்கை இல்லை என்பதற்கு ஆக்கப்பூர்வமான வாக்கு” (“constructive vote of no confidence:) என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களால் ஓர் அரசாங்கத்தின்மீது நம்பிக்கை இல்லை என்று வாக்களிக்கப்பட்டு அது நீக்கப்பட்டாலும், அந்த இடத்தில் மாற்று அரசாங்கம் ஒன்று அமைந்திட வேண்டும் அல்லது, மக்களால் தெரிவுசெய்யப்படாத கூட்டணி அரசாங்கமாவது அமைந்திட வேண்டும் என்பதாகும். இவற்றின் மூலமாக பதவிக் காலத்தை நிர்ணயம் செய்திருப்பதன் மூலமாக ஸ்திரத்தன்மைக்கு முதன்மை கொடுக்கப்பட்டிருக்கிறதேயொழிய, இங்கே மக்களின் தேர்வு என்பது பொருத்தமற்றதாக மாறுகிறது.
இத்தகைய அமைப்புமுறையின் மூலமாக மாநில சட்டமன்றங்களையும், மாநில அரசாங்கங்களையும் மத்திய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திட முடியும். அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும்பட்சத்தில், அவையைக் கலைத்திடும் அதிகாரம் துண்டிக்கப்பட்டுவிட்டதால், ஆட்சிக் காலம் ஐந்தாண்டுகள் என்பதைப் பூர்த்தி செய்திட, மீதமுள்ள காலத்திற்கு மாற்று அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் தேவை ஏற்படுகிறது. இத்தகைய அரசாங்கமானது, ஆளுநரின் விருப்பத்தைச் சார்ந்தே முழுமையாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆளுநர்தான், எவர் அரசாங்கத்தை அமைத்திட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும். இவ்வாறான நிரந்தர ஆட்சிக் காலம் என்பது, நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் அக்காலத்திற்குள் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிற பயம் எதுவுமின்றி, கட்சித் தாவல் மேற்கொள்வதற்கான உரிமத்தையும் அவர்களுக்கு அளிக்கிறது.மத்திய ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக செயல்பட்டுவரும் ஜகதீப் தங்கர், பகத் சிங் கோஷ்யாரி, ஆரிப் முகமது கான் போன்ற ஆளுநர்களைக் கவனத்தில் கொண்டோமானால், இத்தகைய நிலை எந்த அளவிற்கு பேரழிவினை ஏற்படுத்திடும் என்பதை ஒருவர் மிக எளிதாக உணர முடியும்.
நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால், அதற்கேற்ற வகையில் அரசமைப்புச்சட்டம் மிகப்பெரிய அளவில் மறுசீரமைக்கப்பட வேண்டும். இதற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இதர விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியதுடன், அரசமைப்புச் சட்டத்தில் 83ஆவது பிரிவு (அவையின் காலம் குறித்து), 85ஆவது பிரிவு (மக்களவையைக் கலைப்பது குறித்து), 172ஆவது பிரிவு (சட்டமன்றங்களின் காலம் குறித்து), 174ஆவது பிரிவு (மாநில சட்டமன்றங்களைக் கலைப்பது குறித்து), 356ஆவது பிரிவு (அரசமைப்பு எந்திரம் தோல்வியடைந்திருப்பது) ஆகியவற்றிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும்.
காங்கிரஸ் கடுமையாக இருக்க வேண்டும்
பாஜக, 2014இல் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காலத்திலிருந்தே, “ஒரு தேசம், ஒரு தேர்தல்” என்னும் சிந்தனையைத் தொடர்ந்து பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது. குடியரசுத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவரும் இந்த சிந்தனையோட்டத்தை, சரியென்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தற்போதைய பாஜகவின் பிரச்சாரம் இந்தத் திசைவழியில் வேகமாகச் சென்றுகொண்டிருப்பதைக் காட்டுகிறது. அரசமைப்புச் சட்டத் திருத்தங்களும், மாற்றங்களும் ஆளும் கட்சியின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு பெரிய அளவில் தடைக்கற்களாக விளங்கும் என்று நினைத்தோமானால், நாம் தவறிழைத்து விடுவோம். இவர்கள், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இல்லாது ஒழித்துக்கட்டியதிலும், 370ஆவது பிரிவை ரத்து செய்ததிலும் எந்த அளவிற்கு மோசமான முறையில் அரசமைப்புச்சட்டத்தில் சொற்புரட்டுகளில்ஈடுபட்டார்கள் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.நாடாளுமன்றத்தில் பாஜக இது தொடர்பாக நடவடிக்கைகளைக் கொண்டுவரும்போது எதிர்க்கட்சிகள் இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்திடக் கூடாது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக கவனத்துடன் இருந்திட வேண்டும். காஷ்மீர் பிரச்சனையில் 370ஆவது பிரிவை நீக்குவது தொடர்பாக, அதனிடமிருந்த ஊசலாட்டத்தை, பாஜக நன்கு பயன்படுத்திக்கொண்டதைப் பார்த்தோம்.
மாநிலக் கட்சிகளும், குறிப்பாக ஆட்சியில் உள்ள மாநிலக் கட்சிகள், “ஒரே தேசம், ஒரே தேர்தல்” என்கிற எதேச்சதிகாரத் திட்டத்தின் விளைவாக, கடும் இழப்பினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மாநில அரசாங்கங்களுக்கு இப்போது இருந்துவரும் குறைந்தபட்ச சுயாட்சி உரிமையும் பறிபோகும். இப்போது இருந்துவருவதைப் போன்று சட்டமன்றத்தைக் கலைத்திடப் பரிந்துரைப்பது போன்ற ஜனநாயக நெறிமுறைகள், அல்லது, சட்டமன்றத் தேர்தல்களுக்கான அரசியல் நிகழ்ச்சிநிரலை வடிவமைப்பது போன்றவை பறிபோய்விடும். ஏனெனில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும்போதுதான் மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறும் என்பதால் மாநில அரசுகள் இவற்றில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது.
சந்தர்ப்பவாதிகள்
மாநில உரிமைகள் பற்றி ஒடிசாவில் உள்ள பிஜு ஜனதா தளம், தெலுங்கானாவில் உள்ள தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஆந்திராவில் உள்ள ஒய்எஸ்ஆர்சிபி போன்ற கட்சிகள் சந்தர்ப்பவாத நிலை எடுத்ததன் காரணமாக, பாஜக அரசாங்கம் மாநில உரிமைகள் மீது பல்வேறு தாக்குதல்களைத் தொடுத்துப் பறித்துக்கொண்டுள்ளது. இப்போதாவது அவை விழித்துக்கொள்ள வேண்டும். பாஜகவின் ஜனநாயக விரோத, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்திட முன்வர வேண்டும். நாட்டிலுள்ள இதர எதிர்க்கட்சிகளுடன் அவர்களும் கைகோர்ப்பார்களானால், பாஜகவின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்திட முடியும்.
ஜனவரி 6, 2021
பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்
தமிழில்: ச. வீரமணி