கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி, மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்துடன் மீண்டும்ஆட்சிப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் பல அம்சங்களில் ஒரு குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பிடத்தக்க முதல் அம்சம் என்பது, கேரளாவில் நடைபெற்ற தேர்தல்களில் 1977க்குப் பின்னர் முதன்முறையாக இப்போதுதான் ஆட்சியில் உள்ள ஓர் அரசாங்கம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகும். மாநிலத்தில்இதற்கு முன் இடதுசாரிகள் தலைமையிலான எந்தவொருஅரசாங்கமும் தொடர்ச்சியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. கேரளாவில் முதல் அமைச்சரவை 1957இல் கம்யூனிஸ்ட் கட்சியால் அமைக்கப்பட்டது. கேரளாவின் நவீன அரசாங்கம் நிறுவப்பட்ட பின்னர் நடைபெற்ற தேர்தலில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாக அதுஇருந்தது. தோழர் இ.எம்.எஸ். அவர்களின் தலைமையில் அது அமைந்தது. அந்த அரசாங்கம் 29 மாதங்களுக்குப் பின்னர் மத்திய அரசால் ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டது. 1967
இல் இடதுசாரிகள் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கமும் தன் முழுமையான பதவிக் காலத்தையும் பூர்த்தி செய்ய முடியவில்லை. 1980 தேர்தலுக்குப் பின்னர்அமைந்த இ.கே. நாயனார் தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சிக் காலமும் குறுகிய காலமே இருந்தது. 1987, 1996 மற்றும் 2006 ஆகிய இடது ஜனநாயக முன்னணி அரசாங்கங்கள்தான் தங்கள் முழுப் பதவிக் காலத்தையும் நிறைவு செய்தன என்ற போதிலும் அவை மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த நடைமுறையிலிருந்து ஒரு வரலாற்றுரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில்2016இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பினராயி விஜயன் அரசாங்கம் இப்போது மீண்டும் முன்பை விட அதிக வித்தியாசத்துடன் இரண்டாவது முறையாகத்தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது குறிப்பிடத்தக்க அம்சம், இடது ஜனநாயகமுன்னணி அரசாங்கம் முன்பு இருந்ததைவிட பெரிய அளவில் வாக்கு வித்தியாசத்துடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகும். இடது ஜனநாயக முன்னணி, 2016இல் மொத்தம் உள்ள 140 இடங்களில் 91இல் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 140 இடங்களில் 99 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. இது மொத்தம் உள்ள இடங்களில் சுமார்71 சதவீதமாகும் மற்றும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கும் அதிகமாகும். மேலும், இடது ஜனநாயக முன்னணி மக்களின் அபரிமிதமான ஆதரவுடன் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. 2016இல் இடது ஜனநாயக முன்னணிக்குக் கிடைத்திருந்த வாக்குகள் 43.3சதவீதமாகும். ஆனால் இப்போது 2021இல் அதற்கு 45.3சதவீதம் வாக்குகள் கிடைத்திருக்கிறது. இடது ஜனநாயகமுன்னணி அனைத்துப் பிரிவு மக்கள் மத்தியிலிருந்தும் - சமூகத்தின் அடிப்படை வர்க்கங்களிடமிருந்தும், பெண்களிடமிருந்தும், வாலிபர்களிடமிருந்தும், தலித்துகளிடமிருந்தும் மதச்சிறுபான்மையினரிடமிருந்தும் - அபரிமிதமான ஆதரவினைப் பெற்றிருக்கிறது. கேரளாவில் இந்த முறை பாஜக-விற்கும் காங்கிரசுக்கும் இடையே வாக்குகளைப் பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட, கபடத்தனமான சூழ்ச்சிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆராய்வோமானால் இப்போது இடது ஜனநாயக முன்னணிக்குக் கிடைத்திருக்கிற வெற்றியின் அளவு மேலும் பல மடங்கு அதிகமாகும். இந்த முறை ஐக்கியஜனநாயக முன்னணியானது பாஜக-விடமிருந்து வாக்குகள் மாற்றப்பட்டிருப்பதன் மூலம் மட்டும் பத்து இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
குறிப்பிடத்தக்க மூன்றாவது அம்சம், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் இடதுசாரிக் கண்ணோட்டத்துடன் பின்பற்றிய திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி மாடலும், அதனை அமல்படுத்திய விதமும் மக்கள் மத்தியில் விரிவான அளவில் ஏற்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது. மத்திய அரசாங்கம் திட்டக் குழுவை ஒழித்துக்கட்டிய பின்னர், இந்தியாவிலேயே ‘ஐந்தாண்டுத் திட்டங்கள்’ மற்றும் ‘ஆண்டுத் திட்டங்கள்’ நடைமுறைகளுடன் செயல்படக்கூடிய ஒரேயொரு மாநில அரசாங்கம் என்பது இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மட்டுமேயாகும். மாநிலத்தின் சமூக வளர்ச்சி, குறிப்பாக அதன் பொதுக் கல்வி, பொதுச் சுகாதாரம், சமூக நலம் மற்றும் சமூக நீதிஆகியவற்றின் அடிப்படையில் மாநிலத்தின் பாரம்பர்யத்தைக் கட்டி எழுப்பிடவும், வலுப்படுத்திடவும் கூடிய ஒரு கொள்கைத் திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்தியது.
இந்த முனைகளில் மனிதவள மேம்பாட்டு வளர்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்தி சாதனைகளை எய்திடும் அதே சமயத்தில், இவற்றின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகளை, குறிப்பாக இளைஞர்களுக்கு உருவாக்கிடவும், உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்பிடவும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அரசாங்கம்தீர்மானித்தது.நாடு முழுதும் கல்வித்துறையிலும் சுகாதாரத் துறையிலும் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடித்துக்கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், மாநிலத்தில் பொதுக் கல்வி மற்றும் பொதுச் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மாநில அரசாங்கத்திடம் இவற்றுக்கான வள ஆதாரங்களில் தடைகள் பலஇருந்தபோதிலும், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் இவற்றுக்காக வள ஆதாரங்களைப் பெருக்கிய விதமும், அதற்காக கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் போன்று ஒரு முகமையை உருவாக்கி அதன் மூலமாக இவற்றை அமல்படுத்திய விதமும் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
வளர்ச்சிக் கொள்கையின் தனித்துவமிக்க மற்றுமொரு முக்கிய அம்சம், இத்திட்டங்களின் நடைமுறைகளில் மக்களின் பங்கேற்பையும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கினையும் ஈடுபடுத்தியதாகும். உதாரணமாக, குடும்பஸ்ரீ மகளிர் குழுக்கள், மாநிலத்தில் வருமான நடவடிக்கைகளில் முக்கிய பங்கினை ஆற்றின.இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முழுவதும் அது மதச்சார்பின்மையை பாதுகாத்து, அனைத்து மதவெறி சக்திகளுக்கும் எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டினையும் உறுதியுடன் பின்பற்றியது.
நிறைவாக, மாநிலத்தை அடுத்தடுத்துத் தாக்கிய இயற்கைப் பேரிடர்களை, 2017இல் ஒக்கி புயல், அதனைத் தொடர்ந்து அதீதமான அளவில் பெய்த மழை வெள்ளம் மற்றும் 2018 மற்றும் 2019இல் ஏற்பட்ட மண்சரிவுகள், 2018இல் நிபா வைரஸ் நோய் தாக்குதல் மற்றும்2020-21இல் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பரவல் என அனைத்தையும் பினராயி விஜயன் அரசாங்கம்சமாளித்த விதம், மக்கள் மத்தியில் இது தனித் தன்மை கொண்ட தரமான ஓர் அரசாங்கம் என்பதைக் காட்டியது. மக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஓர் அரசாங்கத்தை ஆய்வு செய்வது என்பது, எப்படி அது மக்களின் வாழ்க்கைமற்றும் வாழ்வாதாரங்களைப் பாதித்திடும் நெருக்கடிக் காலங்களில் அவற்றை வலுவான முறையில் சமாளித்து, வெற்றி பெறுகிறது என்பதையே அடிப்படையாகக் கொண்டிருக்கும். இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் இந்தச்சோதனைகளில் எல்லாம் அனைவரும் போற்றிப் பாராட்டத்தக்க விதத்தில் தேர்ச்சி அடைந்தது.
இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியையும், பாஜக-வையும் எதிர்த்துப் போட்டியிட்டது. இவ்விரு சக்திகளும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நச்சுப்பிரச்சாரத்தில் ஈடுபட்டன. அரசாங்கத்திற்கும், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்திட, மத்திய உளவு அமைப்புக்களைப் பயன்படுத்தி அனைத்துவிதமான இழி முயற்சிகளிலும் ஈடுபட்டன. 1980இல் இடதுசாரி எதிர்ப்பு அணிகளைச் சேர்ந்து உருவான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் அரசியல் வாழ்வு இப்போது கிட்டத்தட்ட இறக்கும்நிலைக்கு வந்துவிட்டது. மிகவும் தம்பட்டம் அடித்துக்கொண்டும், பணத்தை வாரி இறைத்தும் செயல்பட்ட பாஜக,முன்பு அது பெற்றிருந்த ஓரிடத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரிடம் பறிகொடுத்திருக்கிறது.
இம்மாபெரும் வெற்றிக்குப் பினராயி விஜயனின் பங்களிப்பும் அவருடைய ஆளுமையும்தான் காரணம் என்று சில ஊடகங்களும், சில அரசியல் விமர்சகர்களும் இவ்வரலாற்று வெற்றியைக் குறைத்து மதிப்பிடும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றன. அவர்களின் பார்வையில், இடதுஜனநாயக முன்னணியின் தேர்தல் வெற்றிக்குப் பிரதான காரணம் ஒரு “மாபெரும் தலைவர்” (“Supreme Leader”) அல்லது ஒரு “வலுவான மனிதர்” (“strong man”) தோன்றியிருப்பதே காரணமாகும். அவர்கள் பார்வையில், அவர்தான் அரசாங்கத்தையும், கட்சியையும் ஆதிக்கம் செலுத்தினார் என்பதாகும். தோழர் பினராயி விஜயன் முதலமைச்சராக, கொள்கைகளை உருவாக்குவதில் அரசியல் வழிகாட்டுதல்களை அளித்ததில் ஒரு புதிய தரத்தை அமைத்துத்தந்துள்ளார் என்பதிலோ, எப்போதும் மக்களின் நலன்களையே மனதில் கொண்டிருந்தார் என்பதிலோ, அமல்படுத்தப்படும் கொள்கைகள் நிர்வாகத் திறமையுடன் வெளிக்கொணரப்படுவதில் கண்ணுங்கருத்துமாக இருந்தார் என்பதிலோ எள்ளளவும் சந்தேகமில்லை. இருப்பினும், வெற்றிக்குக் காரணம் தனிநபர் மற்றும் கூட்டு முயற்சிகளேயாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணியைப் பொறுத்தவரை, புதிதாக அமையவிருக்கும் அமைச்சரவை, கூட்டுச் செயல்பாடு மற்றும் தனிநபர் பொறுப்பு என்கிற மரபை தொடர்ந்திடும்.
கடந்த ஐந்தாண்டு காலமாக இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் ஒரு பாதகமான அரசியல் சூழலில்ஆட்சி செய்ய வேண்டியிருந்தது. நாடு முழுதும் கட்டவிழ்த்துவிடப்பட்ட வலதுசாரித் தாக்குதல் காரணமாக, இடதுசாரிகள் மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் அதன் கோட்டைகளை இழந்திருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் அதன் பிரதிநிதித்துவம் மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஓராண்டுகாலமாக மாநிலத்தில் செயல்பட்டுவரும் வலதுசாரி மற்றும்கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சக்திகள் கேரள அரசாங்கம் இயங்கமுடியாத விதத்தில் பலவிதங்களில் முட்டுக்கட்டைகள் போட்டுவந்தன. ஆனாலும், இடது ஜனநாயக முன்னணிஅரசாங்கம் அவற்றையெல்லாம் எதிர்த்து முறியடித்து, விடாமுயற்சியுடன் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் அமல்படுத்தின.
இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, இன்றைய தினம் நாட்டிற்கும் இடதுசாரிகளின் ஆட்சி அவசியம் என்பதைக் காலத்தே நினைவூட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. கேரள அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகள், மத்தியில் ஆளும்நவீன தாராளமய இந்துத்துவா ஆட்சியின் கொள்கைகளுக்கு எதிராக மிகவும் முக்கியமான மாற்றுக் கொள்கைகளைப் பிரதிபலிக்கின்றன.மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி, கேரளத்தைசிறந்ததொரு சமூகமாக மாற்றுவதற்காகச் செயல்படவிருக்கும் புதிய இடது முன்னணி அரசாங்கம், நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் வாழ்த்துக்களையும், ஆதரவினையும் பெற்றிருக்கிறது.
(மே 5, 2021), தமிழில் : ச.வீரமணி