articles

தேர்தல் பிரச்சாரத்தில் மதவெறி நச்சு பேச்சு பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் மத்தியக்குழு வலியுறுத்தல்

புதுதில்லி, நவ.6- ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதவெறி நஞ்சை உமிழ்ந்து பேசி வரும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி வலி யுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் புதுதில்லியில் நவம்பர் 3-5 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கை வருமாறு:

ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியவர்களால் வழிநடத்தப்படும் பாஜக தலைவர்கள் ஆற்றிடும் உரைகள் மதவெறி நஞ்சை உமிழக்கூடிய விதத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. இவை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அளித்துள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முற்றிலும் விரோத மானவைகள் என்பது தெள்ளத்தெளிவாகும். 

பிரதமர் உரையாற்றும்போது முஸ்லிம்களை குறிவைத்து தாக்கும் விதத்தில் அவர்களை, ‘ஊடுரு வியவர்கள்’ (“ghuspetias”) என்று கொச்சைப்படுத்தி நேரடியாகவே வாசகங்களை உதிர்த்திருக்கிறார். மேலும் அவர் பேசுகையில் அவ்வாறு ஊடுருவி வந்த வர்கள் உங்கள் (பழங்குடியினரின்) ரொட்டியையும், உங்கள் மகள்களையும் எடுத்துச் சென்று கொண்டி ருக்கிறார்கள் என்று பேசும் அளவிற்குச் சென்று தான் உரையாற்றும் போது முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு மற்றும் மதவெறி நஞ்சை  உமிழும் அள விற்குச் சென்றுள்ளார். இது, சமூகத்தில் மக்களி டையே பிளவினை ஏற்படுத்தி வாக்குகளைப் பறித்திடும் முயற்சி என்பது தெளிவாகும். இது போன்ற பேச்சுகளின் மீது தேர்தல் ஆணையம் தாமா கவே முன்வந்து நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத் தக்கதாகும். 

இதுபோன்று பேசிவரும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் தாங்கள் நாட்டில் உள்ள சட்டங்க ளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று கருதுவதுபோல் தெரிகிறது. இவ்வாறு மதவெறி அடிப்படையில் அமைந்துள்ள பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக தலைவர்களின் பேச்சுகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பிட வேண்டும் என்று நாம் கோருகிறோம். இவ்வாறு பேசுவோரின் பட்டியலில் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் ஒன்றிய அமைச்சர் சிவ் ராஜ் சௌஹான் ஆகியோரும் அடங்குவர்.

மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் சிபிஎம் போட்டி

மகாராஷ்டிராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மஹா விகாஷ் அகாதி அணியுடன் செய்துகொண்டுள்ள இட ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இவ்விரு தொகுதிகளில் ஒன்று தானே-பால்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள தஹானு (பழங்குடியினருக்கான தொகுதி) ஆகும். இத்தொகுதியில் இப்போது அங்கே சட்டமன்ற உறுப்பினராக இருந்துவரும் வினோத் நிகோலே மீண்டும் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். மற்றொரு தொகுதி நாசிக் மாவட்டத்தில் கல்வான் தொகுதி யாகும். இதுவும் பழங்குடியினருக்கான தொகுதியே யாகும். ஐந்து முறை எம்எல்ஏ-வாகவும், கடந்த தேர்த லில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவருமான ஜே.பி. காவிட் போட்டியிடுகிறார். இத்துடன், சோலாபூர் சிட்டி சென்ட்ரல் தொகுதியில் முதுபெரும் தலைவரும், மூன்று முறை எம்எல்ஏ-ஆகவும் இருந்த நரசய்யா ஆதாம் நட்புரீதியாகப் (friendly contest) போட்டி யிடுகிறார்.  

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி க்குத் தலைமை தாங்கிடும் ஜேஎம்எம் கட்சி, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் விவாதங்கள் மேற் கொள்ள எவ்வித முன்முயற்சியும் எடுக்காத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்மாநிலத்தில் ஒன்பது இடங்களில் போட்டியிடத் தீர்மானித்திருக்கிறது. இவற்றில் பழங்குடியினருக்கான தொகுதிகள் ஐந்தும், தலித்துகளுக்கான தொகுதி ஒன்றும் அடங்கும். மற்ற தொகுதிகளில் கட்சி, பாஜக-வையும் அதன் கூட்ட ணிக் கட்சிகளையும் தோற்கடிப்பதற்காக அங்கே நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களில் எவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கருதப்படுகிறதோ அவருக்கு ஆதரவு அளித்திட முடிவு செய்திருக்கிறது.

மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்ட தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்

டிஜிட்டல்மயப்படுத்துகிறோம் என்ற பெயரில்  கிராமப்புற ஏழைகளாக, மிகவும் அவலநிலையில் வாழ்ந்துவரும் மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழான தொழிலாளர்க ளின் உரிமைகள் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டி ருக்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று, கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப் பட்டிருந்த தொழிலாளர்களில் சுமார் எட்டு கோடி பேர் பதிவு நீக்கப்பட்டு, இச்சட்டத்தை மீறி,  அவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டிருக்கிறது. 

இந்த ஆண்டின் பட்ஜெட் ஒதுக்கீட்டிலும், இத்திட்டத் திற்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீத அடிப்படையில் பார்க்கும்போது கடுமையாக வெட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையும், பட்ஜெட் ஒதுக்கீட்டில் கடுமையான வெட்டுக்களை ஏற்படுத்தி இருப்பதும் இணைந்து, நாட்டுப்புற ஏழை மக்களுக்கு  ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்கிற சட்டப்பூர்வ உரிமைகள் மீதான தாக்குதலைத் தவிர வேறில்லை. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன் றத்தின் நிலைக்குழு, வேலை நாட்களை ஆண்டுக்கு 150 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்றும், பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்து ரைத்திருந்தது. இந்தப் பரிந்துரைகளை ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டும்.

உரம் பற்றாக்குறை  

இந்த ஆண்டு திட்டமிடலில் போதுமான அளவு டிஏபி இருப்பு இருப்பதில் தோல்வியடைந்தது விவசாயி களுக்கு பெரும் பற்றாக்குறையையும் நெருக்கடியை யும் உருவாக்கியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 34.5 லட்சம் டன்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதே கால கட்டத்தில் 19.7 லட்சம் டன்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டு உற்பத்தியிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2024 அக்டோபர் 1 அன்று பரிந்துரைக்கப்பட்ட 27-30 லட்சம் டன்களுக்கு பதிலாக வெறும் 15-16 லட்சம் டன்கள் மட்டுமே கையிருப்பில் இருந்தன. அக்டோ பர் நடுப்பகுதியிலிருந்து டிசம்பர் நடுப்பகுதி வரை யிலான தேவை சுமார் 60 லட்சம் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் டிஏபி, யூரியா, எம்ஓபி (MoP) போன்றவற்றின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள னர். மேலும் அவர்கள் அரசு நிர்ணயித்த டிஏபியின் உச்சபட்ச விலையைக் காட்டிலும் (MRP), சுமார் ரூ.300 முதல் ரூ.400 கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது, அதாவது 50 கிலோ மூட்டைக்கு ரூ.1,350 செலுத்த வேண்டி இருக்கிறது. ஆயினும் ஒன்றிய அரசு தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, இவற்றை யெல்லாம் மறுத்திடும் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. மேலும் நானோ யூரியா (nano-Urea), நானோ டிஏபி (nano-DAP) போன்ற உரங்களைப் பயன்படுத்துங்கள் என்று பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறது. இவற்றின் செயல்திறன் கேள்விக்குரிய வைகளாகும்.  

யூரியா மற்றும் டிஏபி உள்நாட்டு உற்பத்தியை இந்தியா விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசிய மாகும். உரங்களின் விலைகள் மீதிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் விளைவாக அவற்றின் விலைகள் உயர்ந்திருப்பதே முக்கியமான பிரச்சனையாகும். தற்போது யூரியாவின் விலை மட்டுமே நிர்வகிக் கப்படுகிறது, இதன் விளைவாக மற்ற உரங்களை விட யூரியாவின் பயன்பாடு அதிகமாக உள்ளது.

கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கான தயாரிப்புப் பணிகள்

2022 ஏப்ரலில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில் வகுக்கப்பட்ட அரசியல்-நடைமுறை உத்தி கள் அமலாக்கம் சம்பந்தமான அரசியல் ஆய்வு அறிக்கையை (Political Review Report) மத்தியக் குழு விவாதித்து, ஏற்றுக்கொண்டது. இது, 2025 ஏப்ரல் 2-6 தேதிகளில் மதுரையில் நடைபெறவுள்ள கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டுக்கான வரைவு அரசியல் தீர்மானத்திற்கான அடிப்படையாக அமைந்திடும். மேலும் மத்தியக் குழு கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கான பிரதிநிதிகள் ஒதுக்கீடு தொடர்பாக நடைபெறவிருக்கின்ற கட்சியின் ஒவ்வொரு மாநில மாநாடுகளிலும் ஒதுக்கீடு செய்ய வேண்டிய பிரதிநிதிகளின் எண்ணிக்கை தொடர்பா கவும் இறுதிப்படுத்தப்பட்டது.

தமிழில் : ச.வீரமணி