articles

img

வண்ணக்கதிர் 4

ஒரே ஒரு பட்டாணி சொன்ன கதை

உதயசங்கர்

கண்டுமணிப் பாட்டிக்கு யாரும் இல்லை. தனியாகக் குடிசையில் இருந்தார். குடிசைக்குப் பின்னால் ஒரு பட்டாணிச்செடி வளர்த்தாள். அந்தப் பட்டாணிச்செடி ஒரே ஒரு பூ பூத்தது. அந்த ஒரே ஒரு பூ ஒரே ஒரு காய் காய்த்தது. குண்டுமணிப்பாட்டி அந்த ஒரே ஒரு காயைப் பறித்து உரித்தாள். அதில் ஒரே ஒரு பட்டாணி இருந்தது. குண்டுமணிப்பாட்டி அந்த ஒரே ஒரு பட்டாணியை ஒரு மண்சட்டியில் போட்டு மூடி வைத்தாள். மறுநாள் அந்த ஒரே ஒரு பட்டாணியைச் சமைத்துச் சாப்பிடலாம் என்று நினைத்தாள். இரவானதும் அந்த ஒரே ஒரு பட்டாணி தூக்கத்திலிருந்து முழித்தது. எப்போதும் பகலில் தூங்கி இரவில் முழித்து பட்டாணி தேசத்துக்குப் போய் ஆடி ஒடி விளையாடி விட்டு காலையில் திரும்பி வந்து செடியில் தூங்கும். இப்போது முழித்துப் பார்த்தால் ஒரே இருட்டாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் அந்தப் பட்டாணிக்குத் தெரிந்து விட்டது. குண்டுமணிப்பாட்டி பறித்து உரித்து வைத்து விட்டாள். பட்டாணி தேசத்துக்குப் போக வேண்டும். என்ன செய்ய? அந்த ஒரே ஒரு பட்டாணி, “ குண்டுமணிப்பாட்டி குண்டுமணிப்பாட்டி.. ” என்று கூப்பிட்டது. உறங்கிக் கொண்டிருந்த குண்டுமணிப்பாட்டிக்கு யாரோ குசுகுசு என்று பேசுகிற சத்தம் கேட்டது. களவாணிப்பயல் வந்துட்டானோ? அவர், “ யாரு? “ என்று குரல் கொடுத்தார். இப்போது பேச்சுச் சத்தம் கேட்கவில்லை. குண்டுமணிப்பாட்டி எழுந்து விளக்கைப் போட்டார். உள்ளே வெளியே தேடினார். யாரும் இல்லை. மறுபடியும் அந்தச் சத்தம் கேட்டது, “ குண்டுமணிப்பாட்டி குண்டுமணிப்பாட்டி..” அப்போது தான் குண்டுமணிப்பாட்டி ஒரே ஒரு பட்டாணியை மூடி வைத்திருந்த கிண்ணத்துக்குள்ளிருந்து சத்தம் வருவதைக் கேட்டாள். மெல்லப் பயந்து கொண்டே, ஒரே ஒரு பட்டாணியை மூடி வத்திருந்த மூடியை எடுத்தாள். அது தான் சரியான நேரம் என்று அந்தப் பட்டாணி துள்ளிக்குதித்தது. உருண்டு ஓடி மண்பானைக்குக் கீழே ஒளிந்து கொண்டது. அது குண்டுமணிப் பாட்டிக்குத் தெரியாது. கிண்ணத்தில் ஒரே ஒரு பட்டாணி இல்லை. அவர் யோசித்தார். அங்கே தான் வைத்தோமா? என்று சந்தேகம் வந்து விட்டது. கீழே தரையில் அங்கும் இங்கும் தேடிப்பார்த்தார். கிடைக்கவில்லை. சரி நாளைக்கும் குழந்தைகள் பட்டினி தான் என்று நினைத்துக் கொண்டே படுத்து விட்டார். அவர் தினமும் அந்த ஊரில் இருக்கும் ஏழைக்குழந்தைகளுக்கு உணவு கொடுப்பார். அவரிடம் என்ன இருக்கிறதோ அதைப் பகிர்ந்து கொடுப்பார். அவர் பேசியதைக் கேட்ட ஒரே ஒரு பட்டாணிக்கு வருத்தமாகி விட்டது. அடடா! குழந்தைகளைப் பட்டினி போடலாமா? என்று நினைத்தது. தரையில் ஒரு குதி குதித்தது. உடனே அந்தக் குடிசையில் சமையலுக்கான காய்கறிகள் நிறைந்து விட்டன. கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலைங்காய், பீர்க்கங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், முள்ளங்கி, கேரட், என்று காய்கள் எல்லாம் அணிவகுத்து நடந்து வந்தன. குண்டுமணிப்பாட்டி வைத்திருந்த சுளகில் போய் நல்ல பிள்ளைகளாய் உட்கார்ந்து கொண்டன. ஒரே ஒரு பட்டாணி மெல்ல உருண்டு, பட்டாணி தேசத்துக்குப் போய் விட்டது. ஆடிப்பாடிக் கொண்டாட்டம் முடிந்து காலையில் குண்டுமணிப்பாட்டி வீட்டுக்கு வந்து அதே பானைக்குக் கீழே ஒளிந்து கொண்டது. காலையில் கண்விழித்துப் பார்த்த குண்டுமணிப்பாட்டிக்கு ஆச்சரியம். “ யார் இவ்வளவு காய்கறிகளையும் கொண்டு வந்தது? “ என்று யோசித்தார். ஏதோ ஒரு அதிசயம் நடக்குது. பரவாயில்லை. எப்படியாவது குழந்தைகள் நன்றாகச் சாப்பிட்டால் போதும். சத்தமாக,  “ வெறும் காய் மட்டும் இருந்தால் போதுமா? தானியங்கள் இருந்தால் தானே பொங்கிச் சாப்பிட முடியும்? “ என்று சொல்லி விட்டு உறங்கி விட்டார். அதைக் கேட்ட ஒரே ஒரு பட்டாணி தரையில் மூன்று முறை குதித்தது. உடனே நெல், கேப்பை, கம்பு, குருதவாலி, சாமை, தினை, வரகு, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, கடுகு, சீரகம், உளுந்தம்பருப்பு, எல்லாம் வரிசை வரிசையாக வந்து குண்டுமணிப்பாட்டியின் குடிசையில் நிறைந்தன. காலையில் எழுந்த பாட்டிக்கு அதிசயமாக இருந்தது. அன்று அவர் ஊரில் ஏழைக்குழந்தைகள் அறுசுவை சாப்பாடு சாப்பிட்டார்கள். சாப்பாட்டுக்குச் சிரமப்பட்ட அத்தனை பேரையும் அழைத்து சாப்பாடு போட்டார். அதுமட்டுமல்ல, தானியங்களையும் அள்ளி அள்ளிக் கொடுத்தார். அதன் பிறகு அவர் எப்போது என்ன வேண்டும் என்றாலும் வாய்விட்டுச் சொன்னால் போதும். அது நடந்து விடும். ஏனெனில் ஒரே ஒரு பட்டாணி அந்தப் பானைக்குக் கீழேயே தங்கி விட்டது. ஆனால் ஒன்று. குண்டுமணிப்பாட்டி அவருக்காக எதையுமே கேட்டதில்லை. அதனால் தான் இத்தனை ஆண்டு காலமானாலும் பட்டாணி அங்கேயே இருக்கிறது. கொஞ்ச நாளில் குண்டுமணிப்பாட்டிக்கும் இதெல்லாம் அந்த ஒரே ஒரு பட்டாணியின் வேலை தான் என்று தெரிந்து விட்டது.. ஒரே ஒரு பட்டாணி, இந்தக் கதையைத் தான் பட்டாணி தேசத்தில் சொல்லிக் கொண்டிருந்த போது கேட்டேன். அதைத் தான் உங்களுக்குச் சொன்னேன் குழந்தைகளா! நான் எப்படிக் கேட்டேன் என்று நினைக்கிறீர்களா? நானும் ஒரு பட்டாணி. ஹா ஹா ஹா ஹா