articles

img

“மக்கள் தடுப்பூசி” அமெரிக்கா இறங்கி வந்திருக்கிறதா?

தடுப்பூசிகளுக்கான காப்புரிமை விலக்கம் செய்யப்படுவது குறித்த பிரச்சனையில் அமெரிக்கா இறங்கி வந்திருக்கிறதா?தடுப்பூசிகளுக்கான “அறிவு சார் சொத்துரிமையை” (IPR) உலகளாவிய அளவில் விலக்கி வைத்து “மக்கள் தடுப்பூசிகளை” உறுதி செய்வது முக்கியம். இதற்கான ஒரு முன்மொழிவை இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இணைந்து உலகவர்த்தக அமைப்பில் (W.T.O) கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா இந்த தீர்மானத்தை ஆதரிக்கமுன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும் உற்சாகமாக அமெரிக்காவை பாராட்ட முடியவில்லை.

சும்மா ஆடுமா அமெரிக்கா?
அமெரிக்கா மீது இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்ற மிகப் பெரும் நிர்ப்பந்தம் இருந்தது. முதல் காரணம், அமெரிக்க புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தல் பிரச்சாரத்தில் இதற்கான வாக்குறுதியை தந்திருந்தார். “உலகம் செய்ய வேண்டிய மனிதாபிமான முடிவு அது. இது நல்லதுஎன்பதால் மட்டுமல்ல. அதுவே நமது நாட்டின் நன்மைக்கும் முக்கியமானது” என்றார் அவர். இரண்டாவதாக, பல நோபல் அறிஞர்கள், உலகத் தலைவர்கள் அமெரிக்காவுக்கு இத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். இதை அமெரிக்கா ஏற்காமல்  போனால் பெரியகெட்ட பெயர் ஏற்படும். மூன்றாவதாக, அமெரிக்கமக்கள் மத்தியிலேயே “அறிவு சார் சொத்துரிமையை” இச் சூழலில் விலக்கிக் கொள்ளாமல் இருப்பது மனித நேயமற்ற செயல் என்ற கருத்து நிலவியது.

எசப் பாட்டு
அமெரிக்கா இம் முடிவை எடுத்திருந்தாலும் அமெரிக்காவை சார்ந்த பொருளாதார, புவி அரசியல் மேலாதிக்க சக்திகளின் நலன்களே அமெரிக்காவின் கொள்கை முடிவுகளை தீர்மானிக்கும் என்பதை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஒன்று, அமெரிக்காவின் தடுப்பூசி குழாம் மற்றும் வலதுசாரி சக்திகள் இப் பிரச்சனையில் தங்களின் தத்துவார்த்த நிலையை தளர்த்த தயாராக இல்லை. இரண்டு, வெளியுறவு நிபுணர்கள் ஜோ பைடனுக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்கிறார்கள். “அறிவு சார் சொத்துரிமையை” விலக்கிவைத்தால் ரஷ்ய, சீனா கம்பெனிகள் இம் முடிவைப் பயன்படுத்தி பெருமளவில் தடுப்பூசிகளை தயாரித்து விடுவார்கள் என்பதே.

இந்த காரணங்களால் அமெரிக்கா அறிவு சார் சொத்துரிமை விலக்கத்தை முதல் வழி முறைமையாக வைக்கவில்லை. இரண்டாம், மூன்றாம் தெரிவாகவே வைத்திருக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதியின் மருத்துவ ஆலோசகர் அந்தோணிபாசி “அறிவு சார் சொத்துரிமை” விலக்கத்தை ஆதரிக்கவில்லை என்கிறார். அதில் அறுதியிட்ட முடிவுக்கு வரவில்லை என்றும், அதற்குப் பதிலாக எவ்வளவு விரைவில் நிறைய தடுப்பூசிகளை தயாரிப்பதே கவனத்திற்குரியது என்கிறார் அவர்.

விடுமா அமெரிக்கா?
இந்த வகையில் அமெரிக்கா தடுப்பூசி கம்பெனிகளிடம், தொழில் நுட்பத்தை மட்டும் பிற நிறுவனங்களுக்கு பகிருமாறு சொல்கிறது. உதாரணம், ஜான்சன் & ஜான்சன் தொழில் நுட்பத்தை மெர்க் நிறுவனத்திற்கு முதல் முறையாக பகிர்ந்து கொண்டுள்ளது. இதற்கான நிர்ப்பந்தத்தை “தற்காப்பு உற்பத்தி சட்டம்” மூலம் தரப்பட்டதாக செய்தி.சுருக்கமாக, தடுப்பூசி மீதான நிறுவன உலகின் பிடியை விடக் கூடாது என்றே அமெரிக்கா நினைக்கிறது. ஆகவே அவ்வளவு விரைவில் “அறிவு சார்சொத்துரிமை” விலக்கத்தை அமெரிக்கா அமலாக்காது. அமெரிக்க தூதரின் ஊடக செய்தியிலேயே “சிக்கலானது” “நேரம் எடுக்கும்” போன்ற வழுக்கலான வார்த்தைகள் இருப்பது இந்த ஐயத்தை வலுப்படுத்துகிறது.ஆகவே அமெரிக்காவின் முடிவை வரவேற்கலாம். ஆனால் கொண்டாடலாமா? சற்றுப் பொறுத்துதான் பார்க்க வேண்டும். உண்மையில் அமெரிக்கா என்ன செய்யப் போகிறது என்பதை...?

கட்டுரையாளர் : ஆர்.இராமகுமார், பேராசிரியர், டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்சஸ்

தமிழில்: க.சுவாமிநாதன்