articles

img

புதிய கோவிட் மருந்து 2 டி ஜி...... நன்மையும் சில கேள்விகளும்.....

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல், அலுவலகம்  கோவிட் 19 நோயாளிகளுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) அமைப்பு தயாரித்துள்ள ஒரு மருந்திற்கு  அவசரப் பயன்பாட்டு அனுமதியை அளித்துள்ளது.டிஆர்டிஓவின் கீ்ழ் இயங்கும் நியூக்ளியர் மெடிசின் மற்றும் இணைஅறிவியல் நிறுவனத்தின் சோதனைச்சாலையில்   ஹைதராபாத் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தப் புதிய மருந்தின் பெயர் 2 டிஜி (2-deoxy-D-glucose). இது கோவிட்19 நோயாளிகள் வேகமாகக் குணமடைவதற்கும் மருத்துவ ஆக்சிஜன் வேண்டுதலை மிகவும் குறைக்கவும் உதவும் என நம்பப்படுகிறது.

இதன் தயாரிப்பு முறை மிகவும் தனித்தன்மை வாய்ந்ததெனக் குறிப்பிடுகின்றனர். இந்த  மருந்து கோவிட் பாதித்த செல்களில் செயல்படுகிறது. இந்த மருந்து வைரஸ் வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றலை தடுத்து நிறுத்துகிறது. இதனால் வைரஸ் பரவல் தடுக்கப்படுகிறது. இதன்மூலம் வைரஸ் பாதிப்பு குறைந்து வைரஸ் எண்ணிக்கை படிப்படியாகக் குறைகிறது. இதன் மூலம் செல்கள் புத்துயிர் பெறுகின்றன என்பதே இதன் செயல்பாடாகும்.மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல், 1, 2 கட்ட சோதனை அடிப்படையில் வழங்கிய உத்தரவால், ஒரு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. ஆனால் இந்த சோதனைகளின்  தகவல்களை வெளியில் பதிவிடவேண்டும். அப்போதுதான் நம்பிக்கை மக்களிடம் கூடும்.  மேலும்  மூன்றாவது, சோதனைக்கட்டம் முடிந்து அதன்கண்டுபிடிப்பு வந்தால் மட்டுமே நமக்கு இதன் நன்மை, தீமை தெளிவாகத் தெரியும். மேலும் பெரிய அளவில் சோதனை செய்யப்பட்டால்  இது பக்க விளைவுகளை உருவாக்குமா என்பதும் தெரியவரும். எனவே மூன்றாம் கட்ட சோதனையில் நபர்களை அதிகரித்து சோதனை செய்யும் பொழுது இது எல்லா செல்களிலும் எவ்வாறு செயல்படுகிறது எனக் கண்டறியலாம்.

இந்த மருந்தின் நன்மை  தீமைகளை
ஆராயும் போது நன்மை தீமையைக் காட்டிலும் அதிகமாக இருப்பின் அது பலன் தரக்கூடியதாகப் பயன்படுத்தலாம். தற்போது மத்திம மற்றும் தீவிர கொரோனா நோயாளிகளிடம் சோதனை செய்யப்
பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகள் குணமடையும் வாய்ப்புகள் அதிகமாகத் தெரிவதால் இதை ஒரு சிகிச்சை முறையாகக் கொள்ளலாம் என்கின்றனர். ஆனால் மூன்றாவது பெரும் அளவு சோதனையும் எந்தவித தீமைகளையோ பக்க விளைவுகளையோ ஏற்படுத்தவில்லையென்றால் இந்த மருந்து பெருமளவில் நோயாளிகளைக் காப்பாற்றும்.தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வைரல் எதிர்ப்பு - நுண்ணுயிரிகள் எதிர்ப்பு மருந்துகள் போல் தீமைகள் - பக்க விளைவுகளைக்காட்டிலும் நன்மை அதிகமாக இருந்தால் இந்த மருந்தும்  சாதாரணப் பயன்பாட்டுக்கு வந்துவிடும். 2-டிஜி மருந்தை  நாம் வைரல் எதிர்ப்பு மருந்து வகையில் சேர்த்தாலும் இது வைரசைக் கொல்வதில்லை. ஆனால் இது பாதிப்படைந்த செல்களில் குவிந்து வைரஸ் வளர்ச்சிக்கான பொருள்களை எடுக்கவிடாமல் தடைசெய்கிறது. எனவே இதை ஆன்டி வைரல் எனக் குறிப்பிட முடியாது.

தற்போது இது பவுடர் வகையாக பாக்கெட்டில் தயாரிக்கப்படுகிறது.  தண்ணீரில்கொட்டி இதைக் கரைத்து வாய்வழியாகக் குடிக்கலாம். இது அவசரகாலப் பயன் பாட்டிற்கு ஒப்புதல் பெற்றுள்ளதால் மருத்துவக்கண்காணிப்பில் மட்டுமே இதைப் பயன்படுத்தலாம். இந்த ஆய்வுகளின்படி அதிக அளவில் நோயாளிகளிடம் பயன்படுத்தியதில் கோவிட் 19 சோதனையில் பின்னர் நெகட்டிவ் ஆக உள்ளனர் எனத் தெரிவிக்கின்றனர்.

2டி ஜி எவ்வாறு வேலை செய்கிறது?
இதுபோன்ற ஒரு மருந்தின் செயல்பாட்டினை ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டு உள்ளனர். அதன்படி சார்ஸ் கோவிட் 2 வைரஸ் தொற்றுப் பரவலுக்கும் பெருக்கத்துக்கும் கிளைகோலைசிஸ் கிளைக்கோசைலேசன் என்ற செயல்பாட்டைப் பயன்படுத்துகின்றன. கிளைகோலைசிஸ் என்பது செல்லின் குளுகோசை எடுத்து உடைத்து ஏடிபி என்ற ஆற்றல் பெறுவதற்காகச் செய்கிறது. இதன்மூலம் இந்த ஆற்றலை  தன் மரபணுப் பொருள் பெருக்கத்துக்குப் பயன்படுத்துகிறது. கிளைகோசைலேசன் மூலம் வைரசின் மரபணுப் பொருள் பெருக்கத்திற்கேற்ப அதனை வைரசாக மாற்றத் தேவையான வெளி உறையைத் தயாரிக்கத் தேவையான புரோட்டினுடன் இணைந்து கிளைக்கோ புரோட்டின் கொண்ட உறையைத் தயாரித்து வைரஸ் அணுக்களாக மாறுகின்றன. இந்த இரண்டு செயல்பாட்டையும் 2 டிஜி என்ற இந்த சிதைவுக் குளுகோஸ் மூலக்கூறு தடைசெய்கிறது. 

2டிஜி மூலக்கூறுகள் உடலுக்கு  வெளியே செல்களில் செயல்பட்டாலும் அதே போன்று மனித உடலில் செயல்படுவது சாத்தியமற்றது எனக் கருதப்படுகிறது. எனவே WP1122 என்ற மருந்து அமெரிக்காவில் கண்டறியப்பட்டு்ள்ளது. இது டை அசிடைல் எஸ்டர் கொண்ட 2 டிஜி மூலக்கூறுகள் உள்ளதென்றும் அது வெறும் 2 டிஜி மூலக்கூறை விட நன்றாகச்செயல்படும் எனக் கருதப்படுகிறது. WP1122 என்ற புரோ ட்ரக் ஏற்கனவே மூளைப் புற்றுக்கட்டி வளர்ச்சியைத் தடை செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தை கோவிட்19 நோயாளிகளுக்கு கொடுக்கலாமா என விலங்குமுறை  சோதனை, பின்னர் மனிதசோதனை செய்து இதன் திறனை அறிந்த பின்னரே இதை கோவிட் 19 நோயாளிகளுக்கு ஒப்புதல் பெற்று பயன்படுத்த முடியும்.
தற்போது இந்தியாவில் உருவாக்கிய  2டி ஜி மருந்தும்  WP1122போன்ற அடிப்படையில் உருவானது;  இதன் நன்மைகள் பாராட்டக் கூடியதாக இருந்தாலும், மூன்றாம்கட்ட விரிவான சோதனை தேவை; சோதனைகளின் தரவுகளை பொது வெளியில் வெளியிடுவது; பிற செல்களைத் தாக்குதல் மற்றும் பக்க விளைவுகள் குறித்தும் அறிக்கை தேவை.

கட்டுரையாளர் : பேரா. பொ. இராஜமாணிக்கம், பொதுச் செயலர், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு