articles

img

தனியார் துறையில் இடஒதுக்கீடு அவசியம் வாலிபர் சங்க மாநாடு தீர்மானம்

தனியார் துறையில் இடஒதுக்கீடு அவசியம்  வாலிபர் சங்க மாநாடு தீர்மானம்

ஓசூர், அக். 14-  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18-ஆவது மாநில மாநாடு ஓசூரில் அக்டோபர் 12 முதல் 14 வரை நடைபெற்றது. இம்மாநாட்டில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  பெருகிவரும் தனியார் நிறுவனங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி அலைகின்றனர். முற்பட்ட வகுப்பினர் மட்டுமே தனியார் துறைகளில் கணிசமான வேலை வாய்ப்பைப் பெறுவதாக தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. சமூகத்தில் அனைத்து நிலைகளிலும் அனைவருக்கும் உரிய வாய்ப்பு அளிப்பதுதான் சமூக நீதி என வலியுறுத்தப்பட்டது.  அரியானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் வசிப்பிட அடிப்படையிலான தனியார் இடஒதுக்கீடு அமலில் உள்ளது என குறிப்பிடப்பட்டது. இடஒதுக்கீடு முறையால் இந்திய ரயில்வே துறையின் திறன் அதிகரித்ததை ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துவதாகவும், எனவே தனியார் துறையின் வளர்ச்சியும் நாட்டு மக்களின் வளர்ச்சியாக அமைய இடஒதுக்கீடு அவசியம் எனவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.  1953-இல் அமைக்கப்பட்ட காகா காலேல்கர் ஆணையம் தனியார் துறையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பங்கை கணக்கில் கொண்டது. ஆனால் அது இன்றுவரை உரிய முறையில் ஆய்வு செய்யப்படவில்லை; அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 15(4) அனைத்துத் துறைகளிலும் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது எனவும் தீர்மானம் குறிப்பிட்டுள்ளது.  சாதிப் பாகுபாடுகள் நிறைந்த இந்தியாவில் தனியார் துறை இடஒதுக்கீடு சிறந்த நிகர் நிலை நடவடிக்கையாக அமையும் என்றும், எனவே ஒன்றிய அரசு நாடு முழுவதும் தனியார் துறை இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் மாநில துணைச் செயலாளர் செல்வராஜ் தீர்மானத்தை முன்மொழிய, முகேஷ் வழிமொழிந்தார்.  சகோதர அமைப்புகளின் வாழ்த்து  அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் கே.பாரதி வாழ்த்துரையில், கியூபாவின் சாதனைகளை சுட்டிக்காட்டியதுடன், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரவும், வேலை உரிமைச் சட்டம் இயற்றவும் இரு அமைப்புகளும் இணைந்து போராட வேண்டும் என வலியுறுத்தினார்.  இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது, இந்தியாவில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், இளைஞர்களுக்கு சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்பு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.  மாநாட்டில் நவநீதன் எழுதிய “இந்திய பாசிசம் சில புரிதல்கள்” மற்றும் இ.பா.சிந்தன் எழுதிய “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.