அகவிலைப்படியை அறிவிக்கக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, அக். 14- அகவிலைப்படியை அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு, திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை அமைச்சுபணியாளர் சங்க தலைவர் கவியரசன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அமைச்சுப் பணியாளர்கள் நிலுவையில் உள்ள 3 சதவீத அகவிலைப்படியை தீபாவளிக்கு முன்னதாக உடனடியாக அறிவிக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக் கிளைகள் சார்பில், தாலுகா அலுவலகங்கள் முன்பும், மாவட்டக் கிளை சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.