கம்யூனிஸ்ட் ஆக உயர்ந்து நின்று இயங்கிய செயல்பாட்டாளர் எம்.பி. சீனிவாசன்
தமுஎகச மத்திய சென்னை மாநாட்டை ஒட்டி நடந்த மக்களிசை மேதை எம்.பி. சீனிவாசன் நூற்றாண்டு கொண்டாட்டச் சிறப்பு நிகழ்வில், பல்வேறு ஆளுமைகள் அவரது பல்பரிமாண பங்களிப்புகளை எடுத்துரைத்தனர்.
கம்யூனிஸ்ட் ஆக உயர்ந்து நின்ற செயல்பாட்டாளர்
“இசை மேதை மட்டுமல்ல, எம்.பி. சீனிவாசன் தான் செயல்பட்ட அரங்கில் திரைக் கலைஞர்கள் நலனை முன்னிறுத்தி அவர்களை அணிதிரட்டி 24 தொழிற்சங்கங்கள் அமைத்து வழி நடத்தியது மகத்தான விஷயம். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஏதேனும் ஒரு வெகுஜன அரங்கில் செயல்பட வேண்டும். எம்பிஎஸ் திரையரங்கில் இயங்கினார். அங்குள்ள உழைப்பாளிகளுக்காகத் தன்னலம் அற்ற முறையில் பணியாற்றினார் என்கிற வகை யில் ஓர் அருமையான கம்யூனிஸ்ட் ஆக உயர்ந்து நின்றார்” என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா. சேர்ந்திசை வடிவத்தை தமுஎகச சார்பில் பரவலாகக் கொண்டு செல்வோம் என்றும், தோழர் இக்பால் அகமது அருமையாக எழுதி பரிசல் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகத்தை மாநிலம் எங்கும் கொண்டு சேர்ப்போம் என்றும் தெரிவித் தார்.
பண்பாட்டுத் தளத்தின் போராளி
விடுதலைப் போராட்ட காலத்தின் விளைச்ச லில் ஒருவராக போராட்டக் கனலை உட்கொண்டு பண்பாட்டுத் தளத்தைத் தேர்வு செய்து புரட்சிகர இலட்சிய பயணத்தில் உயரங்களைத் தொட்டவர் என்று எம்.பி.சீனிவாசனை அறிமுகப்படுத்தினார் நாடகவியலாளர் பிரளயன். 1946இல் தல்வார் கப்பல் மாலுமிகளுக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் கிளர்ந்து எழுந்து தடியடியை எதிர்கொண்ட மாண வர் இயக்கத்தில் தோழர் பி .ராமச்சந்திரனின் சக மாணவராக எம்.பி. சீனிவாசனும் இருந்திருக் கிறார் என்று சுட்டிக்காட்டினார். கூட்டு உழைப்பு என்பது இசைக்கும் தான் என்ற தன்மையில் மேட்டிமைத் தனத்திற்கு மாற்றாக இசையை எல்லோருக்குமானதாக சேர்ந்திசை யை முன்னெடுத்தார் எம்.பி. சீனிவாசன் என்றார்.
இல்லங்களில் உலை பொங்கும்போது கண்ணில் தெரிவார்
“பசித்த வயிறை அனுபவத்தால் உணர்ந்து அந்தத் தொழிலாளியின் உரிமைக்காகக் குரலெடுத்தவர் எம்பிஎஸ்” என்று குறிப்பிட்ட இசை அமைப்பாளர் தீனா, ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தின் இசைக் கலைஞர்களுக்கான ஊதி யத்தைப் பெற்றுத் தந்த சம்பவத்தை எடுத்துரைத் தார். அதே ஆண்டிலேயே இசைக் கலைஞர் களுக்கு சங்கம் அமைத்து, அடுத்தடுத்து வெவ்வேறு துறைகளுக்கான 24 சங்கங்களை யும் அமைத்து, அவற்றை இணைத்து சம்மேள னமும் உருவாக்கியவர் எம்.பி.சீனிவாசன் என்றும், “வீட்டில் அடுப்பு எரிந்து உணவு தயாராகும்போது அதில் எம்பிஎஸ் எங்கள் கண்களுக்குத் தெரிவார்” என்று ஆவேசமாக உரையாற்றினார்.
கால காலத்திற்குமான இசை
அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு 1962இல் எம்.பி. சீனிவாசன் இசையமைத்த ‘ஒன்னாம் தரம் பலூன் தரான்’ பாடல் இன்றும் குழந்தைகள் பெரியவர்கள் எல்லோரும் பாடுகிறார்கள் என்று எழுத்தாளர் ஷாஜி குறிப்பிட்டார். எம்பிஎஸ் இசம் என்று இசை ரசிகர்கள் வட்டங்களில் பேசிக் கொள்வோம், அத்தனை ஞானத்தோடு அவர் அமைத்த இசை ஈடிணை அற்றது என்றார். கே.ஜே.யேசுதாஸ் வாழ்க்கையில் முக்கியமானவர் எம்பிஎஸ். எஸ். ஜானகிக்கு முதல் விருது கிடைத்த பாடலுக்கு இசை அவர் தான். கமல்ஹாசனை கதாநாயகனாக நடிக்க வைத்த முதல் படமான கன்னியாகுமரிக்கு இசை அமைத்தவர் எம்பிஎஸ் தான். ஏ .ஆர். ரஹ்மான் தந்தையான சேகர் மாஸ்டரை இசைத் துறையில் வளர்த்தெடுத்தவர் எம்பிஎஸ் என்று பல உதாரணங்களை விரித்தார் ஷாஜி.
சமூக அரசியல் செயல்பாடு
பேராசிரியர் ப்ரபாகர், ஜெயபேரிகை கொட்டடா என்ற மகாகவியின் பாடல் சேர்ந்திசை வடிவத்தால் தன்னை அதிர வைத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இசைக்கு ஒரு தெய்வீகத் தன்மை இருக்கிறது என்று நிலவும் கற்பிதங்களை எல்லாம் தகர்த்தது அவரது முன்னெடுப்பு. தாளமும் சுருதியும் இணைந்தால் போதும், யாரும் பாடலாம் என்றார் எம்பிஎஸ். குரலை வைத்து, வேறு தகுதிகளை வைத்து ஒதுக்கப்பட்ட யாரும் பாட முடியும் என்பது தான் மக்கள் இசை என்றார்.
அரியவை செய்த பெருந்தகையாளர்
“செயற்கரிய செய்வார் பெரியர் என்று குறள் சொல்லும். எம்பிஎஸ் அப்படியான சாதனையாளர்” என்றார் கவிஞர் சுகுமாரன். திரை இசையில் தொடர்ச்சியாகக் கையாளப்பட்டு வந்த வடிவங்களை எல்லாம் உடைத்தது, ‘பாதை தெரியுது பார்’ படத்திற்கு அவர் அமைத்த இசை என்றும், வெறும் பாடப் புத்தகங்களில் இருந்த பாரதியை நம்மோடு நடமாட வைத்தவர் எம்பிஎஸ் என்றும் சுட்டிக்காட்டினார். திரைத் துறையில் பெரும் பணம் பண்ணி இருக்கலாம், பெரும் புகழ் ஈட்டி இருக்கலாம், அவற்றைத் துறந்து தான் தனது அரிய பங்களிப்பை வழங்கினார் எம்.பி. சீனிவாசன் என்றார்.
நூல் அறிமுகமும் நிறைவுரையும்
பேராசிரியர் பாலசுப்பிரமணியன், இக்பால் அகமது மிகுந்த ஆய்வுகள் செய்து உழைப்பைச் செலுத்தி அருமையான நூலாக்கம் செய்துள்ளார் என்று பாராட்டினார். நூலாசிரியர் இக்பால் அகமது, சிலியின் கவிஞர் பாப்லோ நெருடா போன்ற புரட்சியாளர் தான் எம்பிஎஸ் என்பதை விவரித்தார். சென்னை அண்ணா சாலை அன்பகம் அரங்கினுள்ளே மக்கள் இசை மேதை எம்.பி. சீனிவாசன் எங்கோ மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருக்கிறாரோ என்ற உணர்ச்சிகளின் நெகிழ்ச்சி வெளிப்பாடாகவே விரிந்தது அவரது நூற்றாண்டு கொண்டாட்டம். வங்கி ஊழியர் சேர்ந்திசைக் குழுவினரின் சேர்ந்திசையோடு தொடங்கி, சென்னை இளைஞர் சேர்ந்திசைக் குழுவினரின் சேர்ந்திசையோடு நிறைவுற்ற நிகழ்ச்சி, சமூக மாற்றத்திற்கான பயணத்தில் இன்னும் கோடி சூரியன்கள் உதிக்கும் எனும் நம்பிக்கையை விதைத்தது.
தொகுப்பு: எஸ்.வி.வேணுகோபாலன்