articles

img

ஆழ்ந்த உறக்கத்தில் நீங்கள்... ஆறாத் துயரில் நாங்கள்!

ஆழ்ந்த உறக்கத்தில் நீங்கள்... ஆறாத் துயரில் நாங்கள்!

2026 மார்ச் 17 இரவு 8.30 மணியளவில் தாங்கள் மறைந்துவிட்ட செய்தி கேட்டபோது, நெஞ்சம் பதற திருச்சியை நோக்கிப் புறப்பட்டோம். 18-ஆம் தேதி விடியற்காலை 5 மணிக்குத் திருச்சி வரும் வரை, “நீங்கள் இறந்திருக்கக் கூடாது, இது வெறும் உறக்கமாக இருக்க வேண்டும், யாராவது ஒருவர் நிம்மி இறந்துவிடவில்லை என்று சொல்லமாட்டார்களா?” என்ற ஏக்கம் கலந்த துயரோடுதான் வந்து சேர்ந்தோம்

. நொறுங்கிப்போன  நினைவுகளின் இல்லம் திருச்சியில் உங்கள் அழகான வீடு... நீங்கள் நடந்து, படித்து, உணவருந்தி, பலரைச் சந்தித்து உரையாடி, நாங்கள் வந்தாலும் இன்முகத்தோடு வரவேற்று உணவருந்தி, ஓய்வெடுத்து, பல அரசியல் கதைகள் பேசி - எனப் பல நினைவுகள் கொண்ட அந்த வீட்டுக்குள் நுழைந்தோம். அங்கே சவப்பெட்டியின் உள்ளே அடங்கிய உயிரற்ற உங்கள் உடலைப் பார்த்த அந்தக் கணம் எங்கள் இதயங்கள் நொறுங்கிப் போயின. அன்று காலை எட்டு மணிக்குத் தொடங்கிய அழுகையை எங்களால் நிறுத்த முடியவில்லை. வலைதளங்களில் ஏராளமான தோழர்கள் உங்கள் நினைவுகளைப் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

அந்தச் செய்திகளைப் பார்க்கிறபோதெல்லாம் கண்ணீர் வடிந்துகொண்டே இருக்கிறது. “அழாதீர்கள்” என்று சொல்வதற்கு இன்று யார் இருக்கிறார்கள்? ஆறுதல் சொல்ல நினைப்பவர்களும் சேர்ந்துதானே அழுதுகொண்டிருக்கிறார்கள்! தமிழகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்து, 18-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து ஜனநாயக மாதர் சங்க சகோதரிகளும் தோழர்களும் விடிய விடியப் பயணம் செய்து உங்கள் முகத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் உங்கள் உடலைப் பார்த்துக் கதறி அழுத அந்த நிகழ்வைக் கண்டபோது நெஞ்சமெல்லாம் பதறியது.

மாதர் சங்கத்தின் சார்பாக மலர் வளையமும் வெண்கொடியும் ஏந்தி ஊர்வலமாக வந்தபோது, விண்ணைப் பிளக்கும் குரலில் தங்களுக்கு வீரவணக்கம் செலுத்திய நம் அன்புச் சகோதரிகளின் அழுகுரல் இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.  ஈடு செய்ய  முடியாத இழப்பு பிறப்பொன்று இருந்தால் இறப்பொன்று உண்டு என்பது இயற்கையின் விதிதான். எத்தனையோ தோழர்களின் மறைவை நாம் இக்காலத்தில் சந்தித்திருக்கிறோம். ஆனால், அந்த வலிகளை எல்லாம் மிஞ்சிய ஒரு வலியை உங்களின் பிரிவு எங்களுக்குக் கொடுத்துள்ளது.

இந்தத் துயரைப் பொறுத்துக்கொள்ள எங்களுக்குப் பெரும் தைரியம் தேவைப்படுகிறது. எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதை அழகாக, நேர்த்தியாக, சிறப்பாக, அனைவரும் பாராட்டும்படிச் செய்வதும், எல்லோரையும் விட முற்போக்கான கருத்துகளையும் சட்டரீதியான ஆலோசனைகளையும் பதிவிடுவதும், எப்படிப்பட்ட பணியையும் பக்குவத்துடன் கையாளும் உங்களைப் போன்ற தோழர்களை இனி நாங்கள் காண்பது அரிதினும் அரிது. குரலற்றவர்களின் முகவரி முகமற்றவர்களின் முகவரியாகவும், குரலற்றவர்களின் குரலாகவும் இருக்க வேண்டும் என்ற உங்களின் உன்னத நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்.

ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக் குழு அலுவலகத்திற்கும், சட்ட உதவி மையத்திற்கும் தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பெண்களின் பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் வழங்கி, அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, வழக்குகளில் வெற்றி பெறச் செய்யும் மிகப்பெரிய தூணாக நீங்கள் இருந்தீர்கள். உங்களின் இழப்பை எப்படி ஈடுகட்டப் போகிறோம்? நீங்கள் இன்று எங்களோடு இந்த மண்ணில் இல்லை. ஆனால், என்றும் எங்கள் செயல்களிலும் நினைவுகளிலும் நிறைந்திருப்பீர்கள். தோழர் நிர்மலா ராணி!