articles

img

பெண்கள் குழந்தை பெற்றுத்தரும் இயந்திரமல்ல! - அ. அபிராமி

பெண்கள் குழந்தை பெற்றுத்தரும் இயந்திரமல்ல! 

ஹரியானா மாநிலத்தில் 37 வயது பெண் ஒருவர், தொடர்ந்து பத்து பெண் குழந்தைகளைப் பெற்ற பிறகு, பதினோறாவதாக ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த செய்தி சமீபத்தில் வெளியானது. இச்செய்தியைப் பிரபலத் தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் ‘ரியல் கடைக்குட்டி சிங்கம்’ என்று நியூஸ் கார்டு வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது. இந்த ஒரு பதிவு, நம் சமூகம் இன்னும் எத்தகைய ஆணாதிக்க இருளில் மூழ்கிக்கிடக்கிறது என்பதையும், முதலாளித்துவ ஊடகங்கள் எவ்வளவு பொறுப்பற்றுச் செயல்படுகின்றன என்பதையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.  

ஊடகங்களின் பாலினப் பாரபட்சம்  திருமணமாகி 19 ஆண்டுகளில் 11 குழந்தைகளைப் பெற அந்தப் பெண் நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்பதை ஒரு மனித உரிமைப் பிரச்சனையாகவோ, வன்முறையாகவோ பார்க்க ஊடகங் களுக்குத் தெரியவில்லை. பதினோறாவது குழந்தையை ‘சிங்கக்குட்டி’ எனப் புகழும் ஊடகம், அதற்கு முன் பிறந்த பத்து பெண் குழந்தை களை என்னவாகக் கருதுகிறது? ஒரு பெண் கருவுறுதலில் தொடங்கிப் பிரசவம் வரை சந்திக்கும் உடல் மற்றும் மன ரீதியான வலிகளைச் சற்றும் உணராமல், பாலின பாரபட்சத்தோடு செய்திகளைச் சித்தரிப்பது கடும் கண்டனத்திற் குரியது. ஆண் வாரிசு வேண்டும் என்ற ஆணாதிக்க வெறி, ஒரு பெண்ணை இங்கே வெறும்  ‘பிள்ளை பெறும் இயந்திரமாகவே’ மாற்றியிருப்பதை இந்த ஊடகக் கலாச்சாரம் கொண்டாடி மகிழ்கிறது.  ஹரியானாவின் கவலைக்குரிய நிலை  ஹரியானாவில் பெண்கருக் கொலைகள் மற்றும் பாலினவிகிதச் சரிவு என்பது நீண்டகாலச் சமூகக் குற்றமாக தொடர்கிறது.

2024ஆம் ஆண்டுபுள்ளிவிவரப்படி, அங்கு ஆயிரம் ஆண் குழந்தைகளுக்குவெறும் 910 பெண் குழந்தைகளே பிறந்துள்ளனர். “பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ” போன்ற விளம்பரத் திட்டங்கள் பாஜக அரசால் முன்னெடுக்கப்பட்டாலும், ‘ஆண் குழந்தை உயர்வு - பெண் குழந்தை நிராகரிப்பு’ என்ற பிற்போக்குச் சிந்தனை வேரூன்றிக் கிடக்கிறது. நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் கூட, சட்டவிரோதமாக ஆண் கருவைத் தேர்வு செய்யவே அங்கு ரகசியமாகப் பயன்படுத்தப்படுவது பெரும் வேதனையளிக்கிறது. அறி வியல் வளர்ச்சி என்பது பெண்களின் வாழ்வை மேம்படுத்தப் பயன்படாமல், அவர்களை ஒடுக்குவதற்குப் பயன்படுவது நாகரிகச் சமூகத்தின் தோல்வியாகும்.  உடல் ரீதியான பாதிப்புகள்  தொடர் பிரசவங்கள் ஒரு   பெண்ணின் உடலில் சொல்லொணாத் துயரங்களையும் அழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு கருவுறுதலின் போதும் கருப்பை, வயிற்றுத் தசைகள், தோல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஹார்மோன் மாற்றங்கள், தசை பலவீனம், தீராத முதுகுவலி மற்றும் கடுமையான மன அழுத்தம் என அந்தப் பெண்ணின் உடல் ஆரோக்கியம் ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்ச மாகச் சிதைக்கப்படுகிறது. நவீன மருத்துவ வசதிகள் பெருகியுள்ள இக்காலத்திலும், அறியாமையாலும் சமூக நிர்ப்பந்தத்தாலும் ஒரு பெண்ணின் உடலை இத்தனை சித்ரவதைகளுக்கு உள்ளாக்குவது ஒரு மௌனமான கொலைக்குச் சமமானது.

 விளிம்புநிலைக்குத் தள்ளப்படும்  பெண் குழந்தைகள்  இங்கே நாம் சிந்திக்க வேண்டிய மற்றொரு முக்கியப் பக்கம், அந்த வீட்டில் உள்ள பத்து பெண் குழந்தைகளின் நிலை. ஒரு தம்பி பிறந்ததைக் குடும்பமே கொண்டாடும் வேளையில், தங்களை ‘வேண்டாத வாரிசுகளாக’ சமூகம் சித்தரிப்பதை அக்குழந்தைகள் எப்படி எதிர்கொள்வார்கள்? தங்களின் பிறப்பே ஏதோ ஒரு தோல்வி என்பது போன்ற உளவியல் பாதிப்பு அக்குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதியும். அவர்களின் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை உரிமைகள் ஒரு ஆண் வாரிசுக்கான தேடலில் பலியிடப்படுவதை நாம் உணரவேண்டும்.  

மாற வேண்டிய பார்வை  பெண்களை வெறும் வாரிசு உற்பத்திப் பொருளாகப் பார்க்கும் ஆணாதிக்கச் சமூகம் ஒருபுறம் என்றால், அதற்குத் தூபம் போடும் வகையில் தனது வணிக லாபத்திற்காகச் செய்தி களைச் சமைக்கும் ஊடகங்கள் மறுபுறம் இருக்கின்றன. இனி வரும் காலங்களில் இதுபோன்ற செய்திகள் வரும்போது, ஊட கங்கள் அவற்றை வீரதீரச் செயலாகப் போற்றாமல், அந்தப் பெண்ணின் உடல்நலம், அவரது அடிப்படை உரிமைகள் மற்றும் பாலின சமத்துவம் சார்ந்த பார்வையில் அணுக வேண்டும். பெண்கள் இந்தச் சமூகத்தின் சரிபாதி மனிதர்கள்; அவர்கள் வாரிசு உருவாக்கித் தரும் இயந்திரங்கள் அல்ல என்பதை உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது.