மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிப்பார்கள்” என ஏகடியம் பேசியவர்கள் வாஷிங்டன் காய்ச்சலுக்கு வாரணாசியில் மாத்திரை போடுகிறார்கள்
கரகாட்டக்காரன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். “அடடா, இவரு நாதஸ்வரம் வாசிக்கறதையும், அவங்க பரத நாட்டியம் ஆடறதையும் பார்த்தா தில்லானா மோகனாம்பாள் சினிமாவுல வர்ற சிவாஜி யையும் பத்மினியையும் பார்க்கற மாதிரியே இருக்கு..” எனும் காமெடியை போல இவர் “நமஸ்தே டிரம்ப்” என கட்டித்தழுவி அவரை வரவேற்க, “ஹவ்டி மோடி” என அவரும் ஆரவாரம் செய்ய, ஆஹா இவர்க ளை போல சிறந்த நண்பர்கள் உண்டா என புளகாங்கி தம் அடைந்தனர் பலர். பக்கம் பக்கமாக கவர் ஸ்டோரிக ளை எழுதி குவித்தன ஊடகங்கள். ஆனால்.. அந்தோ பரிதாபம், ஆரத்தழுவிய ஆருயிர் நண்பனே முதுகில் குத்திய கதையாக இந்தியாவிற்கு எதிராக 50% அபராத வரி விதித்து நமது நாட்டிற்கு எதிரான பெரும் பொருளாதார யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இதர அரசியல் பிரச்சனைகளோடு இந்தியா – ரஷ்யா இடையிலான வர்த்தக உறவும் இத்தகைய அபராத வரிவிதிப்பிற்கான காரணங்களில் ஒன்று என சொல்லப்படுகிறது. ஆனால், உலக அரசியலை ‘கரைத்துக் குடித்து’ அன்றாடம் கருத்து வெளியிடும் மோடி அமெரிக்காவின் இத்தகைய அடாவடித்தன மான நடவடிக்கை குறித்தோ, டிரம்ப் பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காக்கிறார். அமெ ரிக்காவின் இத்தகைய அபராத வரி விதிப்பால் நமது பொருளாதாரமும், வர்த்தகமும் பெரும் நெருக்கடி க்கு உள்ளாகியிருக்கிறது. உடனடி விளைவாக கீழ்க் கண்ட தொழில்கள் பிரதானமாக பாதிப்படைந்துள்ளன. சீரழியும் தொழில்கள் - சிதையும் வாழ்க்கை Hபின்னலாடை மற்றும் ஜவுளி ஏற்றுமதியின் மூலம் ஆண்டுக்கு சுமார் 90,000 கோடி ரூபாய் அளவில் நடைபெறும் வர்த்தகம் முடங்கிப் போயிருக்கி றது. தமிழகத்தின் திருப்பூர் நகரின் தொழில் முனை வோரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். தொழில் முடக்கமும் அதனால் ஏற்படும் வேலையிழப்பு களும் பெருமளவிலானதாக இருக்கும் என சொல்லப் படுகிறது. நமது ஏற்றுமதி தடைபட்டால், வியட்நாம், பங்களாதேஷ் போன்ற நாடுகள் அமெரிக்க சந்தை களை கைப்பற்றும் நிலை உருவாகும். Hகுஜராத் மாநிலம் சூரத் நகரின் வைரத் தொழில் முடக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவிற்கான வைரம் ஏற்றுமதியின் மூலம் ஆண்டுக்கு 85,000 கோடி அளவில் நடைபெறும் வர்த்தகம் பாதிக்கப் பட்டிருப்பதால் முதலீட்டாளர்களும் தொழிலாளர்க ளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இத்தாலி, துருக்கி, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து அமெ ரிக்காவிற்கு வைரம் ஏற்றுமதி செய்யப்படலாம். Hஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு 58,000 கோடி வர்த்த கம் நடைபெறுகிறது. வரி விதிப்பால் இத்தகைய தொழிலுக்கு ஆபத்து உருவாகும். தமிழகத்தின் ஓசூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அகமதாபாத், ஜாம் ஷெட்பூர் உள்ளிட்ட பல்வேறு தொழில் நகரங்கள் முற்றாக முடங்கக்கூடும். மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க ஆட்டோமொபைல் சந்தைகளை கைப்பற்றக்கூடும். Hஇவை தவிர இறால், மீன் உள்ளிட்ட இதர ஏற்றுமதி களும், ரசாயனம் மற்றும் கரிம ஏற்றுமதியும் பெருமள வில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய பொருட்களை இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்து கொள்ளத் துவங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் அடாவடித்தனமான நட வடிக்கையால் இந்திய பொருளாதாரமும், வர்த்தக மும் பாதிக்கப்பட்டிருக்கிறது. 50% அபராத வரி எனும் நிலை நீடித்தால் பல்லாயிரக்கணக்கான தொழிற் சாலைகள் மூடப்படுவதோடு, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவா கும். டிரம்ப்பின் அறிவிப்பால் இந்திய ஏற்றுமதியில் சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட லாம் என மதிப்பிடப்படுகிறது.
நண்பர்கள் காட்டில் பணமழை
ரஷ்யாவுடனான இந்தியாவின் நெருக்கமும் டிரம்ப்பின் எரிச்சலுக்கு காரணம். ஆனால் ரஷ்யா – இந்தியா இடையிலான வர்த்த கம் குறித்தும் கச்சா எண்ணெய் இறக்குமதி பற்றியும், அதனால் பலனடைபவர்கள் யார் என்பதையும் இப்பிரச்சனையோடு இணைத்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் இது வெறும் வர்த்தகம் தொடர் பானது மட்டுமல்ல, இதற்குள் ஒரு அரசியலும் மறைந்திருக்கிறது. Hரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் மொத்த கச்சா எண்ணெய்யில் அம்பானியின் ரிலை யன்ஸ் மற்றும் நயாரா ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே நாளொன்றுக்கு 8,81,000 பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்குகின்றன. இதர நாடுகளை ஒப்பிடும் போது ரஷ்யா குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை நமக்கு தருவதால் இந்த இரு நிறு வனங்களுக்கு மட்டும் சுமார் 16 பில்லியன் டாலர் அளவுக்கு லாபம் கிடைத்திருக்கிறது. அதாவது ரூ.1,40,000 கோடி லாபம். Hரஷ்யாவில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய்யில் 80 % அளவுக்கு இந்த இரண்டு நிறு வனங்கள் மட்டுமே வாங்குகின்றன. கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், ஜெட் ஃபியூல் என பலவகைகளில் ரிலையன்ஸ் நிறு வனம் பல நாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்கி றது. இறக்குமதி மூலம் கிடைக்கும் லாபம் போலவே ஜெட் ஃபியூல் (விமான எரிபொருள்) ஏற்றுமதியின் மூலமும் கொழுத்த லாபத்தை ஈட்டுகிறது ரிலை யன்ஸ் நிறுவனம். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி யாகும் மொத்த எண்ணெய் சந்தையில் ரிலை யன்ஸ் நிறுவனத்தின் பங்கு மட்டும் 71 % ஆகும். Hஇதில் மறைந்திருக்கும் ரகசியம் என்னவெனில், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஜெட் ஃபியூலை வாங்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. ஆஹா என்னே ஒரு ராஜதந்திரம். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வதால் இந்திய நாட்டுக்கும் மக்களுக்கும் அபரா தம் விதிக்கிறது அமெரிக்கா. ஆனால் கச்சா எண் ணெய்யை வாங்கி சுத்திகரித்து ஜெட் ஃபியூலாக அமெரிக்காவிற்கே விற்பனை செய்வதால் ரிலை யன்சுக்கு கொழுத்த லாபம். அதாவது நாட்டுக்கு நட்டம். அம்பானிக்கு லாபம். Hபிரதமரின் ஆசியோடு தனது காட்டில் இத்தகைய பணமழை கொட்டினால் மனிதர் விடுவாரா என்ன..? ரஷ்யவுடனான கச்சா எண்ணெய்யை இறக்கு மதி ஒப்பந்தத்தை அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நீட்டித்திருக்கிறார் முகேஷ் அம்பானி.
விஷப்பரீட்சையில் வெல்வாரா விஷ்வகுரு?
அரசியல், வர்த்தகம், கூட்டு ராணுவ உடன் படிக்கை என சதா சர்வகாலமும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தோடு கூடிக் குலாவிய மோடியும், பாஜக அரசும் தற்போது டொனால்டு டிரம்ப் தொடுத்தி ருக்கும் பொருளாதார யுத்தத்தால் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் (GDP) ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு நாம் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறோம் என மோடியும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பெருமை கொண்டாடுகிறார்கள். உற்பத்தியை அதிகரித்தால் மட்டும் போதாது, ஏற்றுமதிக்கான சந்தையையும் பொருளாதார ஸ்திரத் தன்மையையும் உத்தரவாதப்படுத்த வேண்டும்; அதுதான் ஒரு அரசின் ராஜதந்திர நடவடிக்கையின் வெற்றியாகும். “விஷ்வகுரு” என எல்லாரும் அழைக்கும் போது அத்தகைய அடைமொழியில் மோடி ஒரு வேளை குதூகலம் அடையலாம். ஆனால் அத்தகைய குதூ கலத்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் என்ன பலன் கிடைத்து விடப்போகிறது! சர்க்கரை என எழுதப் பட்டிருக்கும் காகிதம் ஒரு போதும் இனிக்காது தானே! விஷ்வகுருவின் வீரியம் காரியத்தால் வெளிப்பட வேண்டும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளி எனும் பெருமையை தூக்கி தூர எறிந்து விட்டு உலக நாடுகளோடு அரசியல் உறவையும், வர்த்தக உடன் படிக்கைகளையும் இந்தியா விரிவாக்க வேண்டும். அத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மோடி அரசு உடனடியாக துவக்க வேண்டும். டிரம்ப் தலைமையிலான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரலையும் கண்டனத்தையும் எழுப்பும் நாடு களோடும், தலைவர்களோடும் இந்தியாவும் இணைந்து நிற்க வேண்டும்.