articles

img

தொழிலாளர்களின் போராட்டம் மனிதகுலத்தின் போராட்டம் - சு.வெங்கடேசன் எம்.பி.,

தொழிலாளர்களின் போராட்டம் மனிதகுலத்தின் போராட்டம்

வரலாற்றில் மக்கள் பெருந்திரளாகக் கூடி ஆளும் ஆட்சிக்கு எதிராக போராடிய காலம் சுமார் 100 ஆண்டுகளே. ஆனால் மக்களை அடக்கி ஆண்டு  வந்த சிந்தனை 2000 ஆண்டுகளாக நிலை பெற்றுள்ளது. அதனால் அடக்கி ஆளும்   தத்துவம் அனைத்துவகையான கலை வடிவங்களின் மூலம் மக்களின் ஆழ்மனதில் பதியவைக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலைநிறுத்தப் பட்டுள்ள அதிகாரத்துவ சிந்தனைக்கு எதிராக உழைக்கும் மக்கள் போராட வேண்டியிருக்கிறது.  கருணையால் நடந்தது அல்ல! உழைக்கும் மக்களின் நூற்றாண்டுகால போராட்ட அனுபவமே உலகை கிடுகிடுக்க வைத்துள்ளது. மன்னராட்சிகளை மக்களாட்சியாக மாற்றியது எந்த மகானின் கருணையாலும் நடந்த தல்ல. மகத்தான மக்கள் போராட்டங்களால் நடந்தது.  மக்களாட்சிகளின் நலன்கள் பெரு முதலாளி களுக்கா அல்லது பெரும்பான்மையான உழைக்கும்  மக்களுக்கா என்பது தான் இன்று நடக்கும் போராட்டம். இதிலும் வெற்றி மக்களுக்கே. ஆனால் அது அவ்வளவு எளிதில் கிடைக்க கூடாது என்பதற்காத்தான் இந்த நாட்டின் ஆட்சி, அதிகாரம் அனைத்தும் செயல்படுகிறது.  தத்துவப் போராட்டத்தின் பகுதி நமது போராட்டம் மக்களை சுரண்டும் பெருமுதலாளிகளுக்கோ, அவர்களுக்கு ஆதரவான அரசுக்குக்கோ எதிரானது மட்டுமல்ல; அதற்கான நியாயங்களை வலியுறுத்த இரண்டாயிரமாண்டாக இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள சிந்தனைகளுக்கும் எதிரானது.  தத்துவங்களே உலகின் நிகழ்வுகளை இயக்குகின்றன. தொழிலாளி வர்க்க தத்துவமே ஆளும் வர்க்க தத்துவங்களை வீழ்த்த அனைத்து வகையிலும் தன்னை அனுபவப்படுத்திக் கொண்டுள்ளது. இந்த போராட்டம் உன்னுடைய ஆலை வாயிலின் முன்பு நடக்கலாம், நமது பணிமனை முன்பு நடக்கலாம், நமது மாநக ராட்சியின் முன்பு நடக்கலாம், ஊதியம் கேட்டோ, பஞ்சப்படி கேட்டோ, தினப்படி கேட்டோ நடக்கலாம். ஆனால் இவை அனைத்தும் நமக்கான உரிமையை நிலைநிறுத்தும் தத்துவப் போராட்டத்தின் பகுதிகளே. அரசியல் பழகுவோம்! உழைக்கும் வர்க்கத்தின் விடுதலை என்ற மாபெரும் போராட்டக் களத்திற்கான ஒத்திகைகளே இந்த போராட்டங்கள் எல்லாம். சங்கங்கள் போராட பழக்குகின்றன. போராட்டக் களங்களே அரசியலை பழக்குகின்றன. இங்கு இருக்கிற ஒவ்வொருவரும் அரசியல் பழகியவர்களே. ஆனால் அரசியல்வாதி என்று  சொல்லிக்கொள்கிற பலர் குறுக்கு வழிகளையும், கொள்ளை அடிப்பதையும், சுரண்டிப் பிழைப்ப தையும் தான் அரசியல் என்று பழகிக்கொண்டும், சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள். இந்த கயமைகளுக்கு நடுவில் தான் நாம் ஒவ்வொரு நாளும், நம்முடைய ஒவ்வொரு செயலின் மூலமும் உரக்கச்சொல்கிறோம். அரசியல் என்பது மக்களின் விடுதலையை மையப்படுத்திய சொல். அரசியல் என்பது ஆளும் வர்கத்துக்கான வார்த்தை அல்ல; போராட்டத்துக்கான வார்த்தை. மக்களின் நலனை மையப்படுத்திய வார்த்தை. எனவே தான் அரசியல் பழக அனைவருக்கும் பயிற்சி அளிப்போம். அந்த பயிற்சிக்களன் தான் போராட்டக் களங்கள். அந்த பயிற்சிக் களன்கள் தான் உரிமையை பெறுகிற அனைத்து முயற்சிகளும்.  6 மணியா? 12 மணியா? நூற்றி ஐம்பது ஆண்டுக்கு முன்னால் வைக்கப்பட்ட முழக்கம் எட்டு மணிநேர வேலை என்பது. நவீன ஏஐ காலத்தில் அதனை ஆறு மணி  நேரமாக குறைக்க வேண்டும் என்று நாம் சொல்கிறோம். 12 மணி நேரமாக ஆக்கிக் கொள்ள லாம் என்று அரசாங்கம் சொல்கிறது.  தொழிற் சங்கம் என்பது ஒரு அமைப்பு; அது தொழிலாளி களின் குரலை பிரதிபலிக்கிறது. அரசு என்பது தொழி லாளியின் குரலையோ, மக்களின் குரலையோ, சட்டத்தின் குரலையோ பிரதிபலிக்க வேண்டும். ஆனால் அது பெரு முதலாளிகளின் குரலையே பிரதி பலிக்கிறது.  அருவருப்பான சுரண்டும் தத்துவத்திற்கு மனிதமுகத்தைப் பொருத்த நினைக்கும் அனைத்து முயற்சியையும் அம்பலப்படுத்துவோம். வளர்ச்சி தேவையானது. ஆனால் அது யாருக்கானது என்பதே அடிப்படையானது. இந்த அடிப்படையான கேள்வியில் யார் யார் எந்தெந்த பக்கம் நிற்கிறார்கள் என்பதே அரசியல்.  டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதம் வரி விதித்துள்ளார்.  மோடி இன்று வரை அதைப்பற்றி வாய்திறக்கவில்லை. இருவருக்கும் பின்னால் இருப்பது யார்? டிர்மப் நிர்வாகம் வைக்கும் கோரிக்கைக்கு பின்னால் இருப்பது அவரது கட்சிக்கு பணம் கொடுத்த பெருமுதலாளிகளின் நலன். மோடியின் மெளனத்துக்கு பின்னால் இருப்பது இவரது கட்சிக்கு நிதிதரும் பெருமுதலாளிகளின் நலன். இந்த பெருமுதலாளிகளின் கொள்ளை லாபமே அரசின் கொள்கையாக வடிவம் பெறுகிறது.   முன்னணிப் படை மக்களை வாக்குச் சந்தைகளாக மாற்றுவதே அவர்களின் அரசியலுக்கு அடிப்படையானது. தற்காலிக பலன்களும், கவர்ச்சித் திட்டங்களுமே மக்களைக் கையாள அவர்களுக்கு போதுமானது. இந்த மாபெரும் சூதாட்ட வலைப்பின்னலுக்குள் இருந்து மக்களை மீளச்செய்ய இருக்கும் ஒரே மார்க்கம் மக்களை அரசியல்மயப்படுத்துதல் மட்டுமே. உரிமையை நிலைநாட்டவும், சமத்துவத்தை நிலைநாட்டவும் நடக்கும் அரசியல் போராட்டத்தின் முன்னணிப் படையாக தொழிலாளி வர்க்கம் செயல்படும். சிஐடியு மதுரை மாநகர் மாவட்ட மாநாட்டில்  ஆற்றிய உரையிலிருந்து...