articles

img

அரசியல் பாடம் சொல்லும் நான்கு நூல்கள்

அரசியல் பாடம் சொல்லும் நான்கு நூல்கள்

“நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – இ.பா.சிந்தன்  “பேராற்றலின் குரல்” – கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் ”ஃபிடெல் காஸ்ட்ரோ “ – ஜான் லீ “ சோசலிச கனவின் தேடல்;  கியூபாவை நோக்கிய பயணம்” – எம். கண்ணன்

224 பக்கங்கள்.  இன்றைய உலக அரசியலையும் உள்ளூர் அரசியலையும் விளங்கிக் கொள்ள எளிய வழிகாட்டி எனில் மிகை அல்ல.  ‘சோசலிச கியூபாவை பாதுகாப்போம், ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம்’ என்ற முழக்கத்தோடு கியூப ஒருமைப்பாட்டு விழா மற்றும் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு தொடக்க விழா (ஆக.12) செவ்வாயன்று சென்னையில் நடைபெற்றபோது இந்நூல்கள் வெளியிடப்பட்டன. உலக அரசியலைப் புரிந்து கொள்ள என்பது சரி,  உள்ளூர் அரசியலுக்கு இதற்கும்  என்ன தொடர்பு? அரசியல் சார்ந்து எழுதும் போது;  ஆய்வு சார்ந்து எழுதுவது,  வெகுஜனங்களை நோக்கி மேலோட்டமாக எழுதுவது,  தகவல்களைக் கொட்டி எழுதுவது என்கிற மூன்றில் ஏதாவது ஒன்றில் பயணிப்பதே பொதுவாக நடக்கும். ஆயின் செயலுக்கு உந்தித்தள்ள எழுதுவது தனிக்கலை.  இதனை ’கிளர்ச்சிப் பரப்புரை’ எனவும் சொல்லலாம்.  தகவல்களும் வேண்டும்,  ஒரு வரலாற்று இயங்கியல் பார்வையில் அலசிப் பார்ப்பதாகவும் இருக்க  இருக்க வேண்டும்,  எளிதில் போய்ச் சேரும் மொழி நடையும் கைவர வேண்டும்,  கடைக்கோடி மனிதரை உசுப்பி போராடத் தூண்ட வேண்டும். இதில் இ.பா.சிந்தன் தேறிக்கொண்டிருக்கிறார் என்பதன் சாட்சிதான்,          ”பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும்?” என்ற நூலும்,  அதனைத் தொடர்ந்து வந்துள்ள  “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?”எனும் நூலும்.  வாழ்த்துகள்! இங்கே மேலே குறிப்பிட்ட நான்கு நூல்களுமே ’கிளர்ச்சி பரப்புரை’ வகைதான்.  நான்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய வையே. நான்கையும் மேலே குறிப்பிட்ட வரிசையில் வாசிக்கும் போது ஓர் அரசியல் சித்திரம் மனதில் நிச்சயம் உருவாகும். எனவே வாலிபர்கள், மாணவர்கள்,  புதியவர்களிடம் இவற்றை கொண்டு சேர்ப்பதும் மிகுந்த முக்கியமுடைய அரசியல் பணியே !  கியூபா என்ற நாட்டின் பழங்குடிகள் யார்?  அவர்கள் பேசிய மொழி என்ன?  அவர்கள் உணவு யாது?  பயிர் யாது?  அங்கு கரும்பு எப்படி வந்தது?  அவர்களின் சுருட்டு, கியூப  ரம் [மது] எப்படி புகழ்பெற்றன?  யார் யாரெல்லாம் அங்கு ஆதிக்கம் செலுத்தினர்?  அங்கு வந்து சேர்ந்தோர் யார் யார்?  ஸ்பெயினும் பிரிட்டனும் அமெரிக்காவும் அவர்கள் வாழ்வோடு எப்படி விளையாடின?  அமெரிக்கா இன்னும் எப்படி பழிவாங்கிக் கொண்டிருக்கிறது?   ஏன் ?  அங்கு போராட்டக் குணம் அக்னிக் குஞ்சாய் எப்படி அடை காக்கப்படுகிறது?  இப்படி எழும் கேள்விகளுக்கு சுருக்கமாக அதே சமயம் நுட்பமாக விடை சொல்லி, கியூபா மீதான நம் பார்வையைக் குவித்துவிடுகிறார் நூலாசிரியர் இ.பா.சிந்தன் ‘ நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்? ’ என்ற நூலில்.   முதல் அத்தியாயம் ‘இப்படி நடந்து விட்டால் என்ன ஆகும்? ’ என்ற பதற்றத்தை வாசகரிடம் விதைத்து நூலுக்குள் இழுக்கிறார்.  நல்ல கதை சொல்லி உத்தி.  வாசித்து முடித்தவுடன் கியூபா மீதான நம் பரிவோ கருணையோ அதையும் தாண்டி ஏகாதிபத்திய எதிர்ப்பாக உருமாற்றம் அடைவதுதான் இந்நூலின் வெற்றி.   முறைத்துக்கொண்டே இருந்து துன்ப  துயரத்தை சுமப்பதைத் தவிர வேறு எதனைக் கண்டீர்கள்?  பேசாமல் கொஞ்சம்  சமரசமாகப் போய்விடலாமே ! காலில் விழுந்தாவது காரியத்தை சாதிக்க வேண்டி யதுதானே?  இப்படி எடப்பாடி ஸ்டைலில் கேட்போருக்கு ’உடன்பட்டுப் போவதுதான் தீர்வா? ’ என்கிற ஒன்பதாவது அத்தியாயத்தில் சாட்சிகளோடு பதில் சொல்லி இருக்கிறார் இ.பா.சிந்தன்.   இந்நூலில் சேகுவேரா குறித்து இன்னும் கொஞ்சம் அதிகம் சேர்த்திருக்கலாமோ?  அதே போல் ஹோசே மார்த்தியின் பொன்மொழிகளை வாக்குமூலங்களை எப்போதும் தன் பேச்சின் ஊடே மேற்கோள் காட்டிக்கொண்டே இருப்பவர் காஸ்ட்ரோ.  இந்நூலிலும் அதனை ஒட்டி சில மேற்கோள்களை சேர்த்திருக்கலாமோ?  இவை இல்லாததால் இந்நூல் குறையுடைய தாகாது;  இருந்திருந்தால் இன்னும் கூர்மை சேரும் அவ்வளவுதான்.  அடுத்து ஜான் லீ ஆண்டர்சனின் எழுத்துகள் வழி  ‘ஃபிடல் காஸ்ட்ரோ’ குறித்த சிறு அறிமுக நூல் ஜெ. தீபலட்சுமியால் நன்கு தொகுக்குப்பட்டுள்ளது.  மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  இந்நூலிலும் வரலாறும் வாழ்க்கையும் இணைந்து சொல்லப்பட்டுள்ளது பேரழகு.  “சேவும் ஃபிடெலும் கம்யூனிஸ்டுகள் என்றால், நாமும் கம்யூனிஸ்டுகளே” என அனைவரையும் சொல்லவைத்த பேராளுமை அவர்கள்.  அவர்கள் ஊட்டிய உத்வேகமும் அரசியல் விழிப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் இன்னும் கியூபா முழுவதும் கனன்று கொண்டே இருப்பதின் மந்திரச் சொற்களே காஸ்ட்ரோ,  சேகுவேரா.   இந்நூலின் துவக்கத்தில் கியூப ஒருமைப்பாட்டு நிகழ்வொன்றில் கலைஞர் வாசித்த கவிதை இடம் பெற்றுள்ளது.  அதில்,  “கியூபா சின்னஞ் சிறிய நாடு ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட தேன்கூடு ! தேன்கூடென்று ஏன் சொல்லுகிறேன் தெரியுமா தெரியாமல் அமெரிக்கா கைவைக்கும் போதெல்லாம் கொட்டிவிடும் தேனிக்கள் கியூப மக்கள் “ என்கிறார். ஆம்.  காஸ்ட்ரோவின் பேச்சாற்றல் உலகோரை வியக்கவைத்தது.  அந்த ‘பேராற்றிலின் குரல்’ - ஐ கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.  வி.நர்மதா மொழியாக்கம் செய்து  தந்துள்ளார்.  அவர் பேச்சு நம்மிடம் நம்பிக்கை யை விதைக்கும். போரிடத் தூண்டும். இந்த மூன்று நூல்களும்  கொம்பு சீவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு எவ்வளவு சரியானது  நியாயமானது  அவசியமானது என்பதை தன் பயணம் மூலம் அறிந்த செய்திகளையும் பெற்ற அனுபவத்தையும் பிசைந்து ’சோஷலிசக் கனவின் தேடல்’ ஆகத் தந்திருக்கிறார் எம். கண்ணன். உணர்ச்சிகரமான நடை மற்றும் விவரிப்பு வழி இந்நூலில் பல உண்மைகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.  நம் நாடு  நேரு, இந்திரா காலத்தில் கடைப்பிடித்து வந்த வெளிநாட்டுக் கொள்கைகளை கைவிட்டு எப்படிப்பட்ட ஏகாதிபத்தியத்திடம் சரணடைந்துள்ளது என்கிற கசப்பான உண்மையை உணரச் செய்கிறது இந்நூல்.   பொருளாதாரத் தடை என்பதன் வலியும் கொடூரமும் எத்தகையது?  அதனை எதிர்த்து நிற்க எத்தகைய அரசியல் உறுதியும் அர்ப்பணிப்பும் தேவை?  இந்நூல் பாடம் சொல்கிறது.  ஒரு நாளல்ல ஒரு மாதமல்ல ஒரு வருடமல்ல தொடர்ந்து இந்த முற்றுகை வட்டத்தில் இருக்கும் கியூபர்கள் அதனை எதிர்த்து எழுவது உலகுக்கே அரசி யல் பாடமாகும். அதனை இந்நூல் உணர்த்துகிறது.   இ.பா.சிந்தன் நூலின் முதல் அத்தியாயத்தை மீண்டும் வாசித்து எம். கண்ணன் சொல்லும் செய்திகளையும் சேர்த்து அசைபோட்டால் எவ்வளவு ஆபத்தான ஏகாதிபத்திய எதிரியை நாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது என்பது புலனாகும்.   அதிலும் கண்ணன் எழுதிய நூலின் ஆறாவது அத்தியாயத்தை வாசித்து முடிக்கும் போது,  ஒன்று புலனாகிறது  நாம் ” 1.எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?  2.என்ன செய்ய வேண்டும்?  3.எதைப் பற்றி கவலைப்பட வேண்டும் “ என்பவற்றை உள்ளடக்கிய ”டிஜிட்டல் உலக கருத்து பிரச்சார வடிகட்டிகள்” குறித்தும்,   ஒரு வகை கலப்பு யுத்தம் (Hybrid war)  மூலம்  சமூக பொருளாதார அமைப்புகளில் நீண்ட கால சீர்குலைவு  ஏற்படுத்துகிற போக்கு குறித்தும் கருத்தரங்கில் நடை பெற்ற விவாதங்களைச் சொல்கிறார்.  இது நாம் உள்ளூரிலும் எதிர்கொள்ளும் சவால் அல்லவா?  இந்துத்துவ வெறுப்பு அரசியலை நியாயப்படுத்தியும்,  தாரளமய பொருளாதாரத்துக்கு முட்டுக் கொடுத்தும்  இங்கு நம்மிடம்  திணிக்கப்படும் கருத்துப் போர் நினைவுக்கு வரவில்லையா?  “ நாம் வலைப் பின்னல்களை நெய்யும் மக்கள்” [WE ARE THE PEOPLE WHO WEAVE NET WORKS ] என்கிற நிலையை  எப்படி சாதிக்கப் போகிறோம்?  ஆக உள்ளூர் சவாலும் உலக சவாலும் இணையும் புள்ளிகள் மிகவும் கவலை அளிக்கிறது.   இந்த நான்கு நூல்களையும் இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்லுங்கள்! அரசியல் பயிற்சி என்பது அறையில் உட்காரவைத்து போதிப்பது மட்டுமல்ல;  தக்க நூல்களை வாசிக்கச் செய்வதும்தானே !