ஷாந்தி (SHANTI) சட்டம் அணுசக்தித் துறையில் அதானி மயமும், விபத்துக்கான ‘காப்பீடும்’!
ஒன்றிய மோடி அரசு நிறைவேற்றியுள்ள ‘மாற்றமடையும் இந்தியாவிற்கான அணுசக்தியை நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்’ (SHANTI - 2025) சட்டம், அணு உலை உபகரணங்களை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்க ளுக்கு ஒரு ‘பாதுகாப்புக் கவசமாக’ அமைந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, ஒருவேளை அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால், அதற்கு அந்த உபகரணங்களை வழங்கிய நிறு வனங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை; மாறாக அந்த உலையை நடத்தும் இந்திய உரிமையாளர் மட்டுமே பொறுப்பாவார். இது போதாதென்று, அந்த இழப்பீட்டுத் தொகையை யும் வெறும் 420 மில்லியன் டாலர் (சுமார் 3,500 கோடி ரூபாய்) என உச்சவரம்பு நிர்ண யித்து முடக்கியுள்ளது. போபால் முதல் ‘ஷாந்தி’ வரை: ஒரு வரலாற்றுத் துரோகம் இந்தியாவில் அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் (CLNDA, 2010) உருவாக்கப்பட்டபோது, போபால் விஷவாயு விபத்தின் 25-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அந்த விபத்தில் யூனியன் கார்பைடு நிறுவனம் காட்டிய பொறுப்பற்றத்தனமும், அதனால் ஏற்பட்ட லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புகளும், ‘உபகரணங்களை வழங்கும் நிறுவனங்களின் பொறுப்பு’ (Suppliers’ Liability) எவ்வளவு முக்கியமானது என்பதை நாட்டுக்கு உணர்த்தியிருந்தது. அக்காலத்தில் இடதுசாரிகள் மற்றும் பாஜக (அப்போது எதிர்க்கட்சி) நடத்திய போராட்டத்தினால் தான், அணு விபத்து ஏற்பட்டால் உபகரணங்களை வழங்கிய நிறுவனங் களும் பொறுப்பேற்க வேண்டும் என்ற விதி 2010 சட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால், இன்று அதே பாஜக ஆட்சியில் அமர்ந்து கொண்டு, அமெரிக்க அணுசக்தி நிறுவனங்களின் லாபத்திற்காக அந்தப் பாதுகாப்பு விதியைத் தகர்த்தெறிந்து ‘ஷாந்தி’ சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. தனியார்மயமாக்கலும் அதானி - டாடா நுழைவும் இதுவரை ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த அணுசக்தித் துறையை, இப்போது அதானி மற்றும் டாடா போன்ற தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) சொந்தமாக 8,780 மெகாவாட் திறனை உருவாக்கியுள்ளது. இப்போது தனியார் நிறுவனங்கள் இத்துறையில் ‘கிக்-ஸ்டார்ட்’ செய்ய ஏதுவாக, அமெரிக்காவிலிருந்து அணு உலைகளை இறக்குமதி செய்ய அரசு துடிக்கிறது. அமெரிக்க நிறுவனங்களின் தோல்வியும் டிரம்ப்பின் அழுத்தமும் அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse) மற்றும் ஜி.இ (GE) போன்ற நிறுவனங்கள் அணுசக்தித் துறையில் ஒரு தோல்வியடைந்த வரலாற்றைக் கொண்டுள்ளன. ஜார்ஜியா மாகாணத்தில் இவை கட்டிய அணு உலைகள் திட்டமிட்ட காலத்தை விட 7 ஆண்டுகள் தாமதமாகவும், நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட இருமடங்கு அதிகமாகவும் (37 பில்லியன் டாலர்) செலவு இழுத்தன. இதனால் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் திவாலாகி, தற்போது ஒரு கனடிய நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது. இப்போது கேள்வி என்னவென்றால்... * தங்கள் சொந்த நாட்டிலேயே அணு உலைகளை லாபகரமாகக் கட்டத் தெரியாத அமெரிக்க நிறுவனங்களை இந்தியா ஏன் நாடுகிறது? * ஜனாதிபதி டிரம்ப்பின் வர்த்தக அழுத்தங்களுக்குப் பணிந்து, அவருக்கு ஒரு ‘கப்பம்’ (Tribute) கட்டும் விதமாக இந்தியா இந்தத் தோல்வியடைந்த தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்கிறதா? சிறிய அணு உலைகள் (SMR): ஒரு விலையுயர்ந்த பரிசோதனை புதிதாக முன்மொழியப்பட்டுள்ள ‘சிறிய அணு உலைகள்’ (SMR) தொழில்நுட்பம் உலகில் எங்குமே இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. அமெரிக்காவின் ‘ஹோல்டெக்’ (Holtec) போன்ற நிறுவனங்களுக்கு அணு உலைகளை வடிவமைத்த அனுபவமே இல்லை. ரஷ்யா மற்றும் சீனாவில் மட்டுமே இத்தகைய உலைகள் பரிசோதனை முறையில் உள்ளன. அமெரிக்க நிறுவனங்களின் சிறிய அணு உலைத் (SMR) திட்டங்கள் ஏற்கனவே காலதாமதம் மற்றும் அதிகப்படியான செலவு போன்ற சிக்கல்களில் சிக்கியுள்ளன என்பதை ‘IEEFA’ அறிக்கை உறுதிப்படுத்துகிறது. சுயசார்பைக் கைவிடுவது ஏன்? இந்தியா ஏற்கனவே கனடியத் தொழில்நுட்பத்தை (CANDU) உள்நாட்டிலேயே மேம்படுத்தி, 220 மெகாவாட்டிலிருந்து 700 மெகாவாட்டாக உயர்த்தும் திறனைப் பெற்றுள்ளது. பி.எச்.இ.எல் (BHEL), லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) போன்ற இந்திய நிறுவனங்கள் அணு உலை உபகரணங்களைத் தயாரிப்பதில் உலகத்தரம் வாய்ந்தவை. நமது விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் அணுசக்தித் துறையில் சாதித்துக் கொண்டிருக்கும்போது, எதற்காக அமெரிக்காவின் காலாவதியான மற்றும் பாதுகாப்பற்ற தொழில்நுட்பத்தின் பின்னால் ஓட வேண்டும்? ரஷ்யாவின் கூடங்குளம் அணுமின் நிலையம் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும்போது, அமெரிக்காவின் ‘ஹோல்டெக்’ போன்ற நிறுவனங்களுக்கு எதற்காக சிவப்புக் கம்பளம் விரிக்க வேண்டும்? ஆபத்தான விளையாட்டு அணுசக்தி என்பது எப்போதுமே ஒரு அபாயகரமான துறை. போபால் கற்றுக்கொடுத்த கசப்பான பாடத்தை நாம் இவ்வளவு சீக்கிரம் மறந்துவிடக் கூடாது. மக்களின் உயிரைப் பணயம் வைத்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ‘விபத்து பொறுப்பிலிருந்து விலக்கு’ அளிப்பது என்பது மிகப்பெரிய குற்றமாகும். தன்னிறைவு பெற்ற நமது அணுசக்தித் துறையைத் தனியார் லாபத்திற்காகவும், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்காகவும் பலி கொடுக்கும் இந்த ‘ஷாந்தி’ சட்டம், இந்தியாவிற்கு ‘அசாந்தியை’ (நிம்மதியின்மையை) மட்டுமே கொண்டு வரும். அணு உலைத் தொழில்நுட்பத்தில் இந்தியா ஏற்கனவே முன்னணியில் உள்ள நிலையில், டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்து இத்தகைய ஆபத்தான சட்டத்தை நிறைவேற்றியிருப்பது தேசநலனுக்கு எதிரானது. பீப்பிள்ஸ் டெமாக்ரசி (டிச. 21)
