articles

தமிழைப் புகழ்வதால் மட்டும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது - ப.முருகன்

தமிழைப் புகழ்வதால் மட்டும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் மொழி மீது மாறாப் பற்றும் மாளாக் காதலும் கொண்டவர் போல இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் தொடர்ந்து பேசி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள அவரது அடிப்பொடிகள் அவரை ‘தமிழ்ப் பெரியார்’ என்று புகழும் அளவிற்குச் செல்கின்றனர். திருவள்ளுவர் முதல் பாரதியார் வரை தமிழ்ச் சான்றோர்கள் பலரும் அவரது உரைகளில் இடம்பிடிக்கிறார்கள். ஆனால், அவருக்குத் தமிழில் தெரிந்ததெல்லாம் ஒரே ஒரு வார்த்தைதான் (வணக்கம்) என்று அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். நடந்து முடிந்த நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் முடிவில் நடைபெற்ற தேநீர் விருந்தின்போது, “தமிழில் எனக்குத் தெரிந்த ஒரே  வார்த்தை வணக்கம் என்பதுதான்” என்று மோடி கூறி னார்.

அதற்குப் பிரியங்கா காந்தியோ, “எனக்கு மூன்று வார்த்தைகள் தெரியும். ஆனால் அதை நீங்கள் கூற முடியாது. அது ‘காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்பதுதான்” என்று பதிலடி கொடுத்தார். இதைக் கேட்டு அங்கிருந்த தலைவர்கள் சிரித்தனர் என்று தினமணி நாளிதழ் செய்தியும் படமும் வெளி யிட்டிருந்தது. தமிழைப் புகழ்வதன்  பின்னணியில் உள்ள அரசியல் பிரதமர் தமிழ் மொழியைத் தொடர்ந்து புகழ்ந்து கொண்டே இருப்பதற்குப் பின்னால் ஒரு பெரும் அரசியல் விழைவு இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவை வேரூன்றச் செய்யவும், எப்படியாவது ஆட்சியதிகாரத்தில் பங்கெடுக்கவும் வேண்டும் என்கிற அந்தப் பேராசையை நிறைவேற்றவே இத்த கைய மொழிப் பாசம் காட்டப்படுகிறது.

கடந்த ஆண்டின் இறுதி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய மோடி, பிஜித் தீவு முதல் காசி வரை மக்களின் மனங்களைத் தமிழ்மொழி ஒன்றிணைப்பதாகக் கூறினார். வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ்ச்  சங்கமத்தின் மூலம் குழந்தைகள் மற்றும் இளை ஞர்கள் மத்தியில் தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்துள்ள தாகவும், தமிழ் உலகின் பழமையான மொழி என்றும் வழக்கம்போல் புகழாரம் சூட்டினார். அதே போல், டிசம்பர் 31 அன்று இராமேஸ்வ ரத்தில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கம நிறைவு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசிய பேச்சு, இவர்களின் உள்நோக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ் கற்றது போல, தானும் விரைவில் இந்தி கற்க விரும்புவதாக அவர் கூறினார். அங்கே (காசியில்) உள்ளவர்கள் தமிழ் கற்கி றார்கள், எனவே இங்கே (தமிழகத்தில்) உள்ளவர்கள் இந்தி கற்க வேண்டும் என்பதைத்தான் அவர் சுற்றி வளைத்துக் கூறுகிறார். தேசியக் கல்விக் கொள்கை  எனும் ஆயுதம் தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் படி, மூன்றா வது மொழியாக ஒரு இந்திய மொழியை (இந்தி அல்லது சமஸ்கிருதம்) கற்க வேண்டும் என்ற நிபந்தனையை ஒன்றிய அரசு மறைமுகமாக விதிக்கிறது. அதை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ கத்திற்கு வழங்க வேண்டிய கல்விக்கான நிதியை  வழங்குவோம் என்று ஒன்றிய அரசு நிர்ப்பந்திக்கிறது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘பிஎம்ஸ்ரீ’ (PM SHRI) ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டால் தான் நிதி வழங்க முடியும் என்பதில் பிடி வாதமாக இருக்கிறார். அவரும் கூட இராமேஸ்வரம் நிகழ்ச்சியில் தமிழைப் புகழ்ந்து பேசிவிட்டு, மறுபுறம் மாநிலத்தை நிதி ரீதியாகப் பழிவாங்கும் வேலையையே செய்து வருகிறார்.

தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கி றோம் என்று கூறும் பிரதமர் மோடி, இந்தியாவின் மொழிகளை அழிக்க மெக்காலே முயற்சி செய்தார் என்றும், அதிலிருந்து விடுபட்டு அனைத்து மொழி களையும் பாதுகாப்பதாகவும் கூறுகிறார். ஆனால், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மொழி களைப் பாதுகாக்கும் விதம் ‘ஒரு கண்ணில் வெண்ணெய், மறுகண்ணில் சுண்ணாம்பு’ என்றே சொல்ல வேண்டும். நிதி ஒதுக்கீட்டில்  நிலவும் பெரும் பாரபட்சம் 2014-இல் மோடி பிரதமரான பின்பு, கடந்த 10 ஆண்டுகளில் வெவ்வேறு மொழிகளுக்கு வழங் கப்பட்ட நிதி விபரத்தை ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றது. அந்தத் தரவுகள் பாஜகவின் ஓரவஞ்ச னையைத் தெளிவாகக் காட்டுகின்றன: தமிழுக்கு ரூ. 120 கோடி மட்டும் ஒதுக்கப் பட்டுள்ளது. சமஸ்கிருதத்திற்குத் தமிழை விட 21 மடங்கு அதிக நிதி வாரி வழங்கப்பட்டுள்ளது. மலை யாளம் மற்றும் ஒடிய மொழிகளுக்கோ வெறும் ரூ. 3.56 கோடிதான் கிடைத்துள்ளது. சமஸ்கிருத ஆண்டு என்று நிதியை வாரியிறைப்பதும், இந்தி மொழி வாரம் கொண்டாடுவதுமே இவர்களின் ‘மொழிப் பாதுகாப்பின்’ லட்சணமாக உள்ளது. திணிக்கப்படும் மும்மொழிக் கொள்கையும் மறைக்கப்படும் உண்மையும் மதுரையில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி பயிற்று மொழி யாக இருக்க வேண்டும் என்பதுதான் தேசியக் கொள்கையின் பரிந்துரை. எனவே தமிழக அரசு இதை ஏற்க முன்வர வேண்டும்” என்றார்.

ஆனால், உண்மை நிலை என்னவென்றால், தமிழக அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே தமிழ் தான் பயிற்று மொழியாக உள்ளது. கலைஞர் கருணாநிதி காலத்தி லேயே தனியார் பள்ளிகளிலும் தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டுமெனச் சமச்சீர் கல்வித் திட்டத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. உண்மையிலேயே தாய்மொழிப் பற்று இருந்தால், ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஏன் ஐந்தாம் வகுப்பு வரை தமிழைப் பயிற்று மொழியாக மாற்ற வில்லை? அங்குதான் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கி றார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கல்வியிலேயே இந்தியைத் திணிக்க முயன்றபோது மாநிலமே கொந்தளித்தது. அதன் பின்னரே பாஜக கூட்டணி அரசு அந்த முயற்சியைத் திரும்பப் பெற்றது. கல்வியின் காவிமயமாக்கலும்  கேரளா, தமிழகத்தின் எதிர்ப்பும் கல்வியைக் காவிமயமாக்குவதும், கார்ப்பரேட் மயமாக்குவதும்தான் தேசியக் கல்விக் கொள்கையின் உண்மையான நோக்கம். விஞ்ஞான  ரீதியான கல்வியைச் சிதைத்து, புராணக் கதை களை வரலாறாக மாற்றவும், பாடத்திட்டத்தில் நச்சுக் கருத்துகளை விதைக்கவும் இவர்கள் துடிக்கி றார்கள். இதனால்தான், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தைச் சீரமைத்துப் புதிய பாடப்புத்தகங்களை உருவாக்கி யுள்ளது. தமிழக அரசும் தனக்கெனத் தனித்துவ மான கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் 160 உரைகள் மாநில மொழிகளில் நிகழ்த்தப்பட்டதைப் பிரதமர் பெருமையாகக் குறிப்பிடுகிறார். இதில் அதிக பட்சமாகத் தமிழில் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டன.

ஆனால், 22 தேசிய மொழிகளும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உடனுக்குடன் மொழி பெயர்க்கப்படவும், மாநில மக்கள் அதைப் புரிந்து கொள்ளவும் தேவையான வசதிகள் இன்னும் முழுமையாகச் செய்யப்படவில்லை. தேர்தல் ஆதாயத்துக்காகவும் தமிழ்நாட்டில் காலூன்றவும் தமிழ் மொழியைப் புகழ்வதால் மட்டும் தமிழக மக்கள் பாஜகவை நம்பிவிட மாட்டார்கள். தமிழ் பழமையானது, வளமானது என்பது உலகம் அறிந்த உண்மை; அதை மோடி அவர்கள் சொல்லித்தான் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. தமிழைப் புகழ்ந்துகொண்டே பின்ன ணியில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க நினைப்பது ஒருக்காலும் நடக்காது. தமிழகத்திற்கு ஒன்றிய பாஜக அரசு செய்து வரும் நிதித் துரோகங்க ளையும், மொழித் திணிப்பு சூழ்ச்சிகளையும் தமிழக மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்!