அழுதார்... தேற்ற வந்தவர்களும் அழுதனர்
The Roots of the Red Flag Movement are a Centennial Tradition
கோவையில் சிஐடியு அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ‘சிவப்பு வேர்களின் குடும்ப சங்கமம்’ நிகழ்ச்சி, வெறும் அரசியல் சந்திப்புக்கு அப்பாற்பட்ட உணர்ச்சிபூர்வமான ஒரு நிகழ்வாக அமைந்தது. சிஐடியுவின் 16ஆவது மாநில மாநாடு கோவையில் நடைபெற உள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக, இயக்கத்தின் அஸ்திவாரமாக இருந்த தியாகிகளின் குடும்பங்களை கௌரவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி கோவை கணபதியில் நடைபெற்றது.
துப்பிக்கும் தேடல் “சிஐடியுவின் அடித்தளத்தை அமைத்த தியாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர்கள், இப்போது நம்மிடையே இல்லாத தோழர்கள்... இவர்களுடைய குடும்பங்களுக்கு இடையே பல காலமாக தொடர்பு இல்லாமல் இருக்கலாம். அவர்களின் தியாகங்களை இன் றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லவும், அவர்களின் குடும்பங்களை கௌரவிக்கவும் இந்த நிகழ்ச்சி ஒரு அரிய வாய்ப்பு.” என்று செங்கொடி இயக்கத்தின் மூத்த தலைவரான தோழர் கே.ரமணியின் புதல்வி வத்சலா தலைமை ஏற்று பேசியபோது, அனைவரது குரல்களும் உடைந்துவிட்டன. இந்த சங்கமத்திற்காக, சிஐடியு தலைவர்கள் ஒவ்வொரு தியாகியின் வீட்டிற்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர். ஒரு நாளைக்கு ஆறு குடும்பங்களைக்கூட சந்திக்க முடியாத நிலை இருந்ததாகத் தெரிவித்த சிஐடியு மாவட்டச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மேலும் பேசுகை யில், கடந்த நூறு ஆண்டுகளில், கோயம்புத்தூர் மண்ட லத்தில் மட்டும் இந்த இயக்கத்திற்காக 65 பேர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். 1948 ஜனவரி 8ஆம் தேதி சின்னம்பாளையம் தியாகிகள் நால்வர் தூக்கி லிடப்பட்டனர். நவம்பர் 11ஆம் தேதி ஸ்டேன்ஸ் மில்லுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டில், பதினொரு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை மிதிக்க முயன்ற போலீஸைத் தடுக்க முயன்ற அம்பு கோபால், துப்பாக்கி பயனெட்டால் குத்தப்பட்டு உயிர்துறந்தார். வால்பாறையில் கூலி உயர்வு மற்றும் தொழிற்சங்க உரிமைக்காக போராடிய அப்பாறு ஞானகுரு, குருசாமி போன்ற நான்கு தோழர்கள் காவல் நிலைய வாயிலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். கோத்தாரி மில்லுக்குள் முத்து என்ற தோழர் படுகொலை செய்யப்பட்டார். மேலும், 17 வயது நிரம்பிய நந்த கோபால், தோழர்கள் அப்பாயி, பூசாரி, ராக்கியண்ணன், மற்றும் பலர் தங்கள் வாழ்வை இந்த இயக்கத்திற்காக அர்ப்பணித்துள்ளனர். ஓ.வி.வீரப்பன், பி.எஸ்.ஜி. கிருஷ்ணன், எஸ்.எம்.லட்சுமணன் போன்ற மூத்த தலை வர்கள் இந்த இயக்கத்தை கட்டியெழுப்ப பெரும் பங்க ளிப்பைச் செய்துள்ளனர். இத்தகைய எண்ணற்ற தியாகங்களின் விளைவாக, கோயம்புத்தூரில் தொழிலாளி வர்க்கம் பல்வேறு உரிமை களையும் சலுகைகளையும் பெற்றுள்ளது. இந்த தியா கங்களால் ஏற்பட்ட மாற்றங்கள், இன்று சமூகத்தில் தொழி லாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் அவர்களின் தியாகம், போராட் டங்கள், பட்ட துயரங்கள் எனப் பல விஷயங்கள் நெகிழ்ச்சி யூட்டியதாகக் கூறினார். “வெறும் அழைப்பிதழை மட்டும் கொடுத்துவிட்டு வர எங்களுக்கு மனம் வரவில்லை. அவர்களின் கதைகளைக் கேட்கவும், உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் அதிக நேரம் செலவிட்டோம்,” என்று அவர் கூறிய வார்த்தைகள், சிஐடியுவின் இந்த முயற்சி ஒரு சம்பிரதாயம் அல்ல, அது ஒரு பிணைப்பு என்பதை உணர்த்தியது. தியாகங்களின் பாரம்பரியம் இந்த நிகழ்வில் பேசிய சிஐடியுவின் கோவை மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி, இந்த மாநாடு தொழிலாளர் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும் என்று தெரிவித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த தலைவ ருமான பி.ஆர்.நடராஜன், ஒரு இடதுசாரி இயக்கம் அதன் முன்னாள் குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைத்ததாகக் கூறினார். “பல குடும்பங்களைச் சேர்ந்த தோழர்களைப் பார்க்கும்போது, அவர்களின் பிள்ளைகள் படிப்பிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து விளங்கி, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நல்ல நிலையில் இருப்பதை அறிய முடிகிறது. இது இந்த இயக்கத்தின் பெருமை,” என்று அவர் உணர்ச்சிபொங்கக் கூறினார். கோயம்புத்தூர் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய தோழர்கள் உமாநாத் மற்றும் கண்ணகுட்டியை பூசாரி பாளையம் மற்றும் செல்லபுரம் பகுதி பஞ்சாலைத் தொழிலா ளர்கள் பாதுகாத்ததை நினைவுகூர்ந்த அவர், “காவல்துறை யின் கடுமையான சித்திரவதைகள் இருந்தபோதும், யாரும் காட்டிக் கொடுக்கவில்லை. அப்படி நமது தலைவர்களைப் பாதுகாத்த பெருமைக்குரியது இந்த மண்” என்று குறிப்பிட்டார். நெகிழ்ச்சி ததும்பிய நினைவலைகள் இந்த சங்கமத்தில் பல தியாகிகளின் குடும்பங்கள், தலைமுறைகள் கடந்தும் தங்கள் பிணைப்பை வெளிப் படுத்தின. மூத்த தலைவர் கே.சி.கருணாகரன் அவர்களின் மகன் மகேஷ் கருணாகரன், “எனக்கு குடும்பம் என்ற உணர்வே கட்சி அலுவலகத்தில்தான்” என்று நெகிழ்ச்சி யுடன் கூறினார். “முன்னர் மாநாடுகளுக்கு குடும்பம் குடும்ப மாக சென்றோம். அதுதான் எங்களை ஒன்றாக இணைத்து வைத்தது” என்று அவர் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். நம்ம சாதியில் பிறந்து தாழ்ந்த சாதிக்காரனுக்காக பேசுறவன உசுரோடு விடக்கூடாது என கொடூரமாக கொலை செய்யப்பட்டவர் தோழர் தியாகி ராக்கியண்ணன். உடல்கூட கிடைக்கக்கூடாது என ஆதிக்க சாதியினரின் வன்மம் உச்சத்திற்கே சென்றபோதிலும், செங்கொடி இயக்கம் வாழையடி வாழையாய் தழைக்கும் என்பது தோழர் ராக்கி யண்ணனின் மகள் ராமாத்தாள் மேடையேறியபோது உணர்த்தியது. அவர் மேடையேறி பேசவில்லை. அழுதார், அழுதவரை தேற்றவந்தவர்களும் அழுக, மொத்தக் கூட்டமும் கண்களை குளமாக்கியது. அடக்குமுறைக்கு அஞ்சாத தலைவரான மிசா சலீமின் மகன் நஜீம், தனது தந்தை அவசரநிலை பிரகட னத்தின்போது ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்ட தையும், அப்போது கட்சி அளித்த நிதியுதவிதான் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றியது எனவும் உடைந்த குரலில் வார்த்தைகளை வெளிப்படுத்தினார். காலஞ்சென்ற ஓ.பி.வீரப்பனின் மகன், தனது தந்தை சமூக சேவைகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டதை நினைவுகூர்ந்து, “யாருக்கெல்லாம் உதவி தேவையோ, அவர்களைத் தேடிச் சென்று எனது தந்தை உதவினார்” என்று பெருமைப்பட்டார். ரத்தினபுரியைச் சேர்ந்த தாமஸின் மனைவி மேரி, தனது கணவர் தொழி லாளர்களுக்கு ‘பர்மனென்ட் கார்டு’ பெற்றுத் தந்ததை நினைவு கூர்ந்து, தங்கள் குடும்பம் இன்றும் கம்யூனிசக் கொள்கையைப் பின்பற்றி வருவதாக தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், செங்கொடி இயக்கத்தின் தலை வர்கள் வாழ்ந்த தூய வாழ்வைப் பற்றிப் பேசினார். “இந்த இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் ஒரு நெறி சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். இடதுசாரி இயக்க வாழ்க்கை என்பது புகழ் தேட அல்ல; அது மூலதனத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வாழ்க்கை. இந்த மாவட் டத்தில் செங்கொடி இயக்கத்தின் நூறாண்டு கால வேர் பரவியுள்ளது. இந்த இயக்கத்தின் பின்னால் நூறாண்டு கால வலுவான பாரம்பரியம் இருக்கிறது, இது தனிப்பட்ட தலைவர்களின் வீரம் மட்டுமல்ல, ஒரு ஒட்டுமொத்த இயக்கத் தின் ஒற்றுமை மற்றும் தியாகத்தின் அடையாளம்” என்றார். செங்கொடிக்கு கீழ் ஒரு குடும்பம் இந்த ‘சிவப்பு வேர்களின் குடும்ப சங்கமம்’ வெறும் ஒரு விழா அல்ல. அது ஒரு நூற்றாண்டு கால தியாக வரலாற்றின் மறுபார்வை. இந்த நிகழ்ச்சி, தியாகிகளின் குடும்பங்க ளுக்கு மரியாதை செலுத்துவதோடு, அவர்களின் தியாகங்கள் வீணாகவில்லை என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது. இன்று பலர் நல்ல வேலைகளிலும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். இதுவே இந்த செங்கொடி இயக்கத்தின் தொடர் வெற்றிக்கு சான்றாகத் திகழ்கிறது. இந்த சங்கமம், பல குடும்பங்களின் நினைவுகளையும், உணர்வுகளையும், அனுபவங்களையும் ஒரே இடத்தில் கொண்டு வரும்போது, அது சிஐடியு இயக்கத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த மாநாட்டிற்கு நிதி திரட்டுதல், விளம்பரம் மற்றும் களப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஆயிரக்க ணக்கான தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தியாகிகளின் வாரிசுகள் தங்கள் குடும்பத்தினரின் படங்களை, தியாகிகளின் ஜோதியை ஏந்தி வர, அவர்களின் வீர முழக்கங்களுக்கிடையே மாநாட்டின் செங்கொடி ஏற்றப்பட உள்ளது. இது, தலைமுறைகள் கடந்தும் தொட ரும் போராட்டத்தின், ஒருபோதும் அணையாத தியாக உணர்வின் அடையாளமாக நிற்கும். தொகுப்பு: அ.ர.பாபு