தாயுமானவர் திட்டமும் மாற்றுத்திறனாளிகளும்
சமூகத்தில் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவி களை அமல்படுத்தி வருகிறது. ஏற்கனவே உள்ள திட்டங்களோடு சேர்த்து காலத்திற்கு ஏற்றாற் போல் பல புதிய திட்டங்களையும் அமல்படுத்து கிறது. அதனடிப்படையில் கடந்த 12.08.25 அன்று முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்கிற பெயரில் புதிய திட்டத்தை தமிழக முத லமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று தொடங்கி வைத்து, திட்ட வாக னங்களின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு வழங்கும் பல்வேறு சேவை களை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் வகையில் மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்திட “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்றும் இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாய விலைக்கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும் என மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பய னாளர்களுக்கு அவர்தம் இல்லங்களுக்கே சென்று குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டை தாரர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை யிடமிருந்து பெறப்பட்டு கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள் ளது. பயனாளிகளின் எண்ணிக்கை... தமிழக அரசு அறிமுகப்படுத்தி யுள்ள இத்திட்டமானது மாற்றுத்திறனாளி களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இதில் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்திறனாளிகளுக்கு பொருள்கள் வீடு தேடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்தான் சந்தேகம் எழுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 40,000க்கும் குறைவில்லாத மாற்றுத்திறனாளிகள் இருக்கிறபோது மாநிலம் முழுவதும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளபோது எதன் அடிப்படையில் இந்த 1,27,797 மாற்றுத்திற னாளிகளை தேர்வு செய்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. குடும்பத் தலைவராக உள்ள மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்தா ர்களா, கடும் ஊனமுற்று படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்தா ர்களா, ஒரு நபர் கார்டுகளை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்தார்களா, ரேசன் கார்டு முதல் முறையாக வாங்கும்போது மாற்றுத்திறனாளி என குறிப்பிட்டு பதியப் பட்டுள்ள கார்டுகளை தேர்வு செய்தார்களா என எந்த தகவலும் தெரியவில்லை. மேலும், இத்திட்டத்தில் தாங்களும் இணைந்து பயன்பெற வேண்டும் என நினைக்கும் மாற்றுத்திறனாளிகள் யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கான விண்ணப்பப் படிவம் என்ன, விண்ணப்பிக்கும் மாற்றுத் திறனாளி களுக்கான தகுதிகள் என்ன, இதுபோன்ற எந்த ஒரு தகவலும் மாநில அரசிடமிருந்து இன்று வரை வெளியாகவில்லை. இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் சிறப்பு கவனம் தேவைப் படுகிற ஆட்டிசம் பாதித்தவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என தன்னுடைய வேலை யைக்கூட தன்னால் செய்ய முடியாத படுத்த படுக்கையாக இருக்கிற மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டைகள் கூட ஆயிரக்கணக்கில் விடுபட்டிருக்கின்றன. இதனால், இவ்வகை மாற்றுத்திறனாளிகளை வைத்திருக்கக் கூடிய பாதுகாவலர்கள் தாயு மானவர் திட்டத்தில் சேர முடியாததால் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. முதல்வர் தலையீடு தேவை... இப்பிரச்சனை தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, முறையாக எந்த தகவலும் அவர்களுக்கே தெரியவில்லை. கேட்டுச் சொல்கிறோம் என்கிற பதில்தான் தொடர்ச்சியாக வருகிறது. சிறப்பான திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிற போது அதற்குண் டான விதிமுறைகள், தகுதிகள், யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்பன போன்ற விபரங்களை தெரிவித்தால் மட்டுமே முழுமை யான பலனை தரும். அதை விடுத்து அதிகாரி கள் மட்டத்திலேயே பயனாளிகளை தேர்வு செய்தால் உண்மையான பயனாளிகள் விடுபட வும் நிறைய வாய்ப்புள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகள் துறையை தன்வசம் வைத்துள்ள தமிழக முதலமைச்சர், இவ்விசயத்தில் உடனடி யாக தலையிட்டு மிகுந்த சிரமப்பட்டு பல அங்க குறைபாடுகளோடு வாழ்ந்து வருகிற மாற்றுத் திறனாளிகள் ஒருவர் கூட விடுபடாமல் இத்திட்டத்தில் இணைக்க வழிவகை செய்ய வேண்டும். கட்டுரையாளர் : மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு.