articles

img

பீகாரில் அமைச்சர்கள் பொறுப்பேற்றதில் இருந்து ஆளும்

உபதேசம்தான் 
பீகாரில் அமைச்சர்கள் பொறுப்பேற்றதில் இருந்து ஆளும் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய லோக் மஞ்ச் பிளவுபட்டு நிற்கிறது. அக்கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹா, 
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத தனது மகன் தீபக் பிரகாஷை அமைச்சராக்கினார். இதனால் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர். குடும்பத்தை அரசியலில் முன்னிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏழு தலைவர்கள் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து விட்டார்கள். நேர்மை, நியாயம் என்று மற்றவர்களுக்கு உபதேசம் சொல்லி வந்த, உபேந்திர குஷ்வாஹா, தன்னுடைய வாழ்க்கையில் அதைக் கடைப்பிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். குடும்ப அரசியலுக்கு எதிரிகள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜக, இந்த விவகாரத்தில் குஷ்வாஹா குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறது. 


மோசடிதான் 
மகாராஷ்டிர மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தல்களில் பணத்தைக் காட்டி வாக்குகளைப் பெறும் அவலம் இருப்பதாக மூத்த அரசியல்வாதி சரத் பவார் குற்றம் சாட்டியிருக்கிறார். அவர் அதோடு நிற்கவில்லை. ஆளும் கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளும், பண விநியோகம் செய்வதில் போட்டி போடுகின்றன என்கிறார். தாங்கள் வெற்றி பெற்றால்தான் வார்டுகளுக்கு நிதி ஒதுக்குவோம் என்று வெளிப்படையாகவே மேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளை எப்படி மேம்படுத்தி இருக்கிறோம் என்றெல்லாம் இவர்கள் பேசவில்லை. அதைப் பேசவும் விரும்பவில்லை. தங்களின் மோசடிகளை அம்பலப்படுத்தி விடும் என்பதால்தான் நிதி கிடைக்காது என்று மிரட்டத் தொடங்கியிருக்கிறார்கள். 


வித்தியாசம் தான் 
500 ரூபாய் நோட்டை விதைக்கும் வித்தியாசமான போராட்டத்தை ராஜஸ்தான் விவசாயி மல்லாராம் பவாரி நடத்தியிருக்கிறார். தனது விவசாய நிலத்தில் பருத்தி பயிரிடுவதற்காக 1 லட்சம் ரூபாய் வங்கிக்கடன் வாங்கியிருக்கிறார். ஆனால், பெருமழை பெய்ததால் அவருடைய நிலம் தண்ணீரில் மூழ்கியது. பயிர் நாசமாகியது. வெறும் ரூ. 4 ஆயிரம் பெறுமானமுள்ள பயிர்தான் அவருக்கு மிஞ்சியது. தனது பயிருக்கு காப்பீடு  செய்திருந்த அவர், அதற்கான தொகையையும் உரிய நேரத்தில் கட்டியிருந்தார். ஆனால், அவருக்கு இழப்பீடு எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து புகார் செய்தும் யாரும் வரவில்லை. கவனத்தை ஈர்க்க, 500 ரூபாய் நோட்டைத் தனது நிலத்தில் விதைக்கும் போராட்டத்தை நடத்தினார். தன்னுடைய பிரச்சனையோடு சங்கங்களையும் அணுகியிருக்கிறார். 


போலிதான்..! 
பாஜக ஆளும் மாநிலங்களில் போலிகளுக்குப் பஞ்சமேயில்லை. உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் நகரில் போலி தூதரகமே நடத்தி 300 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தார்கள். அதே உ.பி.யில் போலி இறுதிச்சடங்கு நடத்த முயற்சி செய்துள்ளார்கள். ஒருவருடைய பெயரில் காப்பீடு எடுத்து, அந்த நபர் இறந்துவிட்டதாக வும் கூறி பணம் வாங்குவதுதான் திட்டம். ஒரு “போலி” பிணத்தைத் தயார் செய்திருக்கிறா ர்கள். பிளாஸ்டிக்கை வைத்து பிணம் போன்ற ஏற்பாட்டைச் செய்து, மயானத்திற்குச் சென்றுள்ளனர். பிணத்தை எரிப்பவர் தூக்கிப் பார்த்துவிட்டு, “என்ன இது.. இவ்வளவு எடை குறைவா இருக்கு” என்று கேட்டபோது சரியான பதில் வரவில்லை. சந்தேகப்பட்ட அவர், காவல்துறையை அழைத்து விட்டார். அவர்கள் நிகழ்த்தியது நாடகம் என்று தெரிய வந்திருக்கிறது. இதுபோன்று இதற்கு முன்பும் நடந்திருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.