முதலாளித்துவம் என்பது வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒரு ஒழுங்குமுறை ஆயுதமாகப் (Disciplining device) பயன்படுத்தி, ஏற்கனவே பணியில் இருப்பவர்களின் ஊதியத்தைக் குறைக்கவும், அவர்களைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது.
வரிப் போர்களும் தொழில்நுட்ப மாற்றங்களும் உலகளாவிய வேலைவாய்ப்பின் நிலை என்ன?
உலகெங்கிலும் வேலைவாய்ப்பின் தன்மையானது பல பரிமாணங்களில் மாறி வருகிறது. விநியோகச் சங்கிலியில் ஏற்படும் அதிர்வுகள், திறன் சார்ந்த ஒப்பந்த முறைகள் ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், இந்த மாற்றங்கள் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக இல்லை. வளர்ந்த நாடுகளில் வேலையின்மை விகிதம் குறைந்தது போலத் தோன்றினாலும், அது உண்மையான சந்தை வளர்ச்சியால் ஏற்பட்டதல்ல. பலர் வேலை தேடுவதைக் கைவிட்டு வெளியேறியதும், வலது சாரி அரசுகளின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுமே இதற்குக் காரணம் என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) அறிக்கை.
உற்பத்தித்திறன் வளர்ச்சியும் வேலைவாய்ப்பின்மையும்
ஆசிய நாடுகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் பிராந்தியங்களில் பொருளாதார வளர்ச்சி காணப்பட்டாலும், அது வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வளர்ச்சியாக இல்லை. இது முழுக்க முழுக்க ‘உற்பத்தித்திறன்’ (Productivity) சார்ந்த வளர்ச்சியாகவே உள்ளது. அதாவது, மனித உழைப்புக்குப் பதிலாக இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ‘மூலதனச் செறிவு’ (Capital Intensive) முறையே இங்கு மேலோங்கி நிற்கிறது. இதனால் திறன் குறைந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, நடுத்தரத் திறன் சார்ந்த பணிகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். பல நாடுகளில் ‘முறைசார் தொழிலாளர்கள்’ எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுவது ஒரு மாயையே. அரசின் ஏதாவது ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்தாலே அவர் முறைசார் தொழிலாளி என வரையறைகள் தளர்த்தப்பட்டதே இந்த எண்ணிக்கை உயர்வுக்குக் காரணம். உண்மையில், 1980-களுக்குப் பிந்தைய காலத்திலிருந்தே மொத்த உற்பத்தியில் தொழிலாளர்களின் பங்கு (Workers’ share in output) தொடர்ந்து சரிந்து வருகிறது.
டிரம்ப் வரிகளும் விநியோகச் சங்கிலி பாதிப்பும்
2025-இல் உலகப் பொருளாதாரம் மந்தமடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிரம்ப் விதிக்கும் வர்த்தக வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள் உலகளாவிய விநியோகச் சங்கிலியை கடுமையாகப் பாதிக்கும். அமெரிக்கா வின் நுகர்வை நம்பி, நேரடி மற்றும் மறைமுக விநியோகச் சங்கிலியில் சுமார் 8.4 கோடி தொழிலாளர்கள் உலகெங்கிலும் உள்ளனர். இதில் பெரும்பகுதி (5.6 கோடி பேர்) ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவின் வர்த்தகக் கட்டுப்பாடுகளால், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மட்டும் எதிர்பார்த்ததை விட 70 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முதலாளித்துவத்தின் முரண்பாடு
உண்மையான முதலாளித்துவம் என்பது வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒரு ஒழுங்குமுறை ஆயுதமாகப் (Disciplining device) பயன்படுத்தி, ஏற்கனவே பணியில் இருப்பவர்களின் ஊதியத்தைக் குறைக்கவும், அவர்களைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஆனால், உற்பத்தி செய்த பொருட்களை வாங்க மக்களிடம் வருமானம் இருக்க வேண்டும் என்ற அடிப்படை விதியை அது செயலாக்க மறுக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் (2014-2024), உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 35.5% வளர்ந்துள்ளது. ஆனால் வேலைவாய்ப்பு வளர்ச்சி வெறும் 13.2% மட்டுமே. அதேசமயம் ஒரு தொழிலாளியின் உற்பத்தித்திறன் 17.9% அதிகரித்துள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி உற்பத்தியைப் பெருக்கும் முதலாளிகள், அதன் மூலம் கிடைக்கும் உபரி மதிப்பைத் தாங்களே வைத்துக்கொண்டு, வேலைவாய்ப்பைக் குறைக்கின்றனர். இதனால் தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தி குறைந்து, மொத்த ஜிடிபியில் அவர்களின் வருமானப் பங்கு தொடர்ந்து சரிகிறது.
செயற்கை நுண்ணறிவும் (AI) எதிர்காலமும்
தொழில்நுட்ப மாற்றங்களால் நடுத்தர மற்றும் உயர் திறன் சார்ந்த வேலைகளே அதிகரிக்கின்றன. குறிப்பாக, ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) தொழில்நுட்பம் நடுத்தரத் திறன் கொண்ட வேலைகளுக்கே (Medium skill segment) பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நடுத்தரத் திறன் சார்ந்த பணிகளில் 38.1% பணிகள் ஏஐ-யால் மாற்றியமைக்கப்படும் அபாயம் உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் தொழிலாளர்கள் குறைந்த திறனிலிருந்து நடுத்தரத் திறனுக்கு மாறிவரும் சூழலில், இந்தத் தொழில்நுட்பத் தாக்குதல் அவர்களை அதிகம் பாதிக்கும். சந்தை சார்ந்த தனியார் பயிற்சிகள் மூலம் மட்டுமே திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்ற நிலை உருவானால், அது ஏழை-பணக்காரர் இடைவெளியை மேலும் அதிகரிக்கும். பணம் படைத்தவர்கள் மட்டுமே உயர் திறன்களைக் கற்க முடியும் என்ற நிலை சமத்துவமின்மையை வளர்க்கும். பொதுக்கல்வி நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் நவதாராளவாதக் கொள்கைகளால் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியாது. தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப தொழிலாளர்களைத் தயார்ப்படுத்த வேண்டியது அரசின் கடமையே தவிர, அதைச் சந்தையின் கையில் ஒப்படைக்கக் கூடாது. பீப்பிள்ஸ் டெமாக்ரசி, நவ. 23 - தமிழில் சுருக்கம் : ராகினி