மனிதகுலத்திற்கு எதிரான கொடூரமான குற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
கடந்த ஒரு வாரத்தில் நடந்த பரபரப் பான நிகழ்வுகள், பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் குறித்த கேள்வியை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளன. உன்னாவின் சட்ட மன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் என்பவர் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய அசாதாரணமான வழக்கு மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வழக்கில் 2017இல் நீதிமன்றத்தில் குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்குப் பிணை வழங்கிய உத்தரவு குறித்து நாட்டின் நீதிமன்றங்கள் மீதே அதிர்ச்சியும் அவநம்பிக்கையும் ஏற்பட்டது. இயல்பாகவே இந்த அருவருப்பான நிகழ்வு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது பாலியல் வன் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது குறித்த விவாதங்களையும் மீண்டும் தூண்டி விட்டுள்ளது.
நீதியே பாதிக்கப்பட்டிருக்கிறது பாதிக்கப்பட்டவருக்காக
வழக்கை நடத்திய அம்பேத்கரிய வழக்கறிஞரான மெஹ்மூத் பிராச்சா, இந்தத் தீர்ப்பின் அதிர்ச்சியூட்டும் சமூக விளைவுகளை விவரிக்கும்போது, “நீதியே பாதிக்கப்பட்டிருக்கிறது,” என்று ஓர் ஆழமான கருத்தைக் கூறி இருக்கிறார். மேலும் அவர், “ஆசிஃபாவின் வழக்கு, ஹத்ராஸ் வழக்கு, இப்போது உன்னாவ் வழக்கு போன்ற சில வழக்குகள் ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சி யையும் உலுக்குகின்றன. ஆனால் இன்றைய இந்தி யாவில், நீதித்துறை தாமதம் என்பது மிகவும் சாதாரண மாகிவிட்டதால், நீதியே பாதிக்கப்பட்ட பொருளாகி விடுகிறது” என்றும் கூறியிருக்கிறார்.
ஒருவேளை, இந்த அச்சமூட்டும் புதிய நிகழ்வு களின் தொடர் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனக்கலவரங்களிலிருந்து தொடங்கி இருக்கலாம். பில்கிஸ் பானுவின் முக்கிய வழக்கு இந்த அருவருப்பான மற்றும் திகிலூட்டும் செயல் முறையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. கடந்த காலத்தில் பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்பட வில்லை என்பதல்ல. ஆனாலும், இதற்கெல்லாம் சமூக, அரசியல் மற்றும் நிச்சயமாக, சித்தாந்த ரீதியான ஆதரவை வழங்குவதன் மூலம், இத்தகைய குற்றங் களை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதுதான் இதன் புதிய பரிமாணமாகும். பெண்களுக்கு எதிரான பாலி யல் வன்முறைகளுக்கும், மதவாத-தலித் ஒடுக்கு முறைக்கும் இடையேயான தொடர்பு, தற்போதைய எதார்த்தத்தை இன்னும் அச்சுறுத்தலானதாக மாற்றி இருக்கிறது.
பில்கிஸ் பானு வழக்கு: வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டம்
பில்கிஸ்பானு தனக்கு நீதி கோரி நடத்திய போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வலிமையை வெளிப் படுத்தினார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகளிலிருந்து, அந்த சமயத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறைக் கொடுமைகள் குறைவாகவே பதிவாகியுள்ளன என்றும், காவல்துறை யினரால் அவை மேலும் குறைவாகவே பதிவு செய்யப் பட்டுள்ளன என்றும் தெரிவித்திருக்கின்றன. முஸ்லிம் களுக்கு எதிரான மத வன்முறை வெறியாட்டங்களின் போது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட கயவர் களுக்கு ஆதரவாகக் காவல்துறையினர் இருந்ததை நன்கு அறிந்த பெண்கள், தங்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட கயவர்கள்குறித்து காவல்துறையினரிடம் தெரிவிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தனர்.
அந்த அச்சமூட்டும் சூழலையும் மீறி, பாலியல் வன்புணர்வுக் குற்றங்களிலிருந்து தப்பிய சிலரில் பில்கிஸும் ஒருவர். அவர் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கப் போராட்டத்தை நடத்தி, சுதந்திர இந்தியாவில் மதக் கலவரங்களின் போது நடந்த இந்தக் குற்றத் திற்காக முதல் தண்டனையைப் பெற்றுத் தந்தார். முழுச் சமூகத்தையும் அவமானப்படுத்தி, மன உறு தியைக் குலைப்பதற்காகவே மதக் கலவரங்களின் போது பெண்களின் உடல்கள் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்படுகின்றன என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. ஆனால், தண்டனை வழங்கப் பட்ட போதிலும், குஜராத் அரசாங்கம் குற்றவாளி களை மன்னித்துவிட்டது. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முயற்சியால், உச்ச நீதிமன்றம் ஒரு முறையான விசாரணைக்கு வழிவகுத்தது. வழக்கை குஜராத்திற்கு வெளியே மாற்றியது. மேலும் மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் ரத்து செய்தது.
செங்கார் வழக்கும் சிபிஐ செயல்பாடும்
உன்னாவ் வழக்கு, 2002 குஜராத்தில் நடந்த மதக்கலவரத்தில் பில்கிஸ் பானு மற்றும் பல பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நினைவூட்டும் ஓர் அதிர்ச்சியூட்டும் நிகழ்வாக அமைந்தது. உன்னாவ் வழக்கு உண்மையில் சந்தே கத்திற்கு இடமில்லாத ஒரு தெளிவான வழக்காக இருந்த போதிலும், தனது சக்திவாய்ந்த தொடர்பு களைப் பயன்படுத்தி, செங்கார் காவல்துறை மற்றும் மாநில அரசாங்கத்தின் உடந்தையைப் பெற முடிந்தது. ஆதாரங்களைச் சிதைக்கும் நோக்கில், சட்ட நடவடிக்கைகளின் போது பாதிக்கப்பட்டவர் களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் கொல்ல ப்பட்டனர். இந்த கொடூரமான தண்டனைக் குறைப்பு உத்தரவை வழங்கிய தில்லி உயர் நீதிமன்றம்கூட, கருணை காட்டுவதற்கான மனுவை சிபிஐ வெளிப்படையாக எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்டது.
நாடு முழுவதும் பரவி வரும் கொந்தளிப்பைக் கருத்தில் கொண்டு, சிபிஐ தில்லி உயர் நீதிமன்றத் தின் உத்தரவுக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளா னது. சட்டத்தின் அடிப்படையிலேயே தில்லி உயர்நீதி மன்றத்தின் உத்தரவில் குறைபாடுகள் இருப்பதைக் கண்ட உச்சநீதிமன்றம், அந்தத் தண்டனைக் குறைப்புக்கு இறுதியில் தடை விதிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் செயல்பட்டது.
இந்துத்துவா தொடர்டைய குற்றவாளிகளை பாதுகாக்கும் பாஜக ஆட்சி அதிகாரம்
பெண்கள் இயக்கம் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த பல புகழ்பெற்ற ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள், இந்த கொடூரமான நிகழ்வுகள் குறித்த தங்கள் அனுபவங்களை ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றை நாம் புறக்கணித்தால், அது நமக்கே பெரும் ஆபத்தாக முடியும். புகழ்பெற்ற ஆர்வலர்கள், தலை வர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் பெண்ணியவாதி களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகளும் வெளி யீடுகளும், பெண்களுக்கு எதிரான அதிகரித்து வரும் குற்றங்களுக்கும், இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சிக்கும், ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் ஆட்சி அதிகார ஏற்றத்திற்கும் இடையே மறுக்க முடியாத தொடர்பை ஏற்படுத்தியுள்ளன. அதிகாரத்தின் செல்வாக்கே இந்துத்துவா தொடர்புடைய குற்றவாளி களுக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிப்ப தற்கான களத்தை வழங்குகிறது. மேலும் நீதி வழங்கும் செயல்முறையை முழுமையாகத் தடுக்கிறது.
எனவே, குற்றம் மட்டுமல்ல, பெரும்பாலும் கொண்டாட்டத்தின் விளிம்பில் இருக்கும் குற்றத்திற் கான பாதுகாப்பும் தான் இந்த தேசத்தின் அடித் தளத்தையே சிதைத்து வருகிறது. இந்தப் புற்று நோய் போன்ற வைரஸின் அடிப்படை சித்தாந்த வேர்களை ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும். ஆர்எஸ்எஸ்-இன் நூற்றாண்டு விழாவின் போது, அதன் தலைவர் மோகன் பகவத் உட்பட அந்த அமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள், ஆர்எஸ்எஸ் -இன் பிரிக்க முடியாத ஆணாதிக்கச் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளனர். சனாதன தர்மம் என்ற சொல்லுக்கு ஏறக்குறைய ஒத்ததாக இந்துத்துவத்தை முன்வைப்பது இந்த அடிப்படை அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது. இராமாயணம் மற்றும் மகா பாரத காலத்திலிருந்தே இந்தக் குறிப்புகள் நமது சிந்தனையில் நிலைத்து நிற்கின்றன. தனது கற்பை நிரூபிக்க அக்னிப் பரீட்சைக்கு உள்ளாக்கப்படுபவள் சீதைதான். அதேபோன்றே பொதுவெளியில் அவமானப்படுத்தப்படுபவள் திரௌபதிதான். பெண்களை அடிமைகளாக்கும் இதிகாச, புராண, வேத, மநுஸ்மிருதிகள் பெண்களைப் பற்றிய இந்த அழிக்க முடியாத இழிவுபடுத்தல், ஒருவேளை சிலுவையில் அறைதல் என்றே சொல்லலாம், வெறும் இதிகாசங்களில் மட்டு மல்ல, உண்மையான வேத மற்றும் புராண நூல் களிலும்கூட வெளிப்படுகிறது. ரிக் வேதமும் அதர்வண வேதமும் பெண்களுக்கு இல்லறத்தை யும் தாய்மையையும் கடமைகளாக விதிக்கின்றன. கணவனுக்கு அர்ப்பணிப்பு, இது அடிமைத்தனத்திற் கான ஒரு நயமான சொல், இதுவே அவர்களுக்கு முதன்மைப் பணியாகக் கூறப்படுகிறது. பகவத் கீதை, அர்த்தசாஸ்திரம், எல்லாவற்றிற்கும் மேலாக மனுஸ்மிருதி ஆகியவை ‘தூக்கம், காமம், கோபம் நேர்மையின்மை, பொறாமை மற்றும் தீய நடத்தை ஆகியவற்றை பெண்களுக்கு உரியவையாகக் கூறு கின்றன. அவர்களைக் கருணையற்றவர்கள் என்றும், விசுவாசமற்றவர்கள் என்றும், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அழைக்கின்றன. அவர் களுக்குச் சுதந்திரம் அளிக்கக்கூடாது என்றும், இல்லையெனில் அவர்கள் சமூக அமைப்பைக் குலைத்துவிடுவார்கள் என்றும், அவர்கள் நிலை யற்றவர்கள் என்றும் கூறுகின்றன. மனுஸ்மிருதி இன்னும் ஒருபடி மேலே சென்று, ஒருவன் தன் மனைவியைக் கைவிடலாம், அடமானம் வைக்கலாம் அல்லது (திரௌபதியை விற்றதைப் போல) விற்க லாம் என்று கூறுகிறது. பெண் என்பவள் ஒரு போதும் தன் கணவனை வருத்தமடையச் செய்யக் கூடாது. இத்தகைய ‘தத்துவ முத்துக்கள்’ சிவ புராணம், தேவி பாகவத புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், பாகவத புராணம், நாரத புராணம், கருட புராணம், அக்னி புராணம், மத்ஸ்ய புராணம் மற்றும் பிரம்ம புராணம் ஆகியவற்றில் நிறைந்துள்ளன. வீட்டிற்குள் முடக்கப்பட்டு, கணவ னுக்கும் குடும்பத்தின் மற்ற ஆண்களுக்கும் கீழ்ப்படி வதே கடமையாகக் கொடுக்கப்பட்டதால், பெண்கள் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதை மறந்துவிட வேண்டியதுதான்.
மதவெறி, பெண் வெறுப்பை எதிர்கொள்ளும் சவால்
இருபதாம் நூற்றாண்டில் இந்த காலத்திற்குப் பொருந்தாத பிற்போக்குத்தனங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று சுட்டிக்காட்டுவது ஒரு வெளிப்படையான உண்மையாகும். இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தங்க ளை விஸ்வகுருக்கள் என்றும், சமகால உலகில் பெரும் செல்வாக்கு கொண்டவர்கள் என்றும் கூறிக் கொண்டால், அவர்கள் இதுபோன்ற பிற்போக்குச் சிந்தனைகளிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டு, அவற்றை மறுதலிக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை. பாஜகவின் தொப்புள்கொடி ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவத்துடன் பிணைக்கப் பட்டுள்ளது. எனவே, கல்வி, சுகாதாரம், வருமானம் மற்றும் அதிகாரமளித்தல் மற்றும் சமத்துவத்திற்கான மற்ற அனைத்து வழிகள் மற்றும் வளங்களுக்கான அணுகல் ஆகியவற்றில், இந்தியாவில் பெண்கள் தொன்றுதொட்டு அனுபவித்து வரும் கட்டமைப்பு ரீதி யான ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால், தற்போதைய காலகட்டம் அவர்களை இந்த கொடூரமான மதவெறி மற்றும் பெண் வெறுப்பு உலகத்தை எதிர்கொள்ள வேண்டிய பெரிய சவாலை முன்வைக்கிறது. இந்த சவாலை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்தி களின் கூட்டு பலத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடி யும். ஆண்களும் பெண்களும் கைகோர்த்து நடந்து போராடுவதன் மூலம் மட்டுமே இது சாத்தியம். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் ஜனநாயகப் பெண்கள் இயக்கம் ஏற்கெனவே குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளது. ஜன. 5, 2026 - தமிழில்: ச.வீரமணி