இறுதிக் காட்சி முடிந்தது; அரசியல் நாடகம் தொடர்கிறது - நீதிபதி கே.சந்துரு
ஜனாதிபதி முர்மு அவர்கள் அரசியலமைப்பு சட்டம் 143(1) அடிப்படையில் உச்ச நீதி மன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் வேண்டியுள்ளார். சமீபத்தில் 14 வரைவு சட்டங்க ளில் தமிழ்நாடு ஆளுநர் கையெழுத்து இட எடுத்துக் கொண்ட தாமதம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பின்னணியில் ஜனாதிபதியின் இந்த வேண்டுகோள் வந்துள்ளதால் சிலர் ஆச்சரிய மடைந்துள்ளனர்.
ஆளுநரின் ஆணவம்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து ஒன்றிய அரசிடம் ஒருவித மயான அமைதி நிலவியது. முதல் எதிர்வினை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரிடமி ருந்து வந்தது. நாடாளுமன்றம்தான் உச்சபட்ச அதிகா ரம் படைத்தது எனவும் நீதித்துறை (சட்டங்களில் கையெழுத்து போடுவது குறித்து) தனது கால அட்ட வணையை திணிக்கவோ அல்லது ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களின் அதிகாரத்தை பறித்துக் கொள்ளவோ முடியாது எனவும் அவர் கூறினார். இந்த தீர்ப்பின் மூலம் மிகவும் நேரடியாக பாதிக்கப்பட்டது தமிழ்நாடு ஆளுநர் ரவிதான்! ஆனால் அவர் “அமைதி முகமூடி” மூலம் தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்பது போல இருந்தார். தமிழ்நாட்டின் பல பல்கலைக்கழ கங்களின் வேந்தர் பதவியை அவரிடமிருந்து முதல்வர் ஸ்டாலின் பறித்த பொழுதும் ஒன்றுமே நடக்காதது போல இருந்தார். அதே சமயத்தில் ஒருவித ஆணவத்தையும் அவர் வெளிப்படுத்தினார். தனது வேந்தர் பதவி பறிக்கப்பட்ட அதே பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தை உதகையில் அவர் கூட்டினார். அந்த கூட்டத்து க்கு தன்கரை வரவழைத்து நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து “போர்ப் பரணியை” ஒலிக்கச் செய்தார். பொதுவாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அதிருப்தி ஏற் பட்டால் மறு ஆய்வுக்கு (Review) விண்ணப்பிப்பார் கள். ஏனெனில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அதற்கு மேலே எந்த நீதிமன்ற மும் இல்லை. தனது தீர்ப்புக்கு மறுபரிசீலனை கோரும் இன்னொரு வழிமுறையையும் நீதிமன்றம் உரு வாக்கியுள்ளது. சில அபூர்வமான வழக்குகளில் சீராய்வு மனுவை (Curative petition) தாக்கல் செய்யவும் வழி உண்டு. ஆனால் இந்த வழிமுறையை பின்பற்ற இரு முக்கிய மூத்த வழக்கறிஞர்களிடம் இதற்கான நியாயத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள் பெறப் பட வேண்டும். அங்குதான் அவர்களுக்கு பிரச்சனை இருந்திருக்கக் கூடும். அத்தகைய மூத்த வழக்கறி ஞர்கள் எவரும் கிடைக்காமல் போயிருக்கலாம். தன்கரின் “கூக் குரலை” நோக்கும் பொழுது இன்னொரு வழிமுறையும் உண்டு. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையை மறுதலிக்க புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரலாம். ஆனால் இந்த பிரச்சனையின் முக்கியத்துவம் காரணமாக பல விவாதங்களை அது விளைவிக்கும். எனவே கடந்த 5 வாரங்களாக “ஆபரேசன் சிந்தூர்” குறித்து கவனம் செலுத்திய அதே வேளையில் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து குறைந்த அளவிலான விவாதங்களை விளைவிக்கும் உபாயமாக, நீதிமன்றத்திடமே ஜனாதிபதி விளக்கம் கேட்கும் வழிமுறையை தேர்ந்தெடுத்துள்ளனர். கேரளாவின் வழக்கு அரசியலமைப்பு சட்டத்தின் 74ஆவது திருத்தத் தின் அடிப்படையில் ஜனாதிபதி, அரசு நிர்வாகத்தின் பெயரளவுக்கான தலைமை மட்டும்தான் என்பதும் அமைச்சரவையின் அறிவுறுத்தல் அடிப்படையிலேயே அவர் செயல்பட வேண்டும் எனவும் முடிவான பிறகு நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மூலம் விளக்கம் கேட்பது உண்மையிலேயே யார் எனில் பிரதமர் நரேந்திர மோடிதான்! பல அரசியலமைப்பு சட்ட நிபுணர்கள் அரசின் கைகளில் உள்ளனர். அவர்களில் மிக முக்கிய அரசின் சட்ட நிபுணராக உள்ள அட்டர்னி ஜெனரலும் அடங்குவார். அவர் அரசியல் சட்டத்தின் 76(2) பிரிவின் அடிப்படையில் நியமிக்கப்படுபவர். ஒன்றிய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் சட்ட பிரச்சனைகளில் ஆலோசனை யும் அறிவுறுத்தல்களையும் வழங்க கடமைப்பட்டவர் அவர். அவரின் கருத்தை ஏன் இவர்கள் நாடவில்லை என்பது தெளிவற்று உள்ளது. தமிழ்நாடு குறித்து நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் இதுவரை நடக்கும் நிகழ்வுகளை உற்று நோக்கி னால் திரைக்குப் பின்னால் ஒன்றிய அரசு ஒரு கபட விளையாட்டை அரங்கேற்ற முயல்வதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு வழக்கின் தீர்ப்பு கேரளா அரசாங்கத்தின் வழக்கிற்கும் பொருந்தும் என பிரபல அரசியல் சட்ட நிபுணர் கே.கே.வேணுகோபால் கேரளாவின் வழக்கை திரும்பப்பெற முயன்ற பொழுது ஒன்றிய அரசு ஆட்சே பித்தது. தமிழ்நாடு வழக்கும்
கேரளாவின் வழக்கும்
ஒன்றல்ல என்று கூறியது. இதுதான் உண்மை எனில் ஒன்றிய அரசு வழக்கை வாதிட்டிருக்கலாம்; அல்லது கேரளாவின் வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அவர்களின் கபட விளையாட்டு பல்வேறு கூறுகளை கொண்டதாகத் தெரிகிறது. இந்த பிரச்சனையின் சட்ட விவாதங்களை கொதிநிலையில் வைத்துக் கொண்டே மிகவும் பாதகம் குறைவான ஒரு சட்ட உபாயத்தை, அதாவது ஜனாதிபதி நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கும் வழிமுறையை கடைப்பிடித்துள்ளனர்.
மூன்று சாத்தியமான பதில்கள்
ஜனாதிபதியின் விளக்கம் கேட்பு பற்றிய வழிமுறை களை அறிந்தவர்களுக்கு நீதிமன்றம் முன்வைக்கும் மூன்று சாத்தியமான பதில்களில் ஏதாவது ஒன்று இருக்க இயலும் என்பது அறிந்த ஒன்றுதான். நீதி மன்றம் தனது கருத்தை தர மறுக்கலாம். நீதிமன்றம் ஒரு கருத்தை தந்தாலும் அது ஜனாதிபதியை (அதாவது அமைச்சரவையை) கட்டுப்படுத்தாது. நீதி மன்றத்தின் கருத்து வெறும் கருத்தாகவே இருக்கும். அதனை எவரும் அமலாக்க இயலாது. உச்ச நீதி மன்றம் அரசியல் சட்டம் 141ஆவது பிரிவின்படி பிறப்பிக் கப்பட்ட சட்டங்கள் மட்டுமே கீழமை நீதிமன்றங்கள் உட்பட அனைவரையும் கட்டுப்படுத்தும். அல்லது நீதி மன்றம் கூறும் கருத்து அரசுக்கு கசப்பானதாக இருக்க வும் வாய்ப்பு உள்ளது. இந்த மூன்று சூழல்களிலுமே விவாதத்தை முடிவில்லாமல் கொதி நிலையில் வைத்திருக்க இயலும். அரசியலமைப்புச் சட்டம் அமலான இந்த 75 ஆண்டுகளில் ஜனாதிபதி மற்றும் ஆளுநர்கள் அதிகார வரம்புகள் குறித்து ஏராளமான வழக்குகள் நடந்துள் ளன. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானகர மான வழக்கு எனில் 1974ஆம் ஆண்டின் ஷம்ஷேர் சிங் வழக்குதான். இந்த வழக்கில்தான் ஆளுநர்கள் அமைச்சரவையின் அறிவுறுத்தல் அடிப்படையில் தான் செயல்பட வேண்டும் எனவும் தங்களை பிரிட்ட னின் சக்கரவர்த்தி என்றோ அல்லது அமெரிக்காவின் ஜனாதிபதி என்றோ நினைத்துக் கொள்ளக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் இடித்துரைத்தது. ஒரு மாவட்ட நீதிபதியை அமைச்சரவையின் கருத்து கேட்காம லேயே ஆளுநர் பணி நீக்கம் செய்ததை ரத்து செய்து மீண்டும் பிரச்சனையை ஆளுநருக்கு அல்லது அரசாங் கத்துக்கு அனுப்பாமல் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றம் தானே தீர்ப்பு மூலம் நிவார ணத்தை நேரடியாக அமலாக்கியது. மேலும் இந்த வழக்கில்தான் நீதிமன்றம் “பயனற்ற காலம் தாழ்த்தும் வழிமுறைகள் கோட்பாடை” எதிர் கொண்டது.
அங்கீகரிக்கும் உரிமை மட்டுமே!
ஷம்ஷேர் சிங் வழக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 163ஆவது பிரிவு பற்றியும் 200 மற்றும் 201ஆவது பிரிவுகளின் கீழ் ஆளுநர் சட்டங்களை அங்கீகரிப்பது குறித்தும் மிகத்தெளிவாக தீர்ப்பு வழங்கியது: ஆளுநர் ஒரு சட்டம் சரியா தவறா என கருத்து வழங்கும் நடுவர் அல்ல; சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கும் உரிமை மட்டுமே நடைமுறைப்படுத்த கடமைப்பட்டவர். சட்ட மன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றி ஆளுநர் தனது ஆட்சேபணை மூலம் திருப்பி அனுப்பிய பின்னர் சட்ட மன்றம் மீண்டும் அதே சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் அவர் அந்த சட்டத்தை அங்கீகரித்தே தீர வேண்டும். அவருக்கு வேறு எந்த விருப்புரிமையும் கிடையாது. ஆனால் எந்த காலஅவகா சத்துக்குள் ஆளுநர் அங்கீகாரம் வழங்க வேண்டும்? எவ்வளவு கால அவகாசம் ஆளுநர் எடுத்துக் கொள்ளலாம்?
கையெழுத்துக்கு கால அவகாசம் என்ன?
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பிகள் இந்த கால அவகாசத்தை “எவ்வளவு விரைவாக சாத்தி யமோ அவ்வளவு விரைவாக” என மென்மையாக வரை யறுத்தனர். ஆனால் ஆளுநர்கள் இதனை எல்லை யின்றி காலதாமதம் செய்வதற்கு ஒரு லைசென்சாக தவறாகப் பயன்படுத்தினால் நீதித்துறை முன் என்ன சட்ட உதவி சாத்தியம்? எனவே எவ்வித நியாயமு மின்றி காலதாமதம் ஆன சட்டங்களுக்கு உடனடியாக அங்கீகாரம் அளிக்குமாறு நீதி மன்றங்கள் சொல்கின் றன. ஆர்.என்.ரவி. பிரச்சனையில் இந்த கால தாமதம் என்பது இரண்டு ஆண்டுகளாக நீண்டன. எனவே நீதி மன்றம் “பயனற்ற காலம் தாழ்த்தும் வழிமுறைகள் கோட்பாடை” மீண்டும் எதிர்கொண்டு நேரடியாக சட்டங்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது. “எவ்வளவு விரைவாக சாத்தியமோ அவ்வளவு விரைவாக” என்பது குறித்து ஜனாதிபதி நீதிமன்றத்தி டம் விளக்கம் கேட்க வேண்டிய தேவை எழவில்லை. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின்படி அங்கு ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் கருத்து கேட்கப்படுகிறது. நீதிமன் றத்தின் கருத்துக்கு பின்னர் அந்த சட்டம் நிறைவேற் றப்பட்டால் எவரும் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியாது. ஆனால் இந்தியாவில் எந்த ஒரு சட்டத்தை யும் எவர் ஒருவரும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு மூலம் கேள்வி கேட்க முடியும். நீதிமன்றத்தின் கருத்து அரசை கட்டுப்படுத்தாது என இருக்கும் பொழுது இந்த தேவையற்ற ஆடம்பர மான ஒரு வழிமுறையை அரசு கைக் கொள்கிறது என்பது துரதிர்ஷ்டவசமானது. சில சட்ட பண்டி தர்களின் சட்டைப் பைகளை நிரப்புவது என்பதுதான் நோக்கமா என்பது தெரியவில்லை. அதுவும் தேசம் ஒரு நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய நடவடிக்கைகள் தேவையா என்பது கேள்விக்குரியது.
ஆளுநரின் எல்லையற்ற தாமதத்தை அனுமதிக்கக் கூடாது!
1974ஆம் ஆண்டு ஷம்ஷேர் வழக்கிலிருந்து 2025 தமிழ்நாடு வழக்கு வரை ஏராளமான வழக்குகளில் இத்தகைய பிரச்சனைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றுள்ளன. தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இப்பொழுது இது குறித்து உச்ச நீதிமன்றத்திடம் ஒரு விளக்கம் கேட்பது தேவையற்றது. நீதிமன்றம் அப்ப டியே ஒரு கருத்தைச் சொன்னாலும் அதனை மாநிலங் கள் ஏற்குமா என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. “எவ்வளவு விரைவாக சாத்தியமோ அவ்வளவு விரை வாக” என்பதற்கு கால அவகாசம் இரு மாதங்கள் எனில், அதுவே அரசியலமைப்புச் சட்டம் 200ஆவது பிரிவுக்கு மிக தாராளமான விளக்கம் தருகிறோம் என பொருள். மிகவும் சிக்கலான “ஆபரேசன் சிந்தூர்” குறித்து மிக குறுகிய காலத்துக்குள் முடிவு எடுக்க முடிகிற நமக்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு சட்டமன்றம் நிறை வேற்றிய சட்டத்தை ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஓர் ஆளுநர் தனது அரசியல் தேவைக்காக சட்டத்தில் கையெழுத்து போடாமல் அரசியல் கால்பந்து விளையாடி எல்லையற்ற தாமதம் செய்ய அனுமதிக்கப்படக் கூடாது. சட்ட உதவி சேவை அமைப்பு என்பது ஏழைகளுக்கு சட்ட சேவை செய்ய உருவாக்கப்பட்ட ஒன்று. மிகவும் சொகுசாக ஆடம்பரமான மாளிகையில் வசிப்ப வர்கள் நீதிமன்றத்திடம் இலவச விளக்கம் பெற அல்ல இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம்! எப்படியிருந்தாலும் அத்தகைய விளக்கம் எவரையும் கட்டுப்படுத்தப் போவதும் இல்லை. டைம்ஸ் ஆப் இந்தியா (19.5.25) தமிழில்: அ.அன்வர் உசேன்