அரசியலமைப்புச் சட்டமும் உத்திரமேரூர் உருட்டும்
நவம்பர் 26 அரசியலமைப்புச் சட்ட தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 1949ஆம் ஆண்டு இந்திய திரு நாட்டின் அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினம் இது. இதையொட்டி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் நாள் இது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் நமது அரசி யலமைப்பை உருவாக்கியவர்கள், கற்பனை செய்த கனவுகளை நிறைவேற்றுவது நமது பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளார். அரசியல் சட்டத்தின் முகவுரை வாசிக்கப் பட்டுள்ளது. அதில் இந்தியா ஒரு மதச்சார் பற்ற, ஜனநாயக, சோசலிசக் குடியரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை வெறும் வார்த்தை கள் அல்ல. மதச்சார்பற்ற இந்தியாவின் விழுமி யங்கள். உண்மையிலேயே இந்த வார்த்தை களை பிரதமர் நரேந்திர மோடி பின்பற்றுகிறாரா என்று கேள்வி எழுப்பினால் இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும். நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் அரசி யலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் கனவுகளை நிறைவேற்றுவோம் என்கிறார். ஆனால் இந்நிகழ்வுக்கு முதல் நாள் அயோத்தி யில் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட இடத்தில் கட்டப் பட்டுள்ள ராமர் கோவிலில் காவிக் கொடியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தோடு இணைந்து ஏற்றி விட்டு இது வெறும் கொடி அல்ல, 500 ஆண்டு கால கனவு என்கிறார். இந்தியாவில் சில ஆயிரம் ஆண்டு கால வரலாறு கொண்ட கோவில்கள் நிரம்ப உண்டு. ஆனால் அயோத்தி ராமர் கோவிலை மட்டும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி குறிப்பிடுகிறார். அதற்கு காரணம் உண்டு. அரசியல் சட்டத்தின் மீது ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு நம்பிக்கை இல்லை. மாறாக, இந்துத்துவா நாடாக இந்தியாவை மாற்ற முயல்கிறார்கள். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சுதந்திர தின விழாவில் உரையாற்றும் போது அயோத்தி போல காசி, மதுரா போன்ற இடங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களையும் விட்டுக் கொடுத்தால், இஸ்லாமியர்களோடு இணைந்து வாழலாம் என்று பேசுகிறார். தங்களது நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாகவே பிரதமர் மோடி காவிக் கொடியை பறக்கவிட்டுள்ளார். அயோத்தி நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி தமிழ்நாட்டில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். குடவோலை முறை மூலம் மக்கள் எவ்வாறு அரசை தேர்ந்தெடுத்த னர் என்பதை உத்திரமேரூர் கல்வெட்டு விளக்கு கிறது என்கிறார். உத்திரமேரூர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி புல்லரித்துப் பேசுவது இது முதன் முறை அல்ல. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உத்திரமேரூர் கல்வெட்டை மேற்கோள் காட்டுகிறார். குடவோலை முறை உயரியதா? உண்மையில் உத்திரமேரூர் பாணியிலான ஜனநாயகத்தை ஆர்எஸ்எஸ் பரிவாரம் மீண்டும் உருவாக்க முயல்கிறது. கி.பி. 10ஆம் நூற்றாண்டின் முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் உத்திரமேரூர் வைகுண்டப்பெருமாள் கோவிலில் கிடைக்கப்பெற்ற உத்திரமேரூர் கல்வெட்டு குடவோலை முறை பற்றி பேசுகிறது. இன்றைக்கு உள்ள அனைவருக்குமான ஜனநாயகத்துடன் இதை ஒப்பிடுவது பொருத்த மல்ல. உத்திரமேரூரில் அன்றைக்கு இயங்கிய பல்வேறு வாரியங்களின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்படுவதற்கான முறை இது. நிலம் வைத்திருப்பவர்கள், வேத சாஸ்திரத்தின் வல்லுநர்கள் மட்டுமே வாரிய உறுப்பினர்களாக இருக்க முடியும். அன்றைக்கு பிராமணர்கள் மட்டுமே வேத சாஸ்திரம் படிக்க உரிமை கொண்டவர்கள். பல்வேறு பெயர்களில் அவர்களிடமே நிலம் குவிந்திருந்தது. மொத்தத் தில் பிராமணர்கள் மட்டுமே பங்கேற்ற ஒரு தேர்தல் முறை இது. குறிப்பாக பெண்கள் இந்த குடவோலை முறையில் பங்கேற்க முடியாது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் பேராசிரி யர் க.அ.மணிக்குமார் கூறுவது கவனம் கொள்ளத் தக்கது: “சொத்துரிமை கொண்ட, வேதங்களை கற்றறிந்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வோ அல்லது வாக்களிக்கவோ முடியும். பெண் களுக்கு வாக்குரிமை கிடையாது. தேர்தலில் போட்டியிடவும் முடியாது. ஆக பெரும்பான்மை யான மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பங்கேற்கவோ தங்கள் கருத்துக்களை கூறவோ உரிமை இல்லை”. இப்படி இருக்க குடவோலை முறை காலத்திற்கு இந்தியாவை மீண்டும் இழுத்துச் செல்ல முயல்கிறார்களோ என்கிற கேள்விதான் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் என்ற ‘திருப்பணி’ ஏற்படுத்துகிறது. 11ஆம் நூற்றாண்டில் சித்திரமேழி பெரிய நாட்டார் சபையை தேர்வு செய்ய நடத்தப்பட்ட குடவோலை முறையில் வேளாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் அன்றைக்கு குடங்களை உருட்டி யவர்கள் உயர்சாதியினர் என்று தங்களை கூறிக் கொண்டவர்கள் மட்டுமே. அதை ஒரு வர லாறாகக் கொண்டு உரிய பாடத்தைப் பெறலாமே அன்றி அந்தக் குடத்தை இப்போது உருட்டுவது பொருத்தமல்ல. இந்திய ஜனநாயகத்தின் கருவறையாக விளங்குகிற நாடாளுமன்ற திறப்புவிழாவில் ராஜராஜசோழன் காலத்து செங்கோல் என்று ஒரு உருட்டு வேலை நடந்தது. உண்மையில் அந்த செங்கோல் உம்மிடி பங்காரு பாத்திரக்கடையில் வாங்கப்பட்டது என்பது பின்னர் தெளிவானது. இந்திய நாட்டில் பெண்களுக்கு முழுமை யான வாக்குரிமை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் 1950இல் நடைமுறைக்கு வந்த முதல் பொதுத் தேர்தலின் போதுதான் கிடைத்தது. ஆனால் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளை கடைப்பிடிக்கும் பொழுதில் பெண்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் வாக்குரிமை மறுத்த முடியாட்சிக் கால பெருமை களை பிரதமர் பேசுவது இயல்பானதல்ல. அவர்கள் ‘மனதிற்குள் இருக்கும் அகண்ட கனவின்’ இருண்ட பகுதி இது.