ஊக வணிகம், வரி மிரட்டல்: உழைக்கும் மக்களே பலிகடா!
“நிதியை வெளியே கொண்டு செல்லும்போது ரூபாய் மதிப்பு சரிகிறது என்றால், நிதி உள்ளே வரும்போது (Inflow) ரூபாய் மதிப்பு உயர வேண்டும்தானே? ஆனால் அது நடப்பதில்லை. இது ஒரு சார்பான ஆட்டம்”
பொருட்களைப் பதுக்கி வைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் ‘ஊக வணிகம்’ (Speculation) உழைக்கும் மக்களை எப்போதுமே வஞ்சித்து வந்துள்ளது. 1943-இல் வங்கப் பஞ்சத்தின் போது 30 லட்சம் மக்கள் உயிரிழக்கக் காரணமாக இருந்தது உணவு தானியப் பற்றாக்குறை மட்டுமல்ல, லாபவெறி கொண்ட பதுக்கல்காரர்களும்தான் என்பது வரலாறு. ஆனால், இன்றைய நவதாராளவாத ஆட்சியில் இந்தச் சுரண்டல் இன்னும் நுட்பமாகிவிட்டது. இப்போது ஊக வணிகம் என்பது பொருட்களைத் தாண்டி, ‘நாணயச் சந்தை’ (Currency Market) வரை விரிவடைந்துள்ளது.
நவதாராளவாதமும் பணவீக்கமும்
நவதாராளவாதக் கொள்கையின் கீழ், மூலதனம் எல்லை தாண்டிச் செல்வது அனுமதிக்கப்படுகிறது. சர்வதேச ஊக வணிகர்கள் தங்கள் நிதியை இந்தியாவிலிருந்து டாலராக வெளியேற்றும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறது. இது இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் (குறிப்பாக கச்சா எண்ணெய்) விலையை உயர்த்துகிறது. இந்த ‘செலவு உந்துதல் பணவீக்கம்’ (Cost-push inflation) சந்தையில் எல்லாப் பொருட்களின் விலையையும் உயர்த்துகிறது. ஆனால், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தொழிலாளர்களின் ஊதியம் உயர்வதில்லை. விளைவு? உழைக்கும் மக்களின் உண்மையான வருமானம் (Real Income) குறைகிறது. சுருக்கமாகச் சொன்னால், கோடிக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் சர்வதேச ஊக வணிகர்களின் கைகளில் சிக்கிக்கொள்கிறது.
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும் புள்ளிவிவரமும்
நிதியை வெளியே கொண்டு செல்லும்போது ரூபாய் மதிப்பு சரிகிறது என்றால், நிதி உள்ளே வரும்போது (Inflow) ரூபாய் மதிப்பு உயர வேண்டும்தானே? ஆனால் அது நடப்பதில்லை. இது ஒரு சார்பான ஆட்டம். அந்நிய நிதி உள்ளே வரும்போது, ரூபாய் மதிப்பை உயரவிட்டால் ஏற்றுமதி பாதிக்கும் என்று கூறி ரிசர்வ் வங்கி டாலரை வாங்கி இருப்பில் வைக்கிறது. ஆனால் நிதி வெளியேறும்போது, கையிருப்பு கரையும் என்ற பயத்தில் ரூபாய் மதிப்பைச் சரிவடைய அனுமதிக்கிறது. இதற்கான நேரடிச் சான்று இதோ: 1990-இல் தாராளமயமாக்கலுக்கு முன்பு ஒரு டாலரின் மதிப்பு 17.50 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று (நவம்பர் 2025) அது 88.50 ரூபாயாகச் சரிந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்தைய 43 ஆண்டுகளில் வெறும் 33% சரிந்த ரூபாய், நவதாராளவாத காலத்தில் 400% மேல் வீழ்ச்சியடைந்துள்ளது.
டிரம்ப்பின் மிரட்டலும் மோடி அரசின் சரணாகதியும்
ஏற்கெனவே நலிந்துபோன இந்தியப் பொருளாதாரத்தின் மீது அடுத்த தாக்குதலாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ‘வரி மிரட்டல்’ வந்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகளை மீறி இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதைக் காரணமாகக் காட்டி, டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப் போவதாக மிரட்டுகிறார். முதுகெலும்பற்ற மோடி அரசு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கத் துணிவின்றி, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. பாதிக்கப்படப்போவது யார்?
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது இந்திய உழைக்கும் மக்களை இரண்டு வழிகளில் தாக்கும்:.
ரஷ்யா அளித்து வந்த மலிவு விலை எண்ணெய் நின்றுபோய், சந்தையில் அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். 2. உலகச் சந்தையிலிருந்து ரஷ்யா ஒதுக்கப்படும்போது, எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டு சர்வதேச விலையே உயரும். ஐரோப்பா ஏற்கெனவே அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு ரஷ்ய எரிவாயுவைப் புறக்கணித்துவிட்டு, அதிக விலை கொடுத்து அமெரிக்க எரிசக்தியை வாங்கியதால் ஜெர்மனி போன்ற நாடுகள் தொழில் அழிவைச் (De-industrialization) சந்தித்து வருகின்றன. இப்போது இந்தியாவையும் அதே “பொருளாதாரத் தற்கொலைக்கு” அமெரிக்கா தள்ளுகிறது. தன்னுடைய அதிக விலை எண்ணெய்யை விற்கவும், சந்தையை விரிவுபடுத்தவும் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களைப் பலிகடா ஆக்குவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆணவமாகும். அந்த ஏகாதிபத்திய எஜமானர்களைத் திருப்திப்படுத்த, சொந்த நாட்டு உழைக்கும் மக்களின் நலனைப் பலிகொடுப்பது மோடி அரசின் கையாலாகாத்தனமாகும். இதுவே இன்றைய இந்தியாவின் நிலை. பீப்பிள்ஸ் டெமாக்ரசி, நவ. 23 - தமிழில் சுருக்கம் : ராகினி
