துடைப்பம்
தொண்டு செய்யவே துடைப்பம் பூமியில் வந்து பிறந்ததுவே. கண்டு கொள்வீர் அதன் தொண்டுக்குப் பரிசு கழிவறைக் குடியிருப்பே. வீட்டுத் துடைப்பம் ; கழிவறைத் துடைப்பம் ; தெருக்கூட் டும் துடைப்பம். ஆண்டவன் போல அவதாரம் பல துடைப்பமு மே எடுக்கும்! தேகம் தேய்ந்து கட்டைத் துடைப்பம் குட்டைத் துடைப்பமாகும். போகி நெருப்பு “ஜோதி”யில் கலந் தொரு நந்த னாரும்ஆகும் துடைப்பத் துக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுதல் தவறல்ல. தொண்டன் தோளுக்கு மாலை சூட்டுதல் போல் இது ; வேறல்ல! அவலட்சணமாய் காட்சி தருவது மட்டும் அல்ல அது. மயிலிறகாலும் துடைப்பம் செய்த சமணரின் கதை உளது! கட்டைச் சந்தனம் தேய்ந்து தேய்ந்து வாசனை யைக் கொடுக்கும். கட்டைத் துடைப்பம் தேய்ந்து தேய்ந்து தூய்மையி னைக் கொடுக்கும். ஜொலிக்கும் தோடு ஏழையின் காதில் தொங்க மறுத்தாலும் துடைப்பக் குச்சி ஏழைப் பெண்ணின் காதுக்கு அணியாகும். உடலை விட்டு உயிரைப் பிரித்தால் சவமே மிஞ்சுவது. அறையை விட்டு துடைப்பம் பிரிந்தால் அழுக்கே எஞ்சுவது. தூய்மைப் பணியும் வாய்மைப் பணி;அதைச் செய்பவர் புவிக்குநகை. துடைப்பக் குச்சியும் பத்திக் குச்சி தான்! இரண்டும் ஒரேவகை! உழைப்பவரை மிகத் தாழ்ந்தவராக எண்ணுவ தே வழக்கம். உண்மையில் இந்தக் கொடும்பழக் கம்துடைப் பத்தையும் அவமதிக்கும். விளக்கு என்பது இருட்டைத் துலக்கும்; தருவார் மரியாதை. விளக்குமாறும் அழுக்கைத் துலக்கும்; ஏன்அவ மரியாதை? துடைப்பத்தை விடக் கேவலமாக தூய்மைப் பணியாளர் நடத்தப் படுவத னால்துடைப் பங்கள் சொரிந்தன வேகண்ணீர்! ^^^^^^ உலகம் யாவும் உறக்கம் கொண்ட ஒரு நாள் இரவினிலே புவியின் துடைப்பம் அனைத்தும் சேர்ந்து கண்டன ஒரு கனவே! கோடி கோடி துடைப்பம் கூடிஓர் பெருந்துடைப் பம்ஆகி விண்ணை நோக்கி விரைந்திட; அதை வர வேற்கும் வான் வீதி! சூனியக்காரி பறக்கும் வாகனம் அல்ல இந்த துடைப்பம்! ஜோதி மயமாய் வால்நட்சத் திரமாய் நூதன வடிவெடுக்கும்! அண்ட கோளத்தை அலங்கரிக்கின்ற வால் நட்சத் திரத் துடைப்பம்! அதன் மேல் தேவதை போல்பார் எங்கள் குப்பைக் காரி உருவம்! வைரப் புதையலாய் இறைந்து கிடந்தன வான்விண் மீனின்இனம். வால்நட் சத்திரத் துடைப்பம் அவைகளை கூட்டிக் குவித்து வரும்! மேக மெத்தையே வால்நட் சத்திரம் துயில்கொள் கிறபடுக்கை. சந்திரன் என்கிற சந்தனக் கிண்ணத்தில் எடுக்கும் நறுமணத்தை! மண்ணில் கிட்டாத மரியாதை பார் விண்ணில் கிட்டியது. துடைப்பத் துக்கும் துப்புர வாளர்க்கும் சொர்க்கம் எட்டியது! ^^^^^^ காலை விடிந்தது; கனவு கலைந்தது; மூலையில் துடைப்பம் பார். சாலையில் தங்கள் துடைப்பங்க ளுடனே தூய்மைப் பணி மகளிர். தீபாவளிக்குத் தெருவினர் தருகிற இனாம் கா சுகள் தானே தெருமகள் அந்த திருமகள் பெருகிற வைரம் என்பேனே! துடைப்பம் காணுது தேவதையாக தூய்மைப் பணிமகளை. இடக்கு பேசும் மனிதரும் என்று மதித்திடு வார்அவளை? விளக்குமாறு எதைப்பார்ப் பினும்வால் நட்சத் திர நினைவே எனக்குத் தோன்றும்! இதுகவிக் கனவு; இல்லை மனப்பிறழ்வே!