articles

கொடிக் கம்பங்களை அகற்ற தடை தொடர்கிறது!

கொடிக் கம்பங்களை அகற்ற தடை தொடர்கிறது! ஆக.12க்குள் நிபந்தனைகள், விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 6 - தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இந்த வழக்கில் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளதால், வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், மறு உத்தரவு வரும் வரை கொடிக் கம்பங்களை அகற்றக் கூடாது என்ற தங்களின் முந்தைய உத்தரவு தொடரும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 3 நீதிபதிகள் அமர்வு முன்னதாக, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஆர். விஜயகுமார், எஸ். சௌந்தர் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை சம்பந்தப்பட்ட முக்கிய வழக்கு என்று குறிப்பிடப்பட்டது. பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமையின் முக்கிய அம்சமாக கட்சிகளின் கொள்கைகளை வெளிப்படுத்துவதில் கொடிக் கம்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று வாதிடப்பட்டது. புதனன்று (ஆகஸ்ட் 6) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தரப்பில், மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர். பிரசாத், வழக்குரைஞர் திருமூர்த்தி உள்ளிட்டோர் ஆஜராகி, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையின்படி சங்கம் வைக்கும் உரிமை இருக்கும் போது, அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு கொடியும், கம்பங்களும் மிகவும் முக்கியமானவை என்று வாதிட்டனர். இதையடுத்து, தனி நீதிபதி அளித்த உத்தரவிலிருந்து தாங்கள் மாறுபடுவதாகத் தெரிவித்த 3 நீதிபதிகள் அமர்வு, நிரந்தரமான தடை கூடாது என்பதால், கொடிக் கம்பங்கள் விவகாரத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தினர். அத்துடன், அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று கூறிய அவர்கள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.