இனி வரும் காலத்தின் நிகழ்ச்சி நிரல்: ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம்!
மக்கள் மத்தியில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு இல்லை என்றும், அது பற்றிய புரிதல் அரசியல் களத்தில் இருப்பவர்க ளுக்கு இல்லை என்றும் இடதுசாரி முகாமில் இருப்ப வர்களே சில நேரம் ஆதங்கப்படுவதுண்டு. ஆனால் இன்றைய நடப்புகள், குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி அடுத்த டுத்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், சமீபத்திய எச் 1-பி (H1-B) விசா கட்டண உயர்வு நடவடிக்கை உள்பட, மக்களை ஏகாதிபத்திய எதிர்ப்பை நோக்கி மேலும் நகர்த்துகின்றன. இந்த உணர்வுகளை நெறிப்படுத்தி ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டக் கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கு சாதகமான சூழல் இன்று உள்ளது.
ஏகாதிபத்தியத்தின் இயல்புகள்: லெனினின் பார்வையில்...
முதலாளித்துவத்தின் வளர்ச்சி ஒரு சமூக பொரு ளாதார முறைமையாக உச்ச கட்டத்தை எட்டியுள்ளது - இது ஏகாதிபத்தியம். லெனின் தனது புகழ்பெற்ற “ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” நூலின் ஏழாவது அத்தியாயத்தில் ஏகாதிபத்தியத்தின் ஐந்து அடிப்படை இயல்புகளை வரையறுத்தார். முதலாவதாக, உற்பத்தியும் மூலதனமும் ஒன்று குவியும் நிலை வளர்ந்து, ஏகபோகங்கள் உருவா கின்றன. இவை பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக வளர்கின்றன. இரண்டாவதாக, வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்று சேர்கின்றது. இந்த ‘நிதி மூலதனம்’ அடிப்படையில் நிதியாதிக்கக் கும்பல் உருவாகிறது. மூன்றாவதாக, அதுவரை முக்கியத்துவம் கொண்ட சரக்கு ஏற்றுமதி என்ற நிலையிலிருந்து மாறி மூலதன ஏற்றுமதி முக்கியத்துவம் பெறுகிறது. நான்காவதாக, சர்வதேச அளவில் ஏகபோக முதலாளித்துவக் கூட்டு கள் உருவாகின்றன; அவை உலகையே தங்களுக் குள் பங்கு போட்டுக் கொள்கின்றன. ஐந்தாவதாக, முன்னணி முதலாளித்துவ அரசுகள் உலகப் பரப்பினையே தங்களுக்குள் பங்குபோட்டுக் கொள்கின்றன. இந்த ஐந்து இயல்புகளும் இன்றைக்கும் நீடிக்கின்றன. இன்றைய சூழலில் இந்த அம்சங்கள் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளன என்பதை புரிந்து கொள்வது அவசியம்.
பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் ஏகபோக ஆதிக்கம்
1980-லிருந்து 2008 வரை உலக பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவ னங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்திலிருந்து 82 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு கிளை நிறுவனங்களின் எண்ணிக்கையும் சேர்த்துப் பார்த்தால் 35 ஆயிரத்திலிருந்து 8 லட்சத்து 10 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இது மூலதனத்தின் சர்வதேச மயமாக்கலின் அபரிமிதமான வளர்ச்சியைக் காட்டுகிறது. உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான வால்மார்ட் (Walmart) நிறுவனம் 2017-ஆம் ஆண்டு 500 பில்லியன் டாலர் (41 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்) வருமானத்தைத் தாண்டியது. இது பெல்ஜி யம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி தொகையைவிட மிக அதிகம். இந்த கம்பெனியின் கிளைகளின் பொருளாதாரச் செயல் பாடுகள் உலகம் முழுவதும் பல மையங்களில் பரவியி ருந்தாலும், அதிக அளவிலான லாபம் வளர்ந்த நாடுகள் சிலவற்றுக்கு மட்டுமே சென்று சேர்கிறது. உதாரணமாக, விதை மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தின் உலகச் சந்தையை ஆறு பன்னாட்டு கம்பெனிகள் கட்டுப்படுத்துகின்றன. டூபாண்ட் (DuPont), மான்சாண்டோ (Monsanto), சின்ஜெண் டா (Syngenta), பாயர் (Bayer), டவ் (Dow), பிஎஎஸ்எப் (BASF) ஆகிய கம்பெனிகள் 2015 விவரங்களின் அடிப்படையில், 75 சதவீதம் பூச்சிக்கொல்லி மருந்தின் உலகச் சந்தையையும், 63 சதவீதம் விதைக்கான உலகச் சந்தையையும், 75 சதவீதம் உலக தனியார் ஆராய்ச்சி யையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன.
ஏகாதிபத்தியங்களுக்குள் புதிய சமன்பாடுகள்
லெனின் குறிப்பிட்ட ஐந்து இயல்புகளை நுணுக்க மாக பரிசீலித்தால் ஓர் உண்மை வெளிப்படையானது. தங்க ளது மூலதன விரிவாக்க நலன்களுக்கான போட்டியில் ஏகாதிபத்தியங்கள் மோதுவது தவிர்க்க முடியாத நிகழ்வுகளாக இருந்து வருகின்றன. அவை உல கப்போர்களாகவும் வெடித்துள்ளன. சோவியத் சிதைவுக்குப் பிறகு நிதி மூலதன ஆதிக்கச் சூழலில் ஏகாதிபத்தியங்களுக்குள் உள்ள முரண்பாடு மட்டுப்பட்டு வந்துள்ளது. இது மூலதனக் குவியலை அதிகரிக்க ஏகாதிபத்தியங்களுக்கு பயன் பட்டு வந்துள்ளது. எனினும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகளும் தொடர்ந்து வந்துள்ளன. இன்றைய சூழலில் டிரம்ப் நிர்வாகம் எடுக்கிற அடாவடி நடவடிக்கைகளை அவ்வப்போது எதிர்த்தா லும், அடங்கி நடக்க வேண்டிய கட்டாயத்தில் இதர ஏகாதிபத்திய நாடுகள் உள்ளன.
அமெரிக்கா-ஐரோப்பிய யூனியன் புதிய ஒப்பந்தம்
இதற்கு சமீபத்தில் டிரம்ப் விதித்த வரி விதிப்பை ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகள் ஏற்றுக்கொண்டு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டதை குறிப்பிடலாம். அமெரிக்கா பெரும்பாலான ஐரோப்பிய யூனியன் இறக்குமதிப் பொருட்களுக்கு 15% வரி விதிக்கும். இது இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான வரி. ஆனால் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இதற்கு பதிலடியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாது, ஐரோப்பிய யூனியன் நாடு கள் மூன்று ஆண்டுகளில் 750 பில்லியன் டாலர் (62 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்புள்ள அமெரிக்க எரிசக்தி பொருட்களை (எண்ணெய், எரிவாயு மற்றும் அணு எரிபொருள் உட்பட) வாங்க வேண்டும். இவற்றை ரஷ்யாவிடம் வாங்குவது மலிவானது. அமெரிக்காவிடம் வாங்குவதால், இந்த நாடுகள் அதிகமாக செலவிட வேண்டி இருக்கும். ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவில் 600 பில்லி யன் டாலர் (49 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்) புதிய முதலீடுகளைச் செய்யவும் உறுதியளித்துள் ளது. இதனால் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் உழைக்கும் மக்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்கள் வெட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மேலும் கூடுதல் வரிச்சலுகைகள், சிக்கனநடவடிக்கைகள் என பல பொ ருளாதாரத் தாக்குதல்களே தொடரும்.
உலகத் தொழிலாளர் நிலைமையும் இந்தியச் சூழலும்
ஐரோப்பாவைப் போலவே உலகெங்கிலும் தனது பிடியை வேறு வேறு வடிவங்களில் வலுப்படுத்திக் கொள்ள அமெரிக்க ஏகாதிபத்திய முனைப்புடன் செயல்படுகிறது. இதன் ஒரு பகுதியாகவே, குறைந்த எண்ணிக்கையிலான சில பன்னாட்டு வங்கிகள் உலகப் பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்து கின்றன. இது உழைக்கும் மக்களின் மீது கடுமை யான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கடந்த பல பத்தாண்டு களாக பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களது தொழில்களை வளரும் நாடுகளிலும், ஏழை நாடுகளிலும் அமைத்தன. அங்கு வேலையில் லாப் பட்டாளம் அதிக அளவில் இருப்பதால், குறைந்த ஊதியத்திற்கு ஆட்கள் கிடைத்து வருகின்றனர். இந்த கம்பெனிகளில் பொதுவாக குறைந்த ஊதியம், கடுமையாக வேலை வாங்குவது, அதிக வேலை நேரம், மோசமான வேலைச் சூழல் போன்ற கொடுமையான நிலைமைகள் உள்ளன. உலக அளவில், முதன்மை நிர்வாக அதிகாரி (CEO) மற்றும் சாதாரண தொழிலாளருக்கு இடையிலான ஊதிய வேறுபாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் முதன்மை நிர்வாக அதிகாரியின் ஊதியம் சாதாரண தொழிலாளியைவிட 344 மடங்கு அதிகம். ஜெர்மனியில் (Germany) 136 மடங்கு, ஜப்பானில் (Japan) 67 மடங்கு அதிகம். வங்கதேச ஆடைத் தொழிலாளர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் மட்டுமே ஊதியம் கிடைக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தொழிலாளர்க ளுக்கு கிடைப்பதுவும் இது போன்ற அற்பக் கூலி தான். அதே நேரத்தில் இந்த கம்பெனிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. அமெரிக்க கம்பெனிகளுக்கு கிடைக்கும் மொத்த லாபத்தில் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் லாபம் 1950-இல் 4 சதவீதம் மட்டுமே இருந்தது; ஆனால் 2019-இல் இது 29 சதவீதமாக உயர்ந்து, இன்று பெரும் கொள்ளை லாபமாக வடி வெடுத்துள்ளது. இந்தியாவில் 1990-களில் கொண்டுவரப்பட்ட நவீன தாராளமயம் இந்த நிலைமையை மேலும் மோச மாக்கியது. பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் பொரு ளாதாரத்தை அந்நிய பன்னாட்டு கம்பெனிகளுக்கு திறந்து விடுகிற கொள்கைகள் மேலும் வேகமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. சமீபத்திய பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, பொதுத்துறை நிறுவனங்களை உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கை உள்ளிட்டவற்றால் இந்தியத் தொழிலாளர்களின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இந்தியா தகவல் தொழில் நுட்பத் (IT) துறையில் சராசரி மாத ஊதியம் 45,000 ரூபாய் என்ற மிகக் குறைந்த ஊதியமும்; கட்டுமானத் துறையில் தினம் 10-14 மணி நேரம் கடுமையான வேலையும் எனப் பல தன்மைகளில் உழைப்புச் சுரண்டல் தீவிரமடையவே செய்துள்ளது.
சுற்றுச்சூழல் அழிவும் மானுட எதிரி ஏகாதிபத்தியமும்
ஒருபுறம் உழைப்புச் சுரண்டல் வழியாக மூலதனப் பெருக்கம்; மறுபுறம் ஏகபோக மூலதனத்தின் இலாப வேட்டை சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி மாசுபடுத்தும் நிறுவனங்கள் ஆண்டுக்கு கோடிக்கணக்கான டன் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகின்றன. சௌதி அரேம்கோ (Saudi Aramco) வருடம் 59.26 கோடி டன் கார்பன் டை ஆக்ஸைடு (CO2) உமிழ்வை ஏற் படுத்துகிறது. செவ்ரான் (Chevron) 43.35 கோடி டன், எக்ஸான் மொபில் (ExxonMobil) 41.90 கோடி டன் கார்பன்டை ஆக்ஸைடு உமிழ்வை ஏற்படுத்துகிறது. வன அழிப்பு ஆண்டுக்கு 1.19 கோடி ஹெக்டேர் என்ற அளவில் நடந்துகொண்டிருக்கிறது. பாம் எண்ணெய் தோட்டங்கள், சோயா விவசா யம், மரம் வெட்டும் தொழில் ஆகியவை இதற்குக் காரணம். வருடம் 40 கோடி டன் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியாகிறது. கடலில் 15 கோடி டன் பிளாஸ்டிக் குவிப்பு உள்ளது. இதனால் இந்த பூமிப்பந்தின் இருப்பே இன்றைக்கு கேள்விக்குறியாகியுள்ளது.
உலகளாவிய நெருக்கடியும் வறுமையும்
இந்நிலையில் இந்த நாடுகளில் உள்ள உழைக்கும் மக்கள் ஏகாதிபத்திய நாடுகளின் அரசாங்கங்க ளையும் அமெரிக்காவையும் எதிர்க்க வேண்டிய கட்டா யத்திற்கு ஆளாகின்றனர். உலக அளவில் 73.5 கோடி பேர் பசியில் உள்ளனர். 14.9 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். 20.6 கோடி வேலை செய்யும் குடும்பங்கள் வறுமையில் வாழ்கின்றன. 20 கோடிப் பேருக்கு மேல் வேலையில் லாமல் உள்ளனர். இதில் 7.3 கோடிப் பேர் இளைஞர்கள் (15-24 வயது). ஆண்டுக்கு 37.8 லட்சம் தொழிலாளர்கள் தொழில்சார் விபத்துகளில் உயிரிழக்கின்றனர். இதற்கு மாறாக சர்வதேச முதலாளித்துவ ஏகபோக கூட்டணியின் நலன்களுக்கு ஏற்ப உலக வங்கி (World Bank), சர்வதேச நிதி நிறுவனம் (Inter national Monetary Fund), உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization) போன்றவை செயல்பட்டு வருகின்றன. அமெரிக்கா தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் அங்கம் வகிக்கும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO) இராணு வக் கூட்டணி உண்மையில் ஏகபோக முதலாளித்துவ நலன்களைப் பாதுகாப்பதற்கான இராணுவக் கூட்ட ணியாகச் செயல்பட்டு வருகிறது. ஏகபோக மூலதனத்தின் நலனுக்காக தங்களு டைய நாடுகளில் நவீன தாராளமயத்தைப் பின் பற்றிய பல நாடுகளில் தற்போது இனவெறி, நிற வெறி, வகுப்புவாத வெறி போன்ற சமூகப் பிளவு ஏற் படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. வாழ்வா தாரப் பாதிப்பு, வேலையின்மை, வறுமை போன்ற ஏகா திபத்தியக் கொள்கைகளின் விளைவுகள் இப்படிப் பட்ட சமூகப்பிளவுகளுக்கு வழியமைக்கின்றன.
ஏகாதிபத்திய எதிர்ப்பே ஒரே பாதை
ஐரோப்பிய யூனியன் மட்டுமல்ல, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களுக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாதையில் செல்வதே ஒரே வழி. இதுவே இனி வரும் காலத்திற்கான முக்கிய நிகழ்ச்சி நிரல். லெனின் குறிப்பிட்டதுபோல் ஏகாதிபத்தியம் பல வகைகளில் இன்று ஒரு பெரும் அழிவு சக்தியாக உள்ளது. மனித நாகரிகத்தை அழிக்கும் இந்த கொடூரமான அமைப்பு க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்களின் வாக்குகள், முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு முறை எதுவுமே பெரும் கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்கு தடையாக இருக்க முடிய வில்லை. உண்மையில், அமெரிக்காவின் கொள்கைக ளை நிர்ணயிப்பது வால் ஸ்ட்ரீட்(Wall Street) நிதி மூல தனக் கும்பல் மற்றும் ராணுவத் தொழில் கம்பெனிகளே. இது அனைத்து முதலாளித்துவ நாடுகளுக்கும் பொருந்தும். உலகப் பாட்டாளி வர்க்கம் சோசலிச இலக்கை நோக்கி முன்னேற வேண்டும். இதற்கு மார்க்சிய-லெனினியமும், ரஷ்யப் புரட்சி வரலாறும் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டும். ரஷ்ய சோசலிசப் புரட்சி இன்றைக்கும் பல பாடங்க ளை மனித சமூகத்திற்கு கற்றுத் தருகிறது. முதலா ளித்துவம் உலகளாவிய ஒரு அமைப்பு முறையாகச் செயல்பட்டு வந்தாலும் அது சமச்சீரற்ற முறையில் வளர்கிறது. முதலாளித்துவத்தின் சமச்சீரற்ற வளர்ச்சி என்பது ஒரு விதியாகவே நிகழ்ந்து வருகிறது. மூன்றாம் உலக நாடுகளில் மக்கள் ஏகாதிபத்தி யத்திடமும் தங்கள் நாட்டு முதலாளித்துவ அரசுக ளுக்கு எதிராகவும் முரண்பட்டு வருகின்றனர். இந்த முரண்பாடுகள் முற்றி வருகின்றன. அதே நேரத்தில் வளர்ந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கங்கள் தங்கள் நாட்டு ஏகாதிபத்திய அரசுக ளுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனவே புரட்சிகர எழுச்சிக்கான வாய்ப்புகள் மங்கி விடவில்லை. மாறாக, மேலும் மேலும் சோசலி சத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாக ஆகிக் கொண்டே வருகின்றன. ஏகாதிபத்திய எதிர்ப்பை மேலும் மேலும் வலுப் படுத்துவோம்!