articles

தமிழ்நாடு சட்டமன்றம்  இன்று கூடுகிறது

தமிழ்நாடு சட்டமன்றம்  இன்று கூடுகிறது

சென்னை, அக். 13 - தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை (அக்.14) அன்று கூடுகிறது. தொடர்ந்து அக்டோபர் 17 வரை நான்கு நாட்களுக்கு சட்டமன்றக் கூட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக, சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு திங்களன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் மேலும் கூறியதாவது: சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல் நாளில் கரூர் துயரம் தொடர்பாக பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்.  மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், சட்டமன்றப் பேரவை உறுப்பினர் டி.கே. அமுல் கந்தசாமி ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். அக்டோபர் 15 அன்று, 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும். அடுத்த நாள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். அக்டோபர் 17 அன்று விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலுரை அளிப்பார். அதே நாளில் வாக்கெடுப்பு நடத்தப்படும். மேலும், நிதி ஒதுக்கீட்டு சட்டமுன்வடிவு அறிமுகம் செய்யப்படும். ஏனைய சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.