articles

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூரில் ஷேல் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதா?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூரில் ஷேல் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதா?

சென்னை, செப்.22 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:  விவசாயிகளின் தீரம்மிக்க போராட்டங்களால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் பட்ட பகுதியில் ஒன்றிய அரசின் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மீத்தேன்,  ஷேல்கேஸ், டைட் கேஸ் உள்ளிட்ட எந்த இயற்கை எரிவாயு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஓஎன்ஜிசி-யின் கிணறுகள் மட்டுமே செயல்பட முடியும். இதற்குரிய பராமரிப்புகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.  இந்நிலையில் 2024-25-க்கான ஒன்றிய எரிசக்தி இயக்குநரகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மாவட்டம், பெரியகுடி-3, திருவாரூர்-31, அன்னவாசநல்லூர்- 4 ஆகிய மூன்று இடங்களில் ஷேல் ஆய்வு கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ளது. இதை, முழுக்க முழுக்க பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை மீறி ஓஎன்ஜிசி செயல்படுத்தியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ  கார்பன் உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்க மாட்டோம் என நாடாளுமன்றத்தில் உறுதியளித்த ஒன்றிய அரசு, அதற்கு மாறாக எப்படி ஓஎன்ஜிசி ஆய்வு கிணறு அமைக்க அனுமதி கொடுத்தது என்று  ஒன்றிய அரசு விளக்கிட வேண்டும். மேலும் மாநில அரசிடம் எந்தவித அறி விப்போ, அனுமதியோ கேட்கா மலேயே கடந்த மாதம் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது. விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு பிறகு, எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை செயல்படுத்த மாநில அரசு அனுமதிக்காது என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஒன்றிய அரசும், எரிசக்தி துறையும் தொடர்ந்து தமிழ்நாட்டில் இப்படி அறிவிப்புகள் வெளியிட்டு மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை மீறி ஓஎன்ஜிசி நிறுவனம் ஷேல் ஆய்வு கிணறு அமைத்துள்ளதை மாநில அரசு தடை செய்ய வேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில அரசை வலியுறுத்துகிறோம்.  ஓஎன்ஜிசி நிறுவனம் ஷேல் ஆய்வுக் கிணறு அமைத்துள்ள தைக் கண்டித்து செப்டம்பர் 23  (செவ்வாய்க்கிழமை) அன்று திரு வாரூர் மாவட்டம் வெள்ளக்குடியில் உள்ள ஓஎன்ஜிசி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.