articles

img

எங்கிருந்தோ வந்தார் ஒளிவிளக்காய் திகழ்ந்தார் - தி சீனிவாசன்

எங்கிருந்தோ வந்தார்  ஒளிவிளக்காய் திகழ்ந்தார்

“சிகப்பு காக்கி டிரவுசர், வெள்ளை  சட்டை, கையில் மஞ்சள் பை - அதில் டைரி மற்றும் பல. எங்கே போனாலும் மக்கள் கூடிவிடுவார்கள். குழந்தைகளைப் பார்த்து ‘எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி, தலைசீவி, முடிவெட்டி வையுங்கள் - சுகாதாரமாக இருக்க வேண்டும்’ என்று பெற்றோரிடம் பேசுவார். எல்லாவற்றிற்கும் மேலாக, பட்டியலின மக்கள் வீட்டில் தண்ணீர் கேட்பார். மண்சட்டி, களிமண் பாத்திரம் மட்டுமே இருக்கும் அந்த வீடுகளில், இவர் பெரிய சாதி என்று எண்ணி மக்கள் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். ஆனால் பி.எஸ்.ஆர் விடமாட்டார். ‘மண்பானையில் சமைப்பதும், சுத்தமாக கழுவி  வைப்பதும் தான் உண்மையான சுகாதாரம்’ என்பார்.”  - திருத்துறைப்பூண்டி எம்.வேதையன்  வாய்மொழியாக எழுத்தாளர் அப்பணசாமி யிடம் கூறியது - ‘தென்பரை முதல் வெண்மணி வரை’ நூலிலிருந்து) ‘பிஎஸ்ஆர்’ என அழைக்கப்பட்ட தோழர் பி.சீனிவாசராவ் அவர்களை மக்கள் தெய்வமாகப் பார்த்தார்கள். “எங்கிருந்தோ வந்தான், எங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டான், எங்கள் அடிமை வாழ்வு விடிய ஒளி விளக்காய் திகழ்ந்தான்” என்று பட்டியலின மக்கள் போற்றினார்கள். ‘குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக்காம்பு’ பி.சீனிவாசராவ் கர்நாடக மாநிலம் தென்கனரா பகுதியில் பிராமணக் குடும்பத்தில் 1907 ஏப்ரலில் பிறந்தார். காந்தியடிகளின் அழைப்பை ஏற்று கல்லூரிப் படிப்பை துறந்து விடுதலை இயக்கத்தில் இணைந்தார். அந்நிய ஜவுளிக் கடை முன்பு மறியல் செய்த போது, போலீசார் கடுமையாக தாக்கி சாக்கடையில் வீசினார்கள். இரண்டு நாள் கழித்து மீண்டும் மறியலில் நின்றார். இதைக் கண்ட மக்கள் ஆவேசமடைந்து கதர் கடையில் துணி வாங்கினார்கள். பின்னர் சிறையில் ஹைதர் அமீர்கானைச் சந்தித்து கம்யூனிஸ்டானார். கட்சி உத்தரவை ஏற்று கீழத்தஞ்சைக்கு வந்தார். தமிழக கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவரானார். சாதிய ஒடுக்குமுறையும், தீண்டாமை கொடூர மும், வர்க்கச் சுரண்டலும் ஒருங்கே இணைந்த  பண்ணை அடிமை அமைப்பு நிலவிய கீழ் தஞ்சையில் விவசாய இயக்கத்தை கட்டி னார். பிராமண குலத்தில் பிறந்தவர், பிராமணியத்திற்கு எதிராகப் போராடினார் - “குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக்காம்பு” என்றனர் சனாதனவாதிகள். தாழ்த்தப் பட்டோரோ “எங்கள் விடிவெள்ளி பி.எஸ்.ஆர்” என்று இதயத்திலிருந்து அழைத்தனர். அத்தகைய மகத்தான தலைவர் பிஎஸ்ஆர், 1961 செப்டம்பர் 30இல் திருத்துறைப்பூண்டியில் 54 வயதில் மறைந்தார்.  அவர் ஆற்றிய சாதனைகள் கீழத் தஞ்சையின் பெரும்பான்மை கிராமங் களில் செங்கொடி பறக்கச் செய்தார். பண்ணை அடிமைத்தனம் ஒழிந்தது. கொடூரமான தீண்டாமை பெருமளவு மறைந்தது. பண்ணை அடிமைகளாக இருந்த பி.எஸ்.தனுஷ்கோடி, எம்.செல்லமுத்து, வி.தம்புசாமி போன்றோர் சட்டமன்ற உறுப்பினர்களானார்கள். 1952 முதல் தேர்தலில் சென்னை மாகாணத்தில் 63 இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது - இதில் தமிழகத்தில் 13 இடங்கள். இந்த வெற்றியின் ரகசியம்: “பொருளாதார சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன், சாதிய கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தையும் நடைமுறையில் இணைந்து நடத்தியது தான்  கீழத் தஞ்சை செங்கொடி இயக்கத்தின் - பி.எஸ். ஆரின் தியாக வாழ்வின் மிகப் பெரும் சிறப்பு”   என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கே.வரதராசன். இன்றைய பாதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு மனிதர் இரண்டு கால்களாலும் நடப்பது போல், சாதிய- சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை யும், வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தையும் ஒருசேர நடத்தி முன்னேற வேண்டும் என்று வழிகாட்டுகிறது. இந்த அடிப்படையில் தான் செப்டம்பர் 30, 2025 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மும், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கமும் வீட்டு மனைக்கான போராட்டத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்துகின்றன. அதே நேரத்தில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி நிலவும் தீண்டாமை கொடுமை களுக்கு எதிராக நேரடி களநடவடிக்கையில் ஈடுபடுகிறது. இத்தகைய போராட்டங்களின் நீட்சியில் மக்கள் ஜனநாயகப் புரட்சி வெல்லட்டும். சோச லிசத்திற்கான புரட்சிப் பாதையில் அயராது முன்செல்வோம்! - தி.சீனிவாசன்   தூத்துக்குடி மாவட்டத் தலைவர்,   தீண்டாமை ஒழிப்பு முன்னணி