articles

img

தமிழ்நாட்டில் ஆயுஷ் கட்டமைப்பை மேம்படுத்த ஆர். சச்சிதானந்தம் எம்.பி., வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஆயுஷ் கட்டமைப்பை மேம்படுத்த  ஆர். சச்சிதானந்தம் எம்.பி., வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்  ஆர்.சச்சிதானந்தம், மத்திய ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) துறை இணை அமைச்சர்  ஸ்ரீ ஜாதவ் பிரதாப்ராவ் கண்பத்ராஜியை புதுதில்லியில் டிச.10 புதனன்று  சந்தித்து, தமிழ்நாட்டில் ஆயுஷ் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்தக்கோரி விரிவான கோரிக்கை மனுவை வழங்கினார். 

சமீபத்தில் தமிழ்நாட்டு மருத்துவ அலுவலர்கள் மற்றும் சிகிச்சையாளர்கள் நல அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை கடிதங்களையும் இணைத்து, தமிழ்நாட்டில் ஆயுஷ் முறைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் அவசியம் மற்றும்  அவற்றின் பயன்களை எடுத்து ரைத்தார். குறிப்பாக, ஆங்கில மருத்துவத்தின் செலவினங்கள் அதிகரித்து வருவதால், ஆயுஷ் மருத்துவ முறைகள் மக்களுக்குக் குறைந்த செலவில் சுகாதாரப் பாதுகாப்பை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 

முக்கியக் கோரிக்கைகள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், தமிழ்நாடு ஆயுர்வேத மருத்துவ அலுவலர்கள் சங்கம் எழுப்பிய பின்வரும் முக்கியக் கோரிக்கைகளை அமைச்சரிடம் சமர்ப்பித்தார்:  முதுநிலைக் கல்வி மேம்பாடு: ஆயுஷ் மருத்துவப் படிப்புகளில் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முதுகலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.  

ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சை: நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆயுஷ் மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த (Integrated) ஆயுஷ் சிகிச்சையை உறுதி செய்வதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

 மண்டல பஞ்சகர்மா மையங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களில் ஆராய்ச்சி வசதிகளுடன் மண்டல பஞ்சகர்மா மையங்களை (Zonal Panchakarma Centres) நிறுவ வேண்டும்.  தேசிய அளவிலான நிறுவனங்கள்: தமிழ்நாட்டில் ஆயுஷ் மருத்துவ முறைகளை மேம்படுத்துவதற்காக தேசிய அளவிலான நிறுவனங்களை (National level institutes) அமைக்க வேண்டும்.  மருந்து உரிமம் வழங்கும் அதிகாரம்: ஆயுர்வேதம் மற்றும் சித்தா போன்ற குறிப்பிட்ட மருந்துகளுக்கான உரிமம் வழங்கும் அதிகாரிகளை (System Specific Drug Licencing Authorities) நியமிக்க வேண்டும்.

 இஎஸ்ஐ மருத்துவமனைகளில் விரிவாக்கம்: ஊழியர் அரசு ஈட்டுறுதி (ESI) மருத்துவமனைகளில் ஆயுர்வேத சிகிச்சை சேவைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். இது பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கும் இஎஸ்ஐ பயனாளிகளுக்கும் மிகுந்த பலனளிக்கும்.  ரயில்வே மருத்துவமனைகளில் சேவை: ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இரயில்வே மருத்துவமனைகளில் ஆயுஷ் மருத்துவ சேவைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

 பஞ்சகர்மா ஆரோக்கிய மையம்: அதிகரித்து வரும் பல்வேறு துறைசார் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பஞ்சகர்மா ஆரோக்கிய மையத்தை (Panchakarma Wellness Centre) நிறுவ வேண்டும்.   நடமாடும் ஆயுஷ் பிரிவுகள்: கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்குச் சேவை செய்ய நடமாடும் ஆயுஷ் மருத்துவப் பிரிவுகளை (Mobile Ayurveda Units) அறிமுகப்படுத்த வேண்டும்.  மருத்துவத் தாவரத் தோட்டம்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் (Sirumalai) மூலிகைச் செடிகளுடன் கூடிய மருத்துவத் தாவரத் தோட்டம் / பூங்காவை அமைக்க வேண்டும்.

இராமாயணக் கால சஞ்சீவி மலையின் ஒரு பகுதியாகச் சிறுமலை கருதப்படுவதால், இது மூலிகை மருத்துவ ஆய்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.  இந்தக் கோரிக்கைகளை விரைவில் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்ட சச்சிதானந்தம், எம்.பி., இம்முயற்சிகள் தமிழ்நாட்டு மக்களுக்கும், குறிப்பாக வழக்கமான  மருத்துவச் சிகிச்சையைப் பெறுபவர்களுக்கும் பெரும் பயன்களை அளிக்கும் என்று வலியுறுத்தினார்.