articles

img

வடசென்னை பகுதி கொரோனா நோயாளிகளுக்கு வாலிபர் சங்கத்தினரின் இடையறா உதவிப் பணிகள்...

மனித மேம்பாட்டிற்கான தடைகளையும், பண்பாட்டு வளர்ச்சிக்கான தடங்கலையும் தகர்த்து எறிபவர்கள்தான் இளைஞர்கள். அப்படிப்பட்ட இளைஞர்களை கொண்டதுதான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.வாலிபர் சங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் உயிரை துச்சமென மதித்து கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ உதவி, ஆம்புலன்ஸ் சேவை, ஆதரவற்றவர்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குதல் என கடந்த 30 நாட்களுக்கும் மேலாக வடசென்னை பகுதிகளில் சேவையாற்றி வருகின்றனர்.

கொரோனா பெரும் தொற்றின் 2ஆவது அலை சென்னை நகரில் வேகமாக பரவியது. ஏராளமான நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காததால், ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, கேஎம்சி ஆகிய அரசு மருத்துவமனைகளின் வாயில்களில் ஆம்புலன்ஸ் வாகனம் வரிசையில் நின்றதையும், உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் நோயாளிகளையும் சில வாரங்களுக்கு முன்பு காண முடிந்தது. பல லட்ச ரூபாய் செலுத்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் கூட, அவர்கள் ஆபத்தான நிலையை எட்டும் போது, தனியார் மருத்துவமனை நிர்வாகம் அந்த  நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவங்களும் நடைபெற்றன.

இலவச ஆக்சிஜன் ஆட்டோ ஆம்புலன்ஸ்
இந்தச் சூழலில்தான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆக்சிஜன் பொருத்திய ஆட்டோவையும், நோயாளிகளுக்கான ஆட்டோவையும் இயக்கினர். மேலும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டதாலும், பெரும்பாலான அரசு ஆம்புலன்சுகள் கொரோனா நோயாளிகளுக்காக மாற்றப்பட்டதாலும், கொரோனா தொற்று பாதிக்காத கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட பிற நோயாளிகளுக்கு என தனி ஆட்டோக்களையும் இயக்கினர்,முதலில் ஆர்.கே. நகர் பகுதியில் துவங்கிய இந்த சேவை பின்னர் பெரம்பூர், திரு.வி.க. நகர், ராயபுரம் என வடசென்னை முழுவதும் பரவியது. ஆர்.கே. நகர் தோழர்களின் முன் முயற்சியால் இலவச ஆக்சிஜன் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது. ஆர்.கே.நகர், பெரம்பூர், திரு.வி.க. நகர் ஆகிய பகுதிக் குழுக்களின் முயற்சியால் மொத்தம் 7 ஆட்டோ ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகின்றது. இதில் 3 ஆம்புலன்ஸ் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகின்றது.

3 ஆம்புலன்ஸ் கர்ப்பிணிப் பெண்களை பிரசவத்துக்காக அழைத்து வருவதற்கும், பிரசவம் முடிந்து வீடுகளில் கொண்டு சேர்க்கவும் பயன்பட்டு வருகின்றது. மேலும் ஒரு ஆட்டோ ரத்தக் கொடையாளர்களை ரத்த வங்கிகளுக்கு அழைத்து செல்ல பயன்பட்டு வருகின்றது. இச்சேவையை மாவட்டக் குழுவின் சார்பில் மக்கள் உதவி மையம் ஒருங்கிணைத்து வருகின்றது.வாலிபர் சங்கத்தின் இந்த பணி பொதுமக்கள் மரியாதையை பெற்றுள்ளதால் எவ்வித இடையூறும் இல்லாமல் ஆம்புலன்ஸ் சேவை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. ஆர்.எஸ்.ஆர்.எம், ஸ்டான்லி மற்றும் காலரா மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு முழுமையாக பயன்பட்டுள்ளது. ஒரு சில தேவைக்காக பிற மருத்துவமனைகளுக்கும் சென்று வந்துள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இதர நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர்.இந்தப் பணியில் வாலிபர் சங்க ஊழியர்கள் விஜயகுமார், ஜபருல்லா, ஜூகைப் முஜாகித், கந்தா, லோகையா, ஷாஜகான், அனிதா, வெண்மணி, பரத், வம்சி ஆகியோர் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

ரத்த தானம்
முழு பொது முடக்க காலத்தில் இ - பாஸ் உள்ள நிலையிலும், ஸ்டான்லி மருத்துவமனையில் 30 பேரும், ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் 33 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 14 பேரும் தனியார் மற்றும் பிற மருத்துவ மனைகளில் 40 பேரும் ரத்ததானம் செய்துள்ளனர். கொரோனா தொற்று 2 ஆவது அலை தொடங்கியதில் இருந்து இதுவரை 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் ரத்ததானம் செய்துள்ளனர்.

கிருமிநாசினி தெளிப்பு
பொது முடக்க காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் சூழ்நிலையிலும் இளைஞர்கள் 2 கிருமிநாசினி தெளிப்பு இயந்திரம் வாங்கி, அரசு அலுவலகங்கள், வங்கிகள், காவல் நிலையங்கள், நோய் தொற்று பாதித்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தடுப்பூசி முகாம்
பெருமாநகராட்சியும் - வாலிபர் சங்கமும் இணைந்து நடத்திய தடுப்பூசி முகாம் ஆர்.கே. நகர் வ.உ.சி. நகர் வாலிபர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுமக்களிடம் ஆட்டோ வழியாக மைக் பிரச்சாரம் செய்து. தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் விளைவாக ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

ஆதரவற்றோருக்கு உணவு
முதியோர், ஆதரவற்றோர், சாலையோரம் வசிப்பவர்களின் ஊரடங்கு கால துன்பத்தில் பங்கெடுக்கும் வகையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திருவொற்றியூர் பகுதிக்குழு - 8 நாட்களாக 1810 பேருக்கு உணவு வழங்கியுள்ளது. பெரம்பூர் பகுதியில் 6 நாட்களாக  4500 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. திரு.வி.க.நகர் பகுதியில் 8 நாட்களாக 1100 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. ஆர்.கே. நகரில் 4 நாட்களாக 600 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மணலி பகுதியில் 20 பேருக்கு உணவுப் பொருட்களும், 30 பேருக்கு உணவும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 8,010 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.திருவொற்றியூரில் சுபாஷ், புவியரசி, நாகராஜ், பாரதி, ரூபன், கிராமத்தெரு கிளை தோழர்கள் லெனின்,கிரி,நாகா,விக்னேஷ், முருகன் பெரம்பூர் சுபாஷ், கிஷோர், திரு.வி.க.நகர் விஜயா, மணி சுந்தரம், டில்லிபாபு, கோவிந்தராஜ், ஜோசப், யசார், ஜலால், சையத் மாஸ், இம்ரான், கைஃப், நதீம் ஆகியோர் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிற பணிகள்
ஆ.கே. நகர் 200, இராயபுரம் - 500, திரு.வி.க. நகர் 350 என மொத்தம் 1,050 பேருக்கு மேல் கபசுரக் குடிநீர் வழங்கியுள்ளனர்.படுக்கை வசதிகள் குறித்த தகவலை தெரிவிப்பது. நோயாளிகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுப்பது. மருத்துவமனை அட்மிஷனுக்கு உதவுவது ஆகிய பணிகளையும் முன்னெடுத்தனர். வறுமையில் உள்ள சிலரின் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

பொதுமக்கள் உதவி
பேரிடர் காலங்களில் உதவியது போல் நண்பர்கள், இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என பலதரப்பினரும் இந்த சேவைக்கு உதவி செய்தனர். மேலும் முகம் தெரியாத சில நபர்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்து, நிதி வழங்கியுள்ளனர்.புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி அம்ருதா, மாணவன் அபிஷேக் ஆகியோர் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை மக்கள் உதவி மையத்துக்கு வழங்கியுள்ளனர். ஜீவா நகரைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க குப்பம்மாள் என்பவர் அரசு கொடுத்த நிவாரண நிதி ரூபாய் இரண்டாயிரத்தை மக்களின் உயிர்காக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அளித்துள்ளார்.

மக்கள் உதவி மையம்
வாலிபர் சங்கத்தின் மக்கள் உதவி மையத்தை மாநில துணைத்தலைவர் கார்த்திஷ் குமார், ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த உதவி மையத்தின் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு, பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும், தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கும் மருத்துவர் மூலம் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. எந்தெந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன போன்ற தகவல்களும் நோயாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டன.

இந்த பணிகளில் மாவட்டத் தலைவர் கார்த்தீஷ் குமார், மாவட்ட பொருளாளர் ச.முருகேசன் மாவட்ட நிர்வாகிகள் அ.விஜய்,ஆர்.ஸ்டாலின், ஜி.நித்தியராஜ், டி.பாலாஜி, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ராஜா, தமிழ்ச்செல்வி, ரியாஸ், சுபாஷ் உள்பட 100 க்கும் மேற்பட்ட வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் பணியாற்றி வருகின்றனர்.தன்னார்வலர்களுக்கென சென்னையில் தனியாக பாஸ் எதுவும் வழங்கப்படாத சூழ்நிலையிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களின் இடைவிடாத பணி மகத்தானது என்றால் அது மிகையல்ல.

தொகுப்பு ; எஸ்.ராமு