articles

img

விவசாயத் தொழிலாளர் இயக்கத்தின் மகத்தான தலைவர் நித்யானந்த சுவாமி மறைவு

விவசாயத் தொழிலாளர் இயக்கத்தின் மகத்தான தலைவர் நித்யானந்த சுவாமி மறைவு

அஇவிதொச மத்திய செயற்குழு செவ்வணக்கம்! பெங்களூரு, மார்ச்  4 - அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் (அஇவிதொச) அகில இந்தியத் துணைத் தலைவரும், கர்நாடக மாநிலத்தின் மூத்த புரட்சிகரப் போராளியுமான நித்யானந்த சுவாமி (77), மார்ச் 2 அன்று காலை பெங்களூருவில் காலமானார். நீண்டகாலமாக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரது மறைவு, இந்தியாவின் தொழிலாளி வர்க்கம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இது தொடர்பாக அஇவிதொச அகில இந்தியத் தலைவர் ஏ. விஜயராகவன் மற்றும் பொதுச் செயலாளர் பி. வெங்கட் ஆகியோர் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில், நித்யானந்த சுவாமியின் ஈடு இணையற்ற தியாகங்கள் மற்றும் போராட்டப் பயணத்தை நினைவுகூர்ந்துள்ளனர். மதப் போதனையிலிருந்து  மக்கள் களத்திற்கு! 1949 ஆகஸ்ட் 25 அன்று உடுப்பி மாவட்டம் கல்யாண்பூரில் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த நித்யானந்த சுவாமி, முறைப்படி கல்வி பயின்று ஒரு மதப் போதகராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இருப்பினும், 1980-களில் கர்நாடகாவில் வெடித்த நரகுண்ட்-நவல்குண்ட் விவசாயிகள் போராட்டங்கள் அவரது மனசாட்சியை உலுக்கின. அநீதியான வரிவிதிப்பு மற்றும் அரசு ஒடுக்குமுறைக்கு எதிராக விவசாயிகள் நடத்திய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டங்கள், அவரை ஒரு புதிய திசைக்கு இட்டுச் சென்றன. இதன் விளைவாக, பிரசங்க பீடங்களிலிருந்து இறங்கி, மண்ணின் மைந்தர்களான விவசாயத் தொழிலாளர்களின் விடிவிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். ஞானகிராணா: அறிவாயுதம் ஏந்திய மையம் சவுந்தட்டியில் அவர் நிறுவிய “ஞானகிராணா” கல்வி மையம் வெறும் பள்ளியாக மட்டுமல்லா மல், மாணவர் மற்றும் தொழிலாளர் எழுச்சியின் மையமாகத் திகழ்ந்தது. ஏழை மாணவர்களுக்குத் தரமான கல்வியை இலவசமாக வழங்கியதோடு, நூற்றுக்கணக்கான இளைஞர்களைச் சமூக உணர்வுள்ள போராளிகளாக அவர் செதுக்கி னார். இன்று நாட்டின் பல்வேறு உயர் பதவிகளில் இருக்கும் பலர் இவரால் உருவாக்கப்பட்டவர்களே. பீடி தொழிலாளர்கள் மற்றும் விடுதி ஊழியர்களை அணிதிரட்டி அவர்களின் உரிமைகளுக்காகப் பல வெற்றிகரமான போராட்டங்களை அவர் முன்னெடுத்தார். நில உரிமைப் போரும் சிறைவாசமும் காவேரி மாவட்டம் ஹனகல் தாலுகாவில் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு நில உரிமைகளைப் பெற்றுத்தரப் போர்க் குணமிக்கப் போராட்டங்களை வழிநடத்தினார். இதற்காகப் பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில் நூற்றுக்கணக்கான உழைப்பாளி மக்களுடன் சேர்ந்து அவர் சிறைத் தண்டனை அனுபவித்தார். அஇவிதொச மாநிலத் தலைவராகப் பணியாற்றியபோது, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம், வேலை உறுதித் திட்டம் (MGNREGA) போன்ற கோரிக்கைகளுக்காகத் தொடர்ச்சியான மாநில அளவிலான போராட்டங் களுக்குத் தலைமை தாங்கினார். சமூகச் சீர்திருத்தவாதி சாதி ஒழிப்பு மற்றும் சமூகச் சமத்துவத்தில் மிகுந்த அக்கறை கொண்ட அவர், சாதி கலப்புத் திருமணங்களை முன்னின்று நடத்தினார். மனிதாபிமானமற்ற தேவதாசி முறையை எதிர்த்துக் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தனது  இயக்கத்தையே தனது குடும்பமாகக் கருதி, மிகவும் எளிய வாழ்க்கையை வாழ்ந்து மறைந்துள்ளார். தலைவர்கள் அஞ்சலி மறைந்த நித்யானந்த சுவாமியின் இறுதி நிகழ்வில் அஇவிதொச மத்திய செயற்குழு சார்பில், தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, அஇவிதொச அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ. லாசர் உள்ளிட்ட தலைவர்கள் தங்க ளது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். நித்யானந்த சுவாமியின் புரட்சிகர மரபை முன்னெடுத்துச் செல்வதே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி எனச் சங்கத்தின் மத்திய செயற்குழு தெரிவித்துள்ளது.